கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார்
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே
மிடல் உற்ற கலவிக்குள் உள(ம்) நச்சி வளம் அற்று மிடி பட்டு மடி பட்டு மன(ம்) மாழ்கி
மெலிவு உற்ற தமியற்கு உ(ன்)னிரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்துடைய துட்டன் உயிர் போக
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே
திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே
செழு நத்து உமிழு(ம்) முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே.
கடல், விஷம், அம்பு, மான், கயல் மீன், தாமரை மலர் ஆகியவற்றை ஒத்ததாகிய கண்களை உடைய விலைமாதர்களின் பொன் சிமிழ், தாமரையின் மொட்டு, மலை ஆகியவைகளுக்குச் சமம் என்று சொல்லப்படுவதும், ஒளி கொண்ட முத்து மாலை அணிந்ததுமான மார்பகம் மனத்தில் அழுந்திப் பதிய, அந்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் வலிமை வாய்ந்த புணர்ச்சி இன்பத்தை உள்ளம் விரும்பி, செல்வம் இழந்து வறுமை அடைந்து சோம்பல் மிகுந்து, மனம் மயங்கி அழிந்து மெலிவு அடைந்த தனியனாகிய எனக்கு உன்னுடைய இரண்டு திருவடிக் கமலங்களை மிக அன்புடன் அருள்வதற்கு வருவாயாக. தடையில்லாத அம்பைச் செலுத்தி, மணி, வைரம் இவை பதிக்கப்பட்ட கிரீடத்தைக் கொண்ட பத்து தலைகளை உடைய துஷ்டனாகிய ராவணனுடைய உயிரைப் போகச் செய்து, தாமரையில் வீற்றிருக்கும் மயில் போன்ற சீதையை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து வெற்றியைக் கொண்டவனும் (ஆகிய ராமனான) சக்ராயுதம் ஏந்திய திருமாலுக்கு மருகனே, மெய்ம்மை வாய்ந்த தில்லைக் கனக சபையில் (பதஞ்சலி, வியாக்ரபாதர் மீதுள்ள) நட்பின் காரணமாக நடனம் செய்த சிவபெருமானுக்கு கண் போன்ற இனிய மகனே, செழிப்புள்ள சங்கு ஈன்ற முத்துக்கள் வயலில் நிறைந்து விளங்கும் எட்டிகுடியில் வீற்றிருக்கும் பெருமாளே.
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார் ... கடல், விஷம், அம்பு, மான், கயல் மீன், தாமரை மலர் ஆகியவற்றை ஒத்ததாகிய கண்களை உடைய விலைமாதர்களின் கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே ... பொன் சிமிழ், தாமரையின் மொட்டு, மலை ஆகியவைகளுக்குச் சமம் என்று சொல்லப்படுவதும், ஒளி கொண்ட முத்து மாலை அணிந்ததுமான மார்பகம் மனத்தில் அழுந்திப் பதிய, அந்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் மிடல் உற்ற கலவிக்குள் உள(ம்) நச்சி வளம் அற்று மிடி பட்டு மடி பட்டு மன(ம்) மாழ்கி ... வலிமை வாய்ந்த புணர்ச்சி இன்பத்தை உள்ளம் விரும்பி, செல்வம் இழந்து வறுமை அடைந்து சோம்பல் மிகுந்து, மனம் மயங்கி அழிந்து மெலிவு உற்ற தமியற்கு உ(ன்)னிரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே ... மெலிவு அடைந்த தனியனாகிய எனக்கு உன்னுடைய இரண்டு திருவடிக் கமலங்களை மிக அன்புடன் அருள்வதற்கு வருவாயாக. தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்துடைய துட்டன் உயிர் போக ... தடையில்லாத அம்பைச் செலுத்தி, மணி, வைரம் இவை பதிக்கப்பட்ட கிரீடத்தைக் கொண்ட பத்து தலைகளை உடைய துஷ்டனாகிய ராவணனுடைய உயிரைப் போகச் செய்து, சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே ... தாமரையில் வீற்றிருக்கும் மயில் போன்ற சீதையை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து வெற்றியைக் கொண்டவனும் (ஆகிய ராமனான) சக்ராயுதம் ஏந்திய திருமாலுக்கு மருகனே, திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே ... மெய்ம்மை வாய்ந்த தில்லைக் கனக சபையில் (பதஞ்சலி, வியாக்ரபாதர் மீதுள்ள) நட்பின் காரணமாக நடனம் செய்த சிவபெருமானுக்கு கண் போன்ற இனிய மகனே, செழு நத்து உமிழு(ம்) முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே. ... செழிப்புள்ள சங்கு ஈன்ற முத்துக்கள் வயலில் நிறைந்து விளங்கும் எட்டிகுடியில் வீற்றிருக்கும் பெருமாளே.