சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய்
வெகுவாய் வெகு பாஷை கொள் தொடர்புமாய்
அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்
துறவுமாய் அறமாய் நெறியாய்
மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் சுகமுமாய்
முகிலாய் மழையாய் எழுசுடர் வீசும் பருதியாய் மதியாய்
நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய்
எழு பகல் இராவு இலையாய் நிலையாய்
மிகு பரமாகும் பரம மாயையின் நேர்மையை
யாவரும் அறிய ஒணாததை
நீ குருவாய் இது பகருமாறு செய்தாய்
முதல் நாள் உறு பயனோ தான்
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை
கருத ஒணா வகை
ஓர் அரசாய் வரு கவுணியோர் குல வேதியனாய்
உமை கன பார களப பூண் முலை ஊறிய பால் உ(ண்)ணு மதலையாய்
மிகு பாடலின் மீறிய கவிஞனாய் விளையாடு இடம்
வாதிகள் கழுவேற குருதி ஆறு எழ
வீதி எ(ல்)லாம் மலர் நிறைவதாய் விட
நீறு இடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா
முனை குலையா வான் குடி புகீர் என
மா மதுரா புரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே.
வேதமாய், இயல் தமிழாய், அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான பகுதியாய், பலவுமாய், பல மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தமுமாய், அடிப்படையாய், நடுப்பாகமாய், மிக்க துணையாய், பின்னும் அனைத்தையும் துறந்த நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய், மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிறைந்த ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும் சூரியனாய், சந்திரனாய், நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய் ஜோதியாய், உண்டாகின்ற பகலும் இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய், மிக்க மேலான பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவத்தை, எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய். (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ? யாவராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து), (சீகாழிப்பதியின்) அரசாக வந்த கவுணிய குல அந்தணனாகி, பார்வதியின் மிக்க பாரமான, கலவைச் சாந்து அணிந்த மார்பில் சுரந்த பாலைப் பருகிய குழந்தையாகி (திருஞானசம்பந்தனாகி), மிக்க பாடல்கள் (தேவாரம்) பாடுவதில் மேம்பட்ட கவித் திறன் பெற்றவனாய் திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழுவில் ஏறவும், அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும், தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும், திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து, முன்பு கொடியவனாக இருந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் கூன்பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், (சமண்) பகையை அழித்து, பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என சிறந்த மதுரையின் முன்னிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து, திருக்குடவாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வு கொண்டு வீற்றிருக்கும் பெருமாளே.
சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் ... வேதமாய், இயல் தமிழாய், அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான பகுதியாய், வெகுவாய் வெகு பாஷை கொள் தொடர்புமாய் ... பலவுமாய், பல மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தமுமாய், அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல் ... அடிப்படையாய், நடுப்பாகமாய், மிக்க துணையாய், பின்னும் துறவுமாய் அறமாய் நெறியாய் ... அனைத்தையும் துறந்த நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய், மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள் சுகமுமாய் ... மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிறைந்த ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், முகிலாய் மழையாய் எழுசுடர் வீசும் பருதியாய் மதியாய் ... மேகமாய், மழையாய், ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும் சூரியனாய், சந்திரனாய், நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் ... நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய் ஜோதியாய், எழு பகல் இராவு இலையாய் நிலையாய் ... உண்டாகின்ற பகலும் இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய், மிகு பரமாகும் பரம மாயையின் நேர்மையை ... மிக்க மேலான பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவத்தை, யாவரும் அறிய ஒணாததை ... எவரும் அறிய முடியாததை, நீ குருவாய் இது பகருமாறு செய்தாய் ... நீ குருவாக வந்து (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய். முதல் நாள் உறு பயனோ தான் ... (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ? கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை ... யாவராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை கருத ஒணா வகை ... எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து), ஓர் அரசாய் வரு கவுணியோர் குல வேதியனாய் ... (சீகாழிப்பதியின்) அரசாக வந்த கவுணிய குல அந்தணனாகி, உமை கன பார களப பூண் முலை ஊறிய பால் உ(ண்)ணு மதலையாய் ... பார்வதியின் மிக்க பாரமான, கலவைச் சாந்து அணிந்த மார்பில் சுரந்த பாலைப் பருகிய குழந்தையாகி (திருஞானசம்பந்தனாகி), மிகு பாடலின் மீறிய கவிஞனாய் விளையாடு இடம் ... மிக்க பாடல்கள் (தேவாரம்) பாடுவதில் மேம்பட்ட கவித் திறன் பெற்றவனாய் திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வாதிகள் கழுவேற குருதி ஆறு எழ ... வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழுவில் ஏறவும், அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும், வீதி எ(ல்)லாம் மலர் நிறைவதாய் விட ... தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும், நீறு இடவே செய்து ... திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து, கொடிய மாறன் மெய் கூன் நிமிரா ... முன்பு கொடியவனாக இருந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் கூன்பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், முனை குலையா வான் குடி புகீர் என ... (சமண்) பகையை அழித்து, பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என மா மதுரா புரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து ... சிறந்த மதுரையின் முன்னிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து, குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே. ... திருக்குடவாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வு கொண்டு வீற்றிருக்கும் பெருமாளே.