வரித்த குங்குமம் அணி முலைக் குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட
அதி விதமான வளைக்கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க(ம்) வந்ததில் அறிவு அழியாத கருத்து அழிந்திட
இரு கயல் க(ண்)ணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் கருப் பெரும் கடல் அது கடக்க
உன் திருவடிகளைத் தரும் திரு உள்ளம் இனி ஆமோ
பொருப்பு அகம் பொடி பட அரக்கர் தம் பதியோடு புகைப் பரந்த எரி எழ விடும் வேலா
புகழ்ப் பெரும் கடவுளர் களித்திடும் படி புவி பொறுத்த மந்தர கிரி கடல் ஊடே திரித்த கொண்டலும்
ஒரு மறுப் பெறும் சது முக திருட்டி எண் க(ண்)ணன் முதல் அடி பேண
திருக் குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே.
சந்தனக் கலவை பூசப்பட்டதும், குங்குமம் அணிந்ததும் ஆகி, தென்னங் குரும்பை ஒத்ததுமான மார்பை உடைய பெண்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுமாறு, பலவகையான வளையல் அணிந்துள்ள தமது கரங்களால் (ஆடவர்களை) வசீகரித்து இழுத்து, வந்தவர்கள் உடல் இன்பம் அடையுமாறு காம மயக்கத்தை ஊட்டும் சொற்களால் அறிவு அழிந்து போகாத என் சிந்தனைகளும் அழிவு பெற, இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் புரள மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற இள வயதுள்ள மாதர்களால் ஏற்படுகின்ற பிறவி என்கின்ற கடலைக் கடக்க, உன் திருவடிகளைத் தருவதற்கு உன் திருவுள்ளம் இனியேனும் கூடுமோ? கிரெளஞ்ச மலையின் உள்ளிடம் பாடிபடவும், அசுரர்கள் தங்கள் ஊர்களுடன் புகை பரந்த நெருப்பில் பட்டு அழியவும் செலுத்திய வேலனே, புகழ் மிகுந்த தேவர்கள் மகிழும்படி, பூமியைத் தாங்கும் மந்தர மலையை பாற்கடலினிடையே (மத்தாகச்) சுழலச் செய்த மேக நிறத் திருமாலும், ஒரு குறையைப் பெற்ற, (தனக்கிருந்த ஐந்து தலைகளில்) நான்கு முகங்களில் மட்டுமே பார்வையைக் கொண்ட எட்டுக் கண்களை உடைய பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய தக்ஷிணா மூர்த்தியாகிய குருபரர் சங்கரருடன் திருப்பெருந்துறையில் அமர்ந்திருக்கும் பெருமாளே.
வரித்த குங்குமம் அணி முலைக் குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட ... சந்தனக் கலவை பூசப்பட்டதும், குங்குமம் அணிந்ததும் ஆகி, தென்னங் குரும்பை ஒத்ததுமான மார்பை உடைய பெண்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுமாறு, அதி விதமான வளைக்கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க(ம்) வந்ததில் அறிவு அழியாத கருத்து அழிந்திட ... பலவகையான வளையல் அணிந்துள்ள தமது கரங்களால் (ஆடவர்களை) வசீகரித்து இழுத்து, வந்தவர்கள் உடல் இன்பம் அடையுமாறு காம மயக்கத்தை ஊட்டும் சொற்களால் அறிவு அழிந்து போகாத என் சிந்தனைகளும் அழிவு பெற, இரு கயல் க(ண்)ணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் கருப் பெரும் கடல் அது கடக்க ... இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் புரள மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற இள வயதுள்ள மாதர்களால் ஏற்படுகின்ற பிறவி என்கின்ற கடலைக் கடக்க, உன் திருவடிகளைத் தரும் திரு உள்ளம் இனி ஆமோ ... உன் திருவடிகளைத் தருவதற்கு உன் திருவுள்ளம் இனியேனும் கூடுமோ? பொருப்பு அகம் பொடி பட அரக்கர் தம் பதியோடு புகைப் பரந்த எரி எழ விடும் வேலா ... கிரெளஞ்ச மலையின் உள்ளிடம் பாடிபடவும், அசுரர்கள் தங்கள் ஊர்களுடன் புகை பரந்த நெருப்பில் பட்டு அழியவும் செலுத்திய வேலனே, புகழ்ப் பெரும் கடவுளர் களித்திடும் படி புவி பொறுத்த மந்தர கிரி கடல் ஊடே திரித்த கொண்டலும் ... புகழ் மிகுந்த தேவர்கள் மகிழும்படி, பூமியைத் தாங்கும் மந்தர மலையை பாற்கடலினிடையே (மத்தாகச்) சுழலச் செய்த மேக நிறத் திருமாலும், ஒரு மறுப் பெறும் சது முக திருட்டி எண் க(ண்)ணன் முதல் அடி பேண ... ஒரு குறையைப் பெற்ற, (தனக்கிருந்த ஐந்து தலைகளில்) நான்கு முகங்களில் மட்டுமே பார்வையைக் கொண்ட எட்டுக் கண்களை உடைய பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே. ... திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய தக்ஷிணா மூர்த்தியாகிய குருபரர் சங்கரருடன் திருப்பெருந்துறையில் அமர்ந்திருக்கும் பெருமாளே.