உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், அதனின்று உருவமாகி, இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைபொருளாகி இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறி பிடித்தது போல, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. முருகனே என ஒரே முறை ஓதும் அடியார்க்கு நீ அவர்தம் தலைமேல் இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்றே. முனிவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட, பழைய சூரனது மார்பில் செலுத்திய வேலனே, திருமாலும் பிரமனும், (அடியும் முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின் செல்வச் சிறுவனே, திருமாலின் மருமகனே, செழிப்புள்ள அழகிய மதில்கள் சேர்ந்த, அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த, திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே.
எருவாய் கருவாய் ... உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், தனிலே யுருவாய் ... அதனின்று உருவமாகி, இதுவே பயிராய் ... இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைவாகி ... விளைபொருளாகி இவர்போ யவராய் ... இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர்போ யிவராய் ... அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இதுவே தொடர்பாய் ... இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறிபோல ... வெறி பிடித்தது போல, ஒருதா யிருதாய் பலகோ டியதாய் ... ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை உடனே அவமா யழியாதே ... அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருகால் முருகா பரமா குமரா ... ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் உயிர்கா வெனவோத அருள்தாராய் ... என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. முருகா வென ஓர் தரம் ஓதடியார் ... முருகனே என ஒரே முறை ஓதும் அடியார்க்கு முடிமேல் இணைதாள் அருள்வோனே ... நீ அவர்தம் தலைமேல் இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்றே. முநிவோர் அமரோர் முறையோ வெனவே ... முனிவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட, முதுசூ ருரமேல் விடும்வேலா ... பழைய சூரனது மார்பில் செலுத்திய வேலனே, திருமால் பிரமா அறியா தவர் ... திருமாலும் பிரமனும், (அடியும் முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின் சீர்ச் சிறுவா திருமால் மருகோனே ... செல்வச் சிறுவனே, திருமாலின் மருமகனே, செழுமா மதில்சேர் ... செழிப்புள்ள அழகிய மதில்கள் சேர்ந்த, அழகார் பொழில்சூழ் ... அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த, திருவீ ழியில்வாழ் பெருமாளே. ... திருவீழிமிழலையில் வாழும் பெருமாளே.