இத சந்தன புழுகும் சில மணமும் த(க்)க வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோகக் குயில் போலே
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார(ம்) இலையும் சுழி தொடை (அ)ரம்பையும் அமுதம் தடமான இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி
தெருமீதே பத பங்கயம் அணையும் பரி புரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போலப் பரிவாகி
பணம் உண்டு எனது அவலம் படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட அம் மனமும் செயல் மாற
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய்
திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகம் துடி வீணை செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத
கொடு சூரர் சிரமும் கர உடலும் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட
சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆடப் பொரும் வேலா
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி வளரும் தழல் ஒளிர் சம்பவி பரைவிண்டு இள தோகைத் தரு சேயே
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களி கூர
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாதப் பெருமாளே.
இன்பம் தருவதான சந்தனம், புனுகுசட்டம் இவை போன்ற வாசனைப் பொருள்கள் தக்கபடி மணம் வீச, தழுவுகின்ற மலை போன்ற இரண்டு மார்பகங்களைக் கொண்டும், அழகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் இந்திரியங்கள் சோர்வு அடையவும், இருண்ட கூந்தல் மழை மேகம் என்னும்படி அமைய, நவரசங்களையும் கொண்ட இனிக்கும் பேச்சுக்களால் மோகத்தை ஊட்டும் குயில் போலப் பேசி, இடுப்பும் கொடி போல் விளங்க, மன்மதன் இடும் விலங்குகள் என்னும்படியான கூந்தல் பாரத்துடன், ஆலிலை போன்ற வயிறும், கொப்பூழ்ச் சுழியும், வாழைத் தண்டு போன்ற தொடையும், காம அமுதம் பொழியும் தன்மை கொண்ட அழகிய பெண்குறியும் விளங்க, (இத்தனை அங்கங்களுடன்) மன்மத வித்தைப் பேச்சுக்களைப் பேசி, தெருவிலே, பாத தாமரைகளைத் தழுவும் சிலம்புகள் அங்கு ஒலி செய்ய நடக்கின்ற மயில்கள் என்று சொல்லும்படி, ஆடையும் சுழன்று ஆட, அவர்கள் பழகுகின்ற விதங்கள் (ஆளுக்குத் தகுந்தமாதிரி) பலவாக, சில பேச்சுக்களுடன் கிளி கொஞ்சுவது போலப் பேசி, அன்பும் பரிவும் பூண்டவர்கள் போல் இருக்க, பணம் இருக்கிறதென்று என்னுடைய வேதனைப்படும் நினைவிலே நான் எண்ணம் பூண்டிருக்க, மத்தியில் பணம் வற்றிப் போய்த் தளர்ச்சி உற, இந்நிலையைக் கண்டு அவ்விலைமாதரின் மோகம் கொண்டிருந்த அந்த மனமும் நேசச் செயலும் மாறுதல் கொள்ள, (அதனால்) சில பகலும் சில இரவுமே துயில் கொள்ள இணங்கும் சில வஞ்சக விலைமாதர்கள் மீது (எனக்குள்ள) காம மாயைத் துயரைத் தீர்த்தருள்க. திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு டகுடங்குகு டிகுடிங்குகு என்று சிறு பறைகளும், உடுக்கையும், வீணையும் ஒலிக்க, செகணஞ்செக என்று பெரும்பறைகள் எல்லா திக்குகளிலும் சப்திக்க, கொடிய சூரர்களின் தலைகளும், கைகளும், உடல்களும், குதிரையும், தேரும், யானையும், சிங்கமும், கொழுப்பும், குடலும், தசையும் அறுபட்டதால் கடல் என்று சொல்லும்படி சிவந்த இரத்தம் ஓட, பருந்து போன்ற சில சிவந்த பறவைகளும், கழுகுகளும், சிறிய நரிகளும், காக்கைகளும் (போர்க்களத்தில் வந்து) ஆட சண்டை செய்யும் வேலனே, மதம் கொண்ட கொடிய யானையின் தோலை உரித்தவர், மழுவையும் மானையும் கையில் ஏந்தியவர் ஆகிய சிவபெருமானின் இடது பக்கத்தில் அன்புடன் இருந்து விளங்கும் உமை என்று புகழப்படும் அழகி, ஆதி பராசக்தி, வளர்ந்து ஓங்கும் நெருப்பு போலச் சிவந்து விளங்கும் சாம்பவி, பரம்பொருள், திருமாலின் இளம் தங்கையாகிய மயில் போன்றவளாகிய பார்வதி தந்த குழந்தையே, சந்திரன் போன்ற திரு முகமும் அமுதம் பொழிகின்ற மார்பகமும் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியுடனும், அன்பு பொருந்தும் தேவர்கள் வளர்த்த தேவயானையுடனும் மனம் மகிழ்ச்சி மிக, திருப்பந்தணை நல்லூரில் வந்து வீற்றிருப்பவனே, சிவபெருமானது குரு மூர்த்திப் பெருமாளே.
இத சந்தன புழுகும் சில மணமும் த(க்)க வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர ... இன்பம் தருவதான சந்தனம், புனுகுசட்டம் இவை போன்ற வாசனைப் பொருள்கள் தக்கபடி மணம் வீச, தழுவுகின்ற மலை போன்ற இரண்டு மார்பகங்களைக் கொண்டும், அழகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் இந்திரியங்கள் சோர்வு அடையவும், இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோகக் குயில் போலே ... இருண்ட கூந்தல் மழை மேகம் என்னும்படி அமைய, நவரசங்களையும் கொண்ட இனிக்கும் பேச்சுக்களால் மோகத்தை ஊட்டும் குயில் போலப் பேசி, இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார(ம்) இலையும் சுழி தொடை (அ)ரம்பையும் அமுதம் தடமான இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி ... இடுப்பும் கொடி போல் விளங்க, மன்மதன் இடும் விலங்குகள் என்னும்படியான கூந்தல் பாரத்துடன், ஆலிலை போன்ற வயிறும், கொப்பூழ்ச் சுழியும், வாழைத் தண்டு போன்ற தொடையும், காம அமுதம் பொழியும் தன்மை கொண்ட அழகிய பெண்குறியும் விளங்க, (இத்தனை அங்கங்களுடன்) மன்மத வித்தைப் பேச்சுக்களைப் பேசி, தெருமீதே பத பங்கயம் அணையும் பரி புரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போலப் பரிவாகி ... தெருவிலே, பாத தாமரைகளைத் தழுவும் சிலம்புகள் அங்கு ஒலி செய்ய நடக்கின்ற மயில்கள் என்று சொல்லும்படி, ஆடையும் சுழன்று ஆட, அவர்கள் பழகுகின்ற விதங்கள் (ஆளுக்குத் தகுந்தமாதிரி) பலவாக, சில பேச்சுக்களுடன் கிளி கொஞ்சுவது போலப் பேசி, அன்பும் பரிவும் பூண்டவர்கள் போல் இருக்க, பணம் உண்டு எனது அவலம் படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட அம் மனமும் செயல் மாற ... பணம் இருக்கிறதென்று என்னுடைய வேதனைப்படும் நினைவிலே நான் எண்ணம் பூண்டிருக்க, மத்தியில் பணம் வற்றிப் போய்த் தளர்ச்சி உற, இந்நிலையைக் கண்டு அவ்விலைமாதரின் மோகம் கொண்டிருந்த அந்த மனமும் நேசச் செயலும் மாறுதல் கொள்ள, பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய் ... (அதனால்) சில பகலும் சில இரவுமே துயில் கொள்ள இணங்கும் சில வஞ்சக விலைமாதர்கள் மீது (எனக்குள்ள) காம மாயைத் துயரைத் தீர்த்தருள்க. திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகம் துடி வீணை செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத ... திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு டகுடங்குகு டிகுடிங்குகு என்று சிறு பறைகளும், உடுக்கையும், வீணையும் ஒலிக்க, செகணஞ்செக என்று பெரும்பறைகள் எல்லா திக்குகளிலும் சப்திக்க, கொடு சூரர் சிரமும் கர உடலும் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட ... கொடிய சூரர்களின் தலைகளும், கைகளும், உடல்களும், குதிரையும், தேரும், யானையும், சிங்கமும், கொழுப்பும், குடலும், தசையும் அறுபட்டதால் கடல் என்று சொல்லும்படி சிவந்த இரத்தம் ஓட, சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆடப் பொரும் வேலா ... பருந்து போன்ற சில சிவந்த பறவைகளும், கழுகுகளும், சிறிய நரிகளும், காக்கைகளும் (போர்க்களத்தில் வந்து) ஆட சண்டை செய்யும் வேலனே, மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி வளரும் தழல் ஒளிர் சம்பவி பரைவிண்டு இள தோகைத் தரு சேயே ... மதம் கொண்ட கொடிய யானையின் தோலை உரித்தவர், மழுவையும் மானையும் கையில் ஏந்தியவர் ஆகிய சிவபெருமானின் இடது பக்கத்தில் அன்புடன் இருந்து விளங்கும் உமை என்று புகழப்படும் அழகி, ஆதி பராசக்தி, வளர்ந்து ஓங்கும் நெருப்பு போலச் சிவந்து விளங்கும் சாம்பவி, பரம்பொருள், திருமாலின் இளம் தங்கையாகிய மயில் போன்றவளாகிய பார்வதி தந்த குழந்தையே, வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களி கூர ... சந்திரன் போன்ற திரு முகமும் அமுதம் பொழிகின்ற மார்பகமும் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியுடனும், அன்பு பொருந்தும் தேவர்கள் வளர்த்த தேவயானையுடனும் மனம் மகிழ்ச்சி மிக, வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாதப் பெருமாளே. ... திருப்பந்தணை நல்லூரில் வந்து வீற்றிருப்பவனே, சிவபெருமானது குரு மூர்த்திப் பெருமாளே.