மனம் செல்வதற்கு உண்டான வேறு வேறு வாயிலாகத் தங்கியுள்ள ஐந்து புலன்களிலும் தொடர்பு கொண்டுள்ள எனது குணமும், ஐந்து இந்திரியங்களைக் கட்டியுள்ள தூணாகிய இவ்வுடம்பும், சிதறிப் போகும்படியாக யமதூதனாகிய காலன் மலர் போன்ற கண்களில் நெருப்புப் பொறி எழ வலிமையோடு தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு இன்று இங்கே வர, குடும்பத்தில் தங்கியுள்ள சுற்றத்தார் பலரும் இது எனக்கு என்றும், அது உனக்கு என்றும், அந்த இனத்தில் உள்ளவர்களுக்கு இன்னின்ன கணக்கு என்றும் (சொத்துக்களைப் பிரித்து), கூறி இளைத்தும், அன்பைக் கெடுத்தும், எனது உடல் அழியும் முன்பு, புகழ் வாய்ந்த செந்தமிழ் மொழியைக் கொண்டு பொருளாளர்பால் சென்று யாசிக்கும் இழிதொழிலின் கேவலம் நீங்க, துன்பத்தைத் தொலைத்து இன்பத்தைத் தந்து அருள் புரிவாயாக. ஒலி செய்யும் குளிர்ந்த கடலில் பிறந்த பாஞ்சஜன்யம் என்ற வெண்சங்கை தனது திருக்கரத்திலே ஏந்தி உலகமெங்கும் உள்ள ஆன்மாக்களின் துயரம் நீங்கும் பொருட்டு அறிதுயில் புரிகின்ற திருமாலும், அந்தத் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய ஒளிவீசும் பிரமனும், அவர்களுடைய பெருமை யாவும் குறைவுபடுமாறு, சந்தப் பாடலைக் கேட்டு உள்ளம் மகிழும் சிவபிரானுக்கு செம்மைப் பொருளான பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, தினைப்பயிர் விளையும் மலையாகிய வள்ளிமலையில் வசிக்கும் இளம்பெண் வள்ளியின் குங்குமம் பூசியுள்ள மார்பினை அழகிய செம்பொன் போன்ற தோள்களால் தழுவுவோனே, செழிப்புள்ள ஆழ்ந்த கடற்சங்குகளை ஏராளமாகக் கொழிப்பதும், சந்தன மரங்களை உடைய பசும் சோலைகளால் மிகவும் குளிர்ச்சியைக் கொண்டதுமான திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே.
மனத்தின் பங்கெனத் தங்கு ... மனம் செல்வதற்கு உண்டான வேறு வேறு வாயிலாகத் தங்கியுள்ள ஐம்புலத்தென்றன் குணத்து ... ஐந்து புலன்களிலும் தொடர்பு கொண்டுள்ள எனது குணமும், அஞ்சு இந்த்ரியத்தம்பந் தனை ... ஐந்து இந்திரியங்களைக் கட்டியுள்ள தூணாகிய இவ்வுடம்பும், சிந்தும் படிகாலன் ... சிதறிப் போகும்படியாக யமதூதனாகிய காலன் மலர்ச்செங்கண் கனற்பொங்கும் ... மலர் போன்ற கண்களில் நெருப்புப் பொறி எழ திறத்தின்தண்டு எடுத்து ... வலிமையோடு தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு, அண்டங் கிழித்தின்றிங்குற ... ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு இன்று இங்கே வர, தங்கும் பலவோரும் ... குடும்பத்தில் தங்கியுள்ள சுற்றத்தார் பலரும் எனக்கென்று இங்கு உனக்கென்று அங்கு ... இது எனக்கு என்றும், அது உனக்கு என்றும், இனத்தின்கண் கணக்கென்றென்று ... அந்த இனத்தில் உள்ளவர்களுக்கு இன்னின்ன கணக்கு என்றும் (சொத்துக்களைப் பிரித்து), இளைத்தன்புங் கெடுத்து அங்கம் கழிவாமுன் ... கூறி இளைத்தும், அன்பைக் கெடுத்தும், எனது உடல் அழியும் முன்பு, இசைக்குஞ்செந்தமிழ்க்கொண்டு ... புகழ் வாய்ந்த செந்தமிழ் மொழியைக் கொண்டு அங்கிரக்கும்புன் றொழிற்பங்கம் கெட ... பொருளாளர்பால் சென்று யாசிக்கும் இழிதொழிலின் கேவலம் நீங்க, துன்பங் கழித்தின்பந் தருவாயே ... துன்பத்தைத் தொலைத்து இன்பத்தைத் தந்து அருள் புரிவாயாக. கனைக்குந்தண் கடற்சங்கம் ... ஒலி செய்யும் குளிர்ந்த கடலில் பிறந்த பாஞ்சஜன்யம் என்ற வெண்சங்கை கரத்தின்கண் தரித்து ... தனது திருக்கரத்திலே ஏந்தி எங்குங் கலக்கஞ்சிந்திட ... உலகமெங்கும் உள்ள ஆன்மாக்களின் துயரம் நீங்கும் பொருட்டு கண்துஞ்சிடுமாலும் ... அறிதுயில் புரிகின்ற திருமாலும், கதித்த ஒண்பங்கயத்தன் ... அந்தத் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய ஒளிவீசும் பிரமனும், பண்பனைத்துங்குன்றிட ... அவர்களுடைய பெருமை யாவும் குறைவுபடுமாறு, சந்தங் களிக்குஞ்சம்புவுக்கும் ... சந்தப் பாடலைக் கேட்டு உள்ளம் மகிழும் சிவபிரானுக்கு செம் பொருளீவாய் ... செம்மைப் பொருளான பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, தினைக்குன்றந் தனிற்றங்கும் ... தினைப்பயிர் விளையும் மலையாகிய வள்ளிமலையில் வசிக்கும் சிறுப்பெண்குங்குமக்கும்பம் ... இளம்பெண் வள்ளியின் குங்குமம் பூசியுள்ள மார்பினை திருச்செம்பொன் புயத்தென்றும் புனைவோனே ... அழகிய செம்பொன் போன்ற தோள்களால் தழுவுவோனே, செழிக்குங்குண் டகழ்ச்சங்கம் ... செழிப்புள்ள ஆழ்ந்த கடற்சங்குகளை கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்பொழிற்றண் ... ஏராளமாகக் கொழிப்பதும், சந்தன மரங்களை உடைய பசும் சோலைகளால் மிகவும் குளிர்ச்சியைக் கொண்டதுமான செந்திலிற்றங்கும் பெருமாளே. ... திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே.