கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட
வாசம் உறு களப முலை புளகம் எழ
நேரான வேல் விழிகள் கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட
நல கனி வாயின் கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய
மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ
வளை கல கல என மொழி பதற
மா மோக காதல் அது கரை காணாது
எரி அணுகு மெழுகு பதமாய் மேவி மேவி இணை இருவர் உடல் ஒருவர் என
நாணாது பாயல் மிசை இளமகளிர் கலவிதனிலே மூழ்கி ஆழுகினும்
இமையாதே இரவின் இடை துயில் உகினும்
யாரோடு பேசுகினும்
இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே
உரிய தவ நெறியில் நம நாராயணாய என
ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன்
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன்
உறு தூணில் உரமுடைய அரி வடிவதாய்
மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார்பீறி
வாகை புனை உவண பதி நெடியவனும்
வேதாவும் நான் மறையும் உயர்வாக
வரி அளிகள் இசை முரல
வாகு ஆன தோகை இள மயில் இடையில் நடனம் இட
ஆகாசம் ஊடுருவ வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகியிட
மதில் சூழும் மருத அரசர் படை விடுதி வீடாக
நாடி மிக மழம் விடையின் மிசையி(ல்) வரு(ம்) சோமீசர் கோயில் தனில்
மகிழ்வு பெற உறை முருகனே
பேணு வானவர்கள் பெருமாளே.
கரு நிறம் உள்ள கூந்தல் சரிந்து விழ, முகம் வியர்வை கொள்ள, நறு மணம் உள்ள கலவைச் சாந்து அணிந்த மார்புகள் புளகாங்கிதம் கொண்டு விம்மி எழ, செவ்வையான வேலை ஒத்த கண்களாகிய கயல் மீன்கள் (காதுகளோடு) சண்டையிடும் செயலை ஒக்க பெரிய போர் செய்ய, நறு மணம் உள்ள குமுத மலரை ஒத்த அதரம் எனப்படும் இதழினின்றும் தேனைப் போன்ற ஊறல் பாய, அது நிரம்பிக் கடல் போன்ற அமுதத்தை உதவ, இரண்டு தோள்களிலும் மாலை தாழ்ந்து புரள, கையில் உள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க, வாய்ப் பேச்சு பதற்றமுடன் வெளிவர, மிக்க காம ஆசை கரை கடந்து பெருகி, தீயில் பட்ட மெழுகின் நிலையை அடைந்து இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல் இணைந்து, கூச்சமின்றி படுக்கையில் இளம் பெண்களுடன் புணர்ச்சி இன்பத்தில் நான் மூழ்கி ஆழ்ந்து இருந்தாலும், கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் தூங்கினாலும், யாரோடு பேசினாலும், இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள் வரிசையையும், இரண்டு திருவடிகளையும், ஆறு முகங்களையும் நான் ஓதும்படியான ஞானத்தைத் தந்து அருள்வாயாக. சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத கோபத்துடன், உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து, இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து, வெற்றிக் கொடி ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும், பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக, ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப, அழகுள்ள தோகையை உடைய இள மயில் நடுவில் நடனம் செய்ய, ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய மாலைபோல ஆபரணமாக விளங்க, மதில்கள் சூழ்ந்ததும், மருத நிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும் அமைந்த (சோமீச்சுரம் என்னும்) பதியில், மிகவும் விரும்பி இளமை வாய்ந்த ரிஷபத்தின் மேல் வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் கோயிலில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே, விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே.
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட ... கரு நிறம் உள்ள கூந்தல் சரிந்து விழ, முகம் வியர்வை கொள்ள, வாசம் உறு களப முலை புளகம் எழ ... நறு மணம் உள்ள கலவைச் சாந்து அணிந்த மார்புகள் புளகாங்கிதம் கொண்டு விம்மி எழ, நேரான வேல் விழிகள் கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட ... செவ்வையான வேலை ஒத்த கண்களாகிய கயல் மீன்கள் (காதுகளோடு) சண்டையிடும் செயலை ஒக்க பெரிய போர் செய்ய, நல கனி வாயின் கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய ... நறு மணம் உள்ள குமுத மலரை ஒத்த அதரம் எனப்படும் இதழினின்றும் தேனைப் போன்ற ஊறல் பாய, மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ ... அது நிரம்பிக் கடல் போன்ற அமுதத்தை உதவ, இரண்டு தோள்களிலும் மாலை தாழ்ந்து புரள, வளை கல கல என மொழி பதற ... கையில் உள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க, வாய்ப் பேச்சு பதற்றமுடன் வெளிவர, மா மோக காதல் அது கரை காணாது ... மிக்க காம ஆசை கரை கடந்து பெருகி, எரி அணுகு மெழுகு பதமாய் மேவி மேவி இணை இருவர் உடல் ஒருவர் என ... தீயில் பட்ட மெழுகின் நிலையை அடைந்து இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல் இணைந்து, நாணாது பாயல் மிசை இளமகளிர் கலவிதனிலே மூழ்கி ஆழுகினும் ... கூச்சமின்றி படுக்கையில் இளம் பெண்களுடன் புணர்ச்சி இன்பத்தில் நான் மூழ்கி ஆழ்ந்து இருந்தாலும், இமையாதே இரவின் இடை துயில் உகினும் ... கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் தூங்கினாலும், யாரோடு பேசுகினும் ... யாரோடு பேசினாலும், இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் ... இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள் வரிசையையும், இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே ... இரண்டு திருவடிகளையும், ஆறு முகங்களையும் நான் ஓதும்படியான ஞானத்தைத் தந்து அருள்வாயாக. உரிய தவ நெறியில் நம நாராயணாய என ... சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன் ... ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத கோபத்துடன், உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் ... உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, உறு தூணில் உரமுடைய அரி வடிவதாய் ... அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து, மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார்பீறி ... இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து, வாகை புனை உவண பதி நெடியவனும் ... வெற்றிக் கொடி ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும், வேதாவும் நான் மறையும் உயர்வாக ... பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக, வரி அளிகள் இசை முரல ... ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப, வாகு ஆன தோகை இள மயில் இடையில் நடனம் இட ... அழகுள்ள தோகையை உடைய இள மயில் நடுவில் நடனம் செய்ய, ஆகாசம் ஊடுருவ வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகியிட ... ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய மாலைபோல ஆபரணமாக விளங்க, மதில் சூழும் மருத அரசர் படை விடுதி வீடாக ... மதில்கள் சூழ்ந்ததும், மருத நிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும் அமைந்த (சோமீச்சுரம் என்னும்) பதியில், நாடி மிக மழம் விடையின் மிசையி(ல்) வரு(ம்) சோமீசர் கோயில் தனில் ... மிகவும் விரும்பி இளமை வாய்ந்த ரிஷபத்தின் மேல் வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் கோயிலில் மகிழ்வு பெற உறை முருகனே ... மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே, பேணு வானவர்கள் பெருமாளே. ... விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே.