பட்டு மணிக் கச்சு இறுகக் கட்டி அவிழ்த்து உத்தரியப் பத்தியின் முத்துச் செறி வெற்பு இணையாம் என் பற்ப(ம்) முகைக் குத்து முலை
தத்தையர் கைப் புக்கு வசப் பட்டு உருகிக் கெட்ட வினைத் தொழிலாலே
துட்டன் எனக் கட்டன் எனப் பித்தன் எனப் ப்ரட்டன் எனச் சுற்றும் அறச் சித்தன் எனத் திரிவேனை
துக்கம் அறுத்துக் கமலப் பொன் பதம் வைத்துப் பதவிச் சுத்தி அணைப் பத்தரில் வைத்து அருள்வாயே
சுட்ட பொருள் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொன் கொடியைத் துக்கம் உற
சொர்க்கம் உறக் கொடி யாழார் சுத்த ரதத்தில் கொடு புக்குக் கடுகித் தெற்(கு)க் கடைசிச் சுற்று வனத்தில் சிறைவைத்திடு தீரன்
கொட்டம் அறப் புற்று அரவச் செற்றம் அறச் சத்தம் அறக் குற்றம் அறச் சுற்றம் அறப் பல தோளின் கொற்றம் அறப் பத்து முடிக் கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணிக் கொட்டை நகரப் பெருமாளே.
பட்டாலாகிய அழகிய கச்சை அழுத்தமாகக் கட்டியும் பிறகு அவிழ்த்தும், மேலாடை வரிசையை ஒட்டி முத்து மாலை நெருங்கிய, மலை போன்றவை என்று சொல்லத் தக்கனவும் தாமரையின் மொட்டுப் போன்றனவுமான கூரிய மார்பகங்ளை உடைய, கிளி போன்ற விலைமாதர்களின் கையில் அகப்பட்டு, அவர்களின் வசத்தில் சிக்கி, மனம் உருகி, கேடு தருவதும் வினையைப் பெருக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு, துஷ்டன் என்றும், துன்பத்துக்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நெறியினின்று வழுவியவன் என்றும், எங்கும் திரியும் பாவ எண்ணங்களை உடையவன் என்றும் அலைகின்ற என்னை, என் துயரங்களை நீக்கி, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், பரிசுத்தமான நல்ல பதவியை அணைந்துள்ள பக்தர் கூட்டத்தில் சேர்ப்பித்தும் அருள் புரிவாயாக. சுட்ட தங்கக் கட்டி போன்ற உடலை உடையவளும், செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமான அழகிய கொடி போன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து, ஆகாயத்தை அளாவும் வீணைக் கொடி விளங்கும் தூய்மை வாய்ந்த (புஷ்பக) ரதத்தில் அவளை எடுத்துச் சென்று, வேகமாக தெற்குத் திசையை அடைந்து அங்கு கோடியில் வளைந்தமைந்த (அசோக) வனத்தில் சிறைவைத்த (ராவணன்) என்னும் வீரனின் இறுமாப்பு அழிய, புற்றிலிருந்து சீறும் பாம்பின் கோபம் போன்ற சினம் அற்றுப்போக, குரல் ஒலியும் அடங்க, அவனது பழுதும் நீங்க, சுற்றத்தார் யாவரும் மாண்டு போக, அவனுக்கு இருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிகளும் அறுந்து போக, வீரம் காட்டிய வெற்றியாளராகிய ராமர் (திருமால்) பணிந்து நின்று பூஜித்த, கொட்டையூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
பட்டு மணிக் கச்சு இறுகக் கட்டி அவிழ்த்து உத்தரியப் பத்தியின் முத்துச் செறி வெற்பு இணையாம் என் பற்ப(ம்) முகைக் குத்து முலை ... பட்டாலாகிய அழகிய கச்சை அழுத்தமாகக் கட்டியும் பிறகு அவிழ்த்தும், மேலாடை வரிசையை ஒட்டி முத்து மாலை நெருங்கிய, மலை போன்றவை என்று சொல்லத் தக்கனவும் தாமரையின் மொட்டுப் போன்றனவுமான கூரிய மார்பகங்ளை உடைய, தத்தையர் கைப் புக்கு வசப் பட்டு உருகிக் கெட்ட வினைத் தொழிலாலே ... கிளி போன்ற விலைமாதர்களின் கையில் அகப்பட்டு, அவர்களின் வசத்தில் சிக்கி, மனம் உருகி, கேடு தருவதும் வினையைப் பெருக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு, துட்டன் எனக் கட்டன் எனப் பித்தன் எனப் ப்ரட்டன் எனச் சுற்றும் அறச் சித்தன் எனத் திரிவேனை ... துஷ்டன் என்றும், துன்பத்துக்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நெறியினின்று வழுவியவன் என்றும், எங்கும் திரியும் பாவ எண்ணங்களை உடையவன் என்றும் அலைகின்ற என்னை, துக்கம் அறுத்துக் கமலப் பொன் பதம் வைத்துப் பதவிச் சுத்தி அணைப் பத்தரில் வைத்து அருள்வாயே ... என் துயரங்களை நீக்கி, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், பரிசுத்தமான நல்ல பதவியை அணைந்துள்ள பக்தர் கூட்டத்தில் சேர்ப்பித்தும் அருள் புரிவாயாக. சுட்ட பொருள் கட்டியின் மெய்ச் செக்கமலப் பொன் கொடியைத் துக்கம் உற ... சுட்ட தங்கக் கட்டி போன்ற உடலை உடையவளும், செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமான அழகிய கொடி போன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து, சொர்க்கம் உறக் கொடி யாழார் சுத்த ரதத்தில் கொடு புக்குக் கடுகித் தெற்(கு)க் கடைசிச் சுற்று வனத்தில் சிறைவைத்திடு தீரன் ... ஆகாயத்தை அளாவும் வீணைக் கொடி விளங்கும் தூய்மை வாய்ந்த (புஷ்பக) ரதத்தில் அவளை எடுத்துச் சென்று, வேகமாக தெற்குத் திசையை அடைந்து அங்கு கோடியில் வளைந்தமைந்த (அசோக) வனத்தில் சிறைவைத்த (ராவணன்) என்னும் வீரனின் கொட்டம் அறப் புற்று அரவச் செற்றம் அறச் சத்தம் அறக் குற்றம் அறச் சுற்றம் அறப் பல தோளின் கொற்றம் அறப் பத்து முடிக் கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணிக் கொட்டை நகரப் பெருமாளே. ... இறுமாப்பு அழிய, புற்றிலிருந்து சீறும் பாம்பின் கோபம் போன்ற சினம் அற்றுப்போக, குரல் ஒலியும் அடங்க, அவனது பழுதும் நீங்க, சுற்றத்தார் யாவரும் மாண்டு போக, அவனுக்கு இருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிகளும் அறுந்து போக, வீரம் காட்டிய வெற்றியாளராகிய ராமர் (திருமால்) பணிந்து நின்று பூஜித்த, கொட்டையூரில் வீற்றிருக்கும் பெருமாளே.