மனமெ னும்பொருள்
வான் அறைகால் கனல் புனலுடன்புவி கூடியதோர் உடல்
வடிவு கொண்டு
அதிலேபதி மூணெழு வகையாலே
வரு சுகந்துயர் ஆசையிலேயுழல்
மதியை வென்று
பதிர முஞ்சித றாதமு தாயுணு ராபர ஞானநல்வழி பெறும்படி
நாயடியேனை நின் அருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா
சிறைபுகுஞ் சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளையானது வேரற
சிவன் உகந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே
கனகன் அங்கையினால் அறை தூணிடை
மனித சிங்கமதாய்
வரை பார்திசை கடல்கலங்கிடவே
பொருதே உகிர் முனையாலே
கதற வென்றுடல் கீண அவனாருயிர்
உதிரமுஞ் சிதறாது அமுதாய் உ(ண்)ணு
கமல வுந்தியனாகிய மால்திரு மருகோனே
தினகரன்சிலை வேள் அருள் மாதவர்
சுரர்கள் இந்திரனார் உரகாதிபர்
திசைமுகன்செழு மாமறை யோர்
புகழ் அழகோனே
திருமடந்தையர் நாலிருவோர் நிறை
அகமொடம்பொனின் ஆலய நீடிய
சிவபுரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே.
மனம் என்ற ஒரு பொருளுடன் ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களும் ஒரு தேகம் என்ற உருவத்தைக் கொண்டு அதில் (13ஐ 7ஆல் பெருக்கிய) 91 தத்துவ மாற்றங்களாலே1 ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற என் புத்தியை நான் ஜெயித்து, மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக நாய் ஒத்த இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக. உலகங்களைப் பிறப்பித்தவள், சங்கரி, வேத முதல்வி, நாராயணி, குற்றமற்றவள், எண்குணங்களும்2 நிறைந்தவள், காரணமானவள், சிவை, பராபரை ஆகிய பார்வதி அருளிய குழந்தாய், சூரனின் சிறையில் இருந்த தேவர்கள், முனிவர்கள் விடுதலை பெற, அசுரக்கூட்டமெல்லாம் வேரற்று அழிய, சிவபிரான் மகிழ்ந்து உனக்குத் தந்த கூரிய வேலைச் செலுத்திய முருகப் பெருமானே, இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து நரசிம்ம உருவத்தில் மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே, அவனைக் கதறி அழும்படி வென்று, அவனது அரிய உயிரை ரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய மருமகனே, சூரியன், கரும்புவில் மன்மதன், அருள்மிகு முனிவர்கள், தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்து அதிபர்கள், பிரம்மா, செம்மை பொருந்திய சிறந்த அந்தணர்கள் ஆகியோர் போற்றிப் புகழ்கின்ற அழகனே, அஷ்டலட்சுமிகள்3 நிறைந்த வீடுகளும், சொக்கத் தங்கத்தால் ஆன கோயிலும் சிறப்பாக விளங்கும் சிவபுரம்4 என்ற தலத்தில் வாழும் குருமூர்த்திப் பெருமாளே.
மனமெ னும்பொருள் ... மனம் என்ற ஒரு பொருளுடன் வான் அறைகால் கனல் புனலுடன்புவி கூடியதோர் உடல் ... ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்களும் ஒரு தேகம் என்ற வடிவு கொண்டு ... உருவத்தைக் கொண்டு அதிலேபதி மூணெழு வகையாலே ... அதில் (13ஐ 7ஆல் பெருக்கிய) 91 தத்துவ மாற்றங்களாலே1 வரு சுகந்துயர் ஆசையிலேயுழல் ... ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற மதியை வென்று ... என் புத்தியை நான் ஜெயித்து, பதிர முஞ்சித றாதமு தாயுணு ராபர ஞானநல்வழி பெறும்படி ... மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக நாயடியேனை நின் அருள்சேராய் ... நாய் ஒத்த இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக. செனனி சங்கரி ஆரணி நாரணி ... உலகங்களைப் பிறப்பித்தவள், சங்கரி, வேத முதல்வி, நாராயணி, விமலி யெண்குண பூரணி காரணி ... குற்றமற்றவள், எண்குணங்களும்2 நிறைந்தவள், காரணமானவள், சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா ... சிவை, பராபரை ஆகிய பார்வதி அருளிய குழந்தாய், சிறைபுகுஞ் சுரர் மாதவர் மேல்பெற ... சூரனின் சிறையில் இருந்த தேவர்கள், முனிவர்கள் விடுதலை பெற, அசுரர் தங்கிளையானது வேரற ... அசுரக்கூட்டமெல்லாம் வேரற்று அழிய, சிவன் உகந்தருள் கூர்தரு வேல்விடு முருகோனே ... சிவபிரான் மகிழ்ந்து உனக்குத் தந்த கூரிய வேலைச் செலுத்திய முருகப் பெருமானே, கனகன் அங்கையினால் அறை தூணிடை ... இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து மனித சிங்கமதாய் ... நரசிம்ம உருவத்தில் வரை பார்திசை கடல்கலங்கிடவே ... மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, பொருதே உகிர் முனையாலே ... இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே, கதற வென்றுடல் கீண அவனாருயிர் ... அவனைக் கதறி அழும்படி வென்று, அவனது அரிய உயிரை உதிரமுஞ் சிதறாது அமுதாய் உ(ண்)ணு ... ரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய கமல வுந்தியனாகிய மால்திரு மருகோனே ... தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய மருமகனே, தினகரன்சிலை வேள் அருள் மாதவர் ... சூரியன், கரும்புவில் மன்மதன், அருள்மிகு முனிவர்கள், சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் ... தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்து அதிபர்கள், திசைமுகன்செழு மாமறை யோர் ... பிரம்மா, செம்மை பொருந்திய சிறந்த அந்தணர்கள் ஆகியோர் புகழ் அழகோனே ... போற்றிப் புகழ்கின்ற அழகனே, திருமடந்தையர் நாலிருவோர் நிறை ... அஷ்டலட்சுமிகள்3 நிறைந்த அகமொடம்பொனின் ஆலய நீடிய ... வீடுகளும், சொக்கத் தங்கத்தால் ஆன கோயிலும் சிறப்பாக விளங்கும் சிவபுரந்தனில் வாழ்குரு நாயக பெருமாளே. ... சிவபுரம்4 என்ற தலத்தில் வாழும் குருமூர்த்திப் பெருமாளே.