தோடு உற்றுக் காது அளவு ஓடிய வேலுக்குத் தான் நிகர் ஆய் எழு
சூதத்தில் காமனி(ன்) இராசத விழியாலே
சோடு உற்றத் தாமரை மா முகை போலக் கற்பூரம் அளாவிய தோல் முத்துக் கோடு என வீறிய முலை மானார்
கூடச் சிக்காயவர் ஊழியமே பற்றிக் காதலின் ஓடிய கூள(னை)ச் சித்து ஆளனை மூளனை வினையேனை
கோபித்துத் தாய் என நீ ஒரு போதத்தைப் பேச அதால் அருள் கோடித்துத் தான அடியேன் அடி பெற வேணும்
வேடிக்கைக்கார உதார குணா பத்மத் தாரணி காரண
வீரச் சுத்தா மகுடா சமர் அடு தீரா வேலைக் கட்டாணி
மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே
ஆடத் தக்கார் உமை பாதியர் வேதப் பொன் கோவண ஆடையர் ஆலித்துத் தான் அருள் ஊறிய முருகோனே
ஆடப் பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறைப் பொன் கோயிலின் மேவிய பெருமாளே.
தோடுகளை அணிந்த காது வரைக்கும் ஓடி வேலுக்கு ஒப்பானது என்று சொல்லும்படி விளங்கி, வஞ்சனை மிகுந்து, மன்மதனின் ரஜோ குணம் படைத்த கண்களும், இரட்டையாகப் பொருந்தி தாமரையின் அழகிய மொட்டுப் போன்ற, பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவையைப் பூசிய தோலும், முத்து மாலையும் அணிந்த, யானையின் தந்தம் போல் மேலிட்டெழுந்த மார்பகங்களும் உடைய விலைமாதர்களின் வசத்தில் அகப்பட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து ஆசையுடன் காலம் கழிக்கும் குப்பை போல் பயன் இல்லாதவனாகிய என்னை, சிற்றேவல் செய்யும் என்னை, சிற்றறிவுடன் செயல் படும் என்னை, வினைக்கு ஈடான என்னை, நீ கண்டித்து, தாய் போல நீ ஒப்பற்றதான ஒரு ஞானத்தை உபதேசிக்க, அதனால் ஞானம் பெற்றமையால் உனது திருவருளைப் புகழ்ந்து உன்னைப் பிரார்த்திக்க அடியேன் உன் திருவடியைப் பெற வேண்டுகிறேன். விநோதமான திருவிளையாடல்களைச் செய்பவனே, தாராள குணம் உடையவனே, தாமரை மலர் மாலை அணியும் மூலப்பொருளே, வீரனே, பரிசுத்தமானவனே, மகுடம் தரித்தவனே, போரில் (பகைவரைக்) கொல்லும் தீரனே, செய்யும் தொழிலில் சமர்த்தனே, ரதம் ஓட்டுவதில் வல்ல சூரர்களுக்கு எல்லாம் மேலான சூரன் மீது வேலைச் செலுத்துபவனே, ஐராவதம் என்னும் யானையின் மீது சீரான திருவருள் ஊறிய இளையவனே, கூத்தாட வல்லவர், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவர், வேதத்தையே அழகிய கோவணமாகக் கொண்டவர் ஆகிய சிவபிரான் களித்து மகிழ்ச்சி பூண்டு திருவருள் சுரந்த குழந்தை முருகனே, பொன்னாலாகிய கோபுரத்தைக் கொண்டதும், கண்ணாடிக்கு ஒப்பான மதில் சூழ்ந்த பழையாறை என்னும் தலத்தின் அழகிய கோவிலில் வீற்றிருக்கும் பெருமாளே.
தோடு உற்றுக் காது அளவு ஓடிய வேலுக்குத் தான் நிகர் ஆய் எழு ... தோடுகளை அணிந்த காது வரைக்கும் ஓடி வேலுக்கு ஒப்பானது என்று சொல்லும்படி விளங்கி, சூதத்தில் காமனி(ன்) இராசத விழியாலே ... வஞ்சனை மிகுந்து, மன்மதனின் ரஜோ குணம் படைத்த கண்களும், சோடு உற்றத் தாமரை மா முகை போலக் கற்பூரம் அளாவிய தோல் முத்துக் கோடு என வீறிய முலை மானார் ... இரட்டையாகப் பொருந்தி தாமரையின் அழகிய மொட்டுப் போன்ற, பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவையைப் பூசிய தோலும், முத்து மாலையும் அணிந்த, யானையின் தந்தம் போல் மேலிட்டெழுந்த மார்பகங்களும் உடைய விலைமாதர்களின் கூடச் சிக்காயவர் ஊழியமே பற்றிக் காதலின் ஓடிய கூள(னை)ச் சித்து ஆளனை மூளனை வினையேனை ... வசத்தில் அகப்பட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து ஆசையுடன் காலம் கழிக்கும் குப்பை போல் பயன் இல்லாதவனாகிய என்னை, சிற்றேவல் செய்யும் என்னை, சிற்றறிவுடன் செயல் படும் என்னை, வினைக்கு ஈடான என்னை, கோபித்துத் தாய் என நீ ஒரு போதத்தைப் பேச அதால் அருள் கோடித்துத் தான அடியேன் அடி பெற வேணும் ... நீ கண்டித்து, தாய் போல நீ ஒப்பற்றதான ஒரு ஞானத்தை உபதேசிக்க, அதனால் ஞானம் பெற்றமையால் உனது திருவருளைப் புகழ்ந்து உன்னைப் பிரார்த்திக்க அடியேன் உன் திருவடியைப் பெற வேண்டுகிறேன். வேடிக்கைக்கார உதார குணா பத்மத் தாரணி காரண ... விநோதமான திருவிளையாடல்களைச் செய்பவனே, தாராள குணம் உடையவனே, தாமரை மலர் மாலை அணியும் மூலப்பொருளே, வீரச் சுத்தா மகுடா சமர் அடு தீரா வேலைக் கட்டாணி ... வீரனே, பரிசுத்தமானவனே, மகுடம் தரித்தவனே, போரில் (பகைவரைக்) கொல்லும் தீரனே, செய்யும் தொழிலில் சமர்த்தனே, மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே ... ரதம் ஓட்டுவதில் வல்ல சூரர்களுக்கு எல்லாம் மேலான சூரன் மீது வேலைச் செலுத்துபவனே, ஐராவதம் என்னும் யானையின் மீது சீரான திருவருள் ஊறிய இளையவனே, ஆடத் தக்கார் உமை பாதியர் வேதப் பொன் கோவண ஆடையர் ஆலித்துத் தான் அருள் ஊறிய முருகோனே ... கூத்தாட வல்லவர், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவர், வேதத்தையே அழகிய கோவணமாகக் கொண்டவர் ஆகிய சிவபிரான் களித்து மகிழ்ச்சி பூண்டு திருவருள் சுரந்த குழந்தை முருகனே, ஆடப் பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறைப் பொன் கோயிலின் மேவிய பெருமாளே. ... பொன்னாலாகிய கோபுரத்தைக் கொண்டதும், கண்ணாடிக்கு ஒப்பான மதில் சூழ்ந்த பழையாறை என்னும் தலத்தின் அழகிய கோவிலில் வீற்றிருக்கும் பெருமாளே.