அலங்காரமான கிரீடமும், ஒளி நிறைந்த ஆறு திருமுகங்களில் அழகுடன் அசைந்தாடும் குண்டலங்களும், கவசமும், திரண்ட புஜங்களின் மீது போதுமானவரை சூடிய பூமாலைகள், ரத்தின மாலைகள் வரிசையாகப் புரண்டு ஆடவும், திருக்கரங்களில் அணிந்துள்ள மோதிரங்களும், புனைந்துள்ள வீரக் கடகமும், ஒளி வீசும் வேலும், சிலம்பும், அழகிய வேத ஒலியைச் செய்யும் சலங்கையும், இவைகள் ஓசை மிகுந்த ஒலி செய்ய, செந்நிறமாய், மணம்வீசும் மலர்களைப் புனைந்துள்ள திருவடிகள் (இந்த தாளத்துக்கு) நாள்தோறும் நீ நடனம் செய்யும் அழகையும் - இவை எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லித் துதிக்க மாட்டேனோ? இலங்கைக்கு அரசனான ராவணனின் அசோக வனத்தில் அழகான குரங்காம் அனுமனை அனுப்பி இலங்கையை எரியூட்டி புகையை மூட்டிவிட்டவரும், மென்மையான மகரந்தம் கொண்ட செந்தாமரை மீது அமரும் லக்ஷ்மியாம் சீதையைச் சிறையிலிருந்து மீட்டியவரும், இளமை வாய்ந்தவரும், கருமுகிலைப் போன்ற நிறம் கொண்டவரும், கொடிய அம்பையும் வளைந்த வில்லையும் கையில் ஏந்தியவரும், தந்தை ஆணையால் இருண்ட கானகத்தில் நடந்து வனவாசம் செய்தவருமான ஸ்ரீராமனுக்கு (திருமாலுக்கு) இனியவனே, குலபலமும், கொடிய படைபலமும் படைத்த அசுரர்களின் பெரிய சேனையை அழிப்பதற்காக போர்க்களத்தில், கொடியதும், கூர்மையானதும், ஒளிமயமானதுமான வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, செழித்த சோலைகளிலும், மலர்ப் பூங்காக்களிலும் கரும்பு ஆலைகள் இயங்குவதால் ஏற்படும் ஓசை கேட்கும் திருக்குரங்காடுதுறைத் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.