அம்பு ராசியில் கெண்டை சேலொளித்து அஞ்சவே
மணிக் குழைவீசும் அங்க(ண்)ணாரிடத்து
இன்ப சாகரத்து அங்கி மூழ்கும் இச்சையினாலே
எம்பிரான் உனைச் சிந்தியாது ஒழித்து
இந்த்ர சால இப் ப்ரமைதீர இங்கு வாவெனப் பண்பினால் அழைத்து
எங்குமான மெய்ப் பொருள்தாராய்
கொம்பு போல் இடைத் தொண்டை போல் இதழ்க் கொண்டல் போல்குழல்
கனமேருக் குன்று போல்முலைப் பைங்கி ராதியைக் கொண்ட கோலசற் குணவேலா
சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப் பெருமாளே.
கடலில் உள்ள கெண்டை மீன், சேல் மீன் பயந்து ஒளிந்திடுமாறு, ரத்தினக் குண்டலங்கள் உள்ள காதுவரை பாய்ந்தோடும் அழகிய கண்களை உடைய மாதர்களிடம் கிடைக்கும் இன்பக்கடல் போன்ற நெருப்பில் முழுகும் காம விருப்பால், எம்பெருமானே, உன்னை நான் தியானிக்காத வண்ணம் என்னைப் பிரிக்கும் மாயவித்தை போன்ற இந்த மயக்க அறிவு நீங்க, இங்கே வா என்று ஆட்கொள்ளும் முறையில் அழைத்து, எங்கும் நிறைந்துள்ளதான உண்மைப் பொருளை உபதேசித்து அருள்க. கொடி போன்ற மெல்லிய இடுப்பு, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாய் இதழ், மேகம் போன்ற கூந்தல், பருத்த மேருமலையைப் போன்ற மார்பகம் - இவற்றை உடைய அழகிய வேட்டுவப் பெண் வள்ளியை மணம்கொண்ட அழகிய நற்குண வேலனே, மன்மதனைக் கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு உபதேசம் செய்த குருநாதனே, திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால் கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
அம்பு ராசியில் கெண்டை சேலொளித்து அஞ்சவே ... கடலில் உள்ள கெண்டை மீன், சேல் மீன் பயந்து ஒளிந்திடுமாறு, மணிக் குழைவீசும் அங்க(ண்)ணாரிடத்து ... ரத்தினக் குண்டலங்கள் உள்ள காதுவரை பாய்ந்தோடும் அழகிய கண்களை உடைய மாதர்களிடம் கிடைக்கும் இன்ப சாகரத்து அங்கி மூழ்கும் இச்சையினாலே ... இன்பக்கடல் போன்ற நெருப்பில் முழுகும் காம விருப்பால், எம்பிரான் உனைச் சிந்தியாது ஒழித்து ... எம்பெருமானே, உன்னை நான் தியானிக்காத வண்ணம் என்னைப் பிரிக்கும் இந்த்ர சால இப் ப்ரமைதீர இங்கு வாவெனப் பண்பினால் அழைத்து ... மாயவித்தை போன்ற இந்த மயக்க அறிவு நீங்க, இங்கே வா என்று ஆட்கொள்ளும் முறையில் அழைத்து, எங்குமான மெய்ப் பொருள்தாராய் ... எங்கும் நிறைந்துள்ளதான உண்மைப் பொருளை உபதேசித்து அருள்க. கொம்பு போல் இடைத் தொண்டை போல் இதழ்க் கொண்டல் போல்குழல் ... கொடி போன்ற மெல்லிய இடுப்பு, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாய் இதழ், மேகம் போன்ற கூந்தல், கனமேருக் குன்று போல்முலைப் பைங்கி ராதியைக் கொண்ட கோலசற் குணவேலா ... பருத்த மேருமலையைப் போன்ற மார்பகம் - இவற்றை உடைய அழகிய வேட்டுவப் பெண் வள்ளியை மணம்கொண்ட அழகிய நற்குண வேலனே, சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா ... மன்மதனைக் கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு உபதேசம் செய்த குருநாதனே, சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப் பெருமாளே. ... திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால் கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே.