தந்த தானன தான தான தத்த தந்த தந்த தானன தான தான தத்த தந்த தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான
கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள் மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
கந்த வார் குழல் கோதி மாலையைப் புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து
கண்ட(ம்) மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே கண்ட பேரை எ(ல்)லாம் அவாவினில் கொணர்ந்து
வண் பயோதர பார மேருவை திறந்து கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலை கூறி
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் பறு வாயை வைத்து அருந்தி மந்த மாருதம் வீசு பாயலில் புணர்ந்து மயல் பூணும்
மங்கைமார் அநுபோக தீ வினைப் பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே
இந்த்ர தாருவை ஞால(ம்) மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே
எண் திசா முக வேலை ஞாலம் முற்று(ம்) மண்டு கந்த
தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர்வேலா
சந்த்ர சேகரி நாக பூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆல போஜனத்தி அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே.
நறு மணம் வீசும் நீண்ட கூந்தலைச் சிக்கெடுத்து வாரி, மாலையைச் சூடிக்கொண்டு, மஞ்சளை அழகுடன் உடலில் நிரம்பப் பூசி, கழுத்தில் மாலைகளாக உயர்தரமான முத்து மாலைகளை அணிந்து, தெருவில் பார்த்த பேர்வழிகளை எல்லாம் ஆசையுடன் அழைத்துக் கொண்டு வந்து, வளப்பம் உள்ள, கனத்த மேரு மலையை ஒத்த மார்பகங்களைத் திறந்து காட்டி, கண்கள் என்னும் கூர்மையான வேலாயுதத்தை வேகமாகச் செலுத்தி, (தமக்கு வேண்டிய) விலையைப் பேசி, வந்தவர்களைக் கையால் எடுத்துத் தழுவிக் கொண்டு, தேன் போல் இனிக்கும் வாயிதழ் ஊறலை உதடுகளில் வைத்துக் குடிக்கச்செய்து, தென்றல் வீசும் படுக்கையில் புணர்ந்து காம மயக்கம் கொள்ளும், விலைமாதர்களுடன் அநுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புகள் எல்லாம் தொலைந்து போகும்படி, ஞான வித்தையைக் கொடுத்து, வண்டுகள் உலாவும் கடப்ப மாலை என் முன் சற்றே விளங்க வருவாயாக. இந்திரலோகத்து கற்பக விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும் கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே, எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும் நிறைந்து விளங்கும் கந்தனே, தாருகாசுரனும் அவன் சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ் கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே, சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக் கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே, அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன் வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே.
கந்த வார் குழல் கோதி மாலையைப் புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து ... நறு மணம் வீசும் நீண்ட கூந்தலைச் சிக்கெடுத்து வாரி, மாலையைச் சூடிக்கொண்டு, மஞ்சளை அழகுடன் உடலில் நிரம்பப் பூசி, கண்ட(ம்) மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே கண்ட பேரை எ(ல்)லாம் அவாவினில் கொணர்ந்து ... கழுத்தில் மாலைகளாக உயர்தரமான முத்து மாலைகளை அணிந்து, தெருவில் பார்த்த பேர்வழிகளை எல்லாம் ஆசையுடன் அழைத்துக் கொண்டு வந்து, வண் பயோதர பார மேருவை திறந்து கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலை கூறி ... வளப்பம் உள்ள, கனத்த மேரு மலையை ஒத்த மார்பகங்களைத் திறந்து காட்டி, கண்கள் என்னும் கூர்மையான வேலாயுதத்தை வேகமாகச் செலுத்தி, (தமக்கு வேண்டிய) விலையைப் பேசி, வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் பறு வாயை வைத்து அருந்தி மந்த மாருதம் வீசு பாயலில் புணர்ந்து மயல் பூணும் ... வந்தவர்களைக் கையால் எடுத்துத் தழுவிக் கொண்டு, தேன் போல் இனிக்கும் வாயிதழ் ஊறலை உதடுகளில் வைத்துக் குடிக்கச்செய்து, தென்றல் வீசும் படுக்கையில் புணர்ந்து காம மயக்கம் கொள்ளும், மங்கைமார் அநுபோக தீ வினைப் பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே ... விலைமாதர்களுடன் அநுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புகள் எல்லாம் தொலைந்து போகும்படி, ஞான வித்தையைக் கொடுத்து, வண்டுகள் உலாவும் கடப்ப மாலை என் முன் சற்றே விளங்க வருவாயாக. இந்த்ர தாருவை ஞால(ம்) மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே ... இந்திரலோகத்து கற்பக விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும் கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே, எண் திசா முக வேலை ஞாலம் முற்று(ம்) மண்டு கந்த ... எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும் நிறைந்து விளங்கும் கந்தனே, தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர்வேலா ... தாருகாசுரனும் அவன் சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ் கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே, சந்த்ர சேகரி நாக பூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆல போஜனத்தி அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா ... சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக் கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே, சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே. ... அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன் வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே.