மரு உலாவிடும் ஓதி குலைப்பவர்
சமர வேல் எனு(ம்) நீடு விழிச்சியர்
மனதிலே கபடு ஊரு பரத்தையர்
ரதி கேள்வர் மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர்
இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர்
மதுர மா மொழி பேசு(ம்) குணத்தியர்
தெரு மீதே சருவி யாரையும் வா என அழைப்பவர்
பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே
சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ்
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே
அரிய கானகம் மேவும் குறத்தி தன் இதணிலே சில நாளு(ம்) மனத்துடன் அடவி தோறுமெ வாழ் இயல் பத்தினி மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப் பட உழவர் சாகரம் ஓடி ஒளித்திட அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே
திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை ஆளு(ம்) துறைப் பதி
திசையில் நான் மறை தேடிய முன் குடி
விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே.
நறுமணம் உலவும் கூந்தலை வேண்டுமென்றே அவிழ்ப்பவர்கள், போருக்கு உற்ற வேல் என்று சொல்லத் தக்க நீண்ட கண்களை உடையவர்கள், உள்ளத்தில் வஞ்சனை ஊர்கின்ற வேசியர்கள், ரதியின் கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும், போருக்கு ஏற்றதுமான இடையை உடையவர்கள், இளைஞர்களின் அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற மார்பகங்களை உடையவர்கள், இனிமையான பெரிய பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள், தெருவில் கொஞ்சிக் குலாவி யாரையும் (வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள், பொருள் பெறுவதிலேயே மிக்க ஆசை பரந்துள்ள மனத்தினர்கள், எல்லா விதமான வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய வேசியரை நான் நெருங்காமல், தாமரையை ஒத்த உனது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை மனம் குளிர மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக. அருமையான (வள்ளி மலைக்) காட்டில் இருந்த குறப்பெண்ணின் பரண் மீது சிறிது காலம் மனம் வைத்து, (சந்தனக்காடு, சண்பகக் காடு முதலிய) பல காடுகள் தோறும் வாழ்ந்து உலவிய பத்தினி வள்ளியின் காதல் கணவனே, அசுரர்கள் இருப்பிடம் யாவும் பொடியாக, அசுரப் படை வீரர்கள் கடலுள் ஓடி ஒளிந்து கொள்ள, தேவர்களின் பொன்னுலகத்தில் பொன் மழை மிகப் பொழிய நினைந்து உதவியவனே, லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் [1] என்னும் தலம், உண்பதற்குரிய திருச்சோற்றுத்துறை [2] என்ற தலம், திசைகள் தோறும் நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய திருவேதிக்குடி [3] என்ற தலம், பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்) கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் [4] என்ற தலம், தாமரையில் வாழும் நாயகனான சூரியன் பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி [5] என்ற தலம், திருநெய்த்தானம் [6], திருவையாறு [7] என்ற தலங்களுடன், ஏழு திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்) வாழ்கின்ற பெருமாளே.
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் ... நறுமணம் உலவும் கூந்தலை வேண்டுமென்றே அவிழ்ப்பவர்கள், சமர வேல் எனு(ம்) நீடு விழிச்சியர் ... போருக்கு உற்ற வேல் என்று சொல்லத் தக்க நீண்ட கண்களை உடையவர்கள், மனதிலே கபடு ஊரு பரத்தையர் ... உள்ளத்தில் வஞ்சனை ஊர்கின்ற வேசியர்கள், ரதி கேள்வர் மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் ... ரதியின் கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும், போருக்கு ஏற்றதுமான இடையை உடையவர்கள், இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர் ... இளைஞர்களின் அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற மார்பகங்களை உடையவர்கள், மதுர மா மொழி பேசு(ம்) குணத்தியர் ... இனிமையான பெரிய பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள், தெரு மீதே சருவி யாரையும் வா என அழைப்பவர் ... தெருவில் கொஞ்சிக் குலாவி யாரையும் (வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள், பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் ... பொருள் பெறுவதிலேயே மிக்க ஆசை பரந்துள்ள மனத்தினர்கள், சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே ... எல்லா விதமான வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய வேசியரை நான் நெருங்காமல், சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் ... தாமரையை ஒத்த உனது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே ... மனம் குளிர மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக. அரிய கானகம் மேவும் குறத்தி தன் இதணிலே சில நாளு(ம்) மனத்துடன் அடவி தோறுமெ வாழ் இயல் பத்தினி மணவாளா ... அருமையான (வள்ளி மலைக்) காட்டில் இருந்த குறப்பெண்ணின் பரண் மீது சிறிது காலம் மனம் வைத்து, (சந்தனக்காடு, சண்பகக் காடு முதலிய) பல காடுகள் தோறும் வாழ்ந்து உலவிய பத்தினி வள்ளியின் காதல் கணவனே, அசுரர் வீடுகள் நூறு பொடிப் பட உழவர் சாகரம் ஓடி ஒளித்திட அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே ... அசுரர்கள் இருப்பிடம் யாவும் பொடியாக, அசுரப் படை வீரர்கள் கடலுள் ஓடி ஒளிந்து கொள்ள, தேவர்களின் பொன்னுலகத்தில் பொன் மழை மிகப் பொழிய நினைந்து உதவியவனே, திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை ஆளு(ம்) துறைப் பதி ... லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் [1] என்னும் தலம், உண்பதற்குரிய திருச்சோற்றுத்துறை [2] என்ற தலம், திசையில் நான் மறை தேடிய முன் குடி ... திசைகள் தோறும் நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய திருவேதிக்குடி [3] என்ற தலம், விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி ... பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்) கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் [4] என்ற தலம், பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே. ... தாமரையில் வாழும் நாயகனான சூரியன் பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி [5] என்ற தலம், திருநெய்த்தானம் [6], திருவையாறு [7] என்ற தலங்களுடன், ஏழு திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்) வாழ்கின்ற பெருமாளே.