சொரியும் மா முகிலோ இருளோ குழல்
சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி
சுரர் தம் ஆர அமுதோ குயிலோ மொழி
இதழ் கோவை துவர் அதோ இலவோ
தெரியா இடை துகள் இலா அ(ன்)னமோ பிடியோ நடை
துணை கொள் மா மலையோ முலை தான் என உரை ஆடி
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு பகடியே படியா ஒழியா இடர் படு மாயப் பரவை மீது அழியா வகை
ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில் கனகன் மார்பு அது பீறிய ஆளரி
கன மாயக் கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீது உற நூறிய கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே
திரி புராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள் கூர்பவர் தெரிவை பாதியார் சாதி இலாதவர் தருசேயே சிகர பூதர நீறு செய் வேலவ
திமிர மோகரம் வீர திவாகர திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே.
கூந்தல் மழையாய் சொரிந்து விழும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ? கண்கள் ஒளிகொண்ட இரு வாள்களோ, அல்லது மானின் கண்களோ? தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ? வாயிதழ் கொவ்வைக் கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ? இவர்களின் இடுப்பு கண்ணுக்கே தெரியாததோ? நடை குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ? மார்பகங்கள் இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ? - என்றெல்லாம் உவமைகள் எடுத்துப் பேசி, அன்புடன் என்னை ஆண்டருளுக, நான் ஒரு குற்றமும் இல்லாதவன் என்று ஒளி மிக்க நெற்றியை உடைய மாதர்களுடன் வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத துன்பத்துக்கு இடமான (இந்தப் பிறவிச் சுழல்) என்னும் மாயக் கடலில் அழியாதபடி, ஞானிகள் போற்றுகின்ற பெரும் புகழே உருவான சிறந்த மேலான மோட்சத்தைச் சேர்வதும், அங்ஙனம் சேரத் தகுந்தவன் ஆவதுமான, ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? கரு நிற உடல் உடையவன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், திருமால், (ஆதிசேஷன் என்ற) பாம்பணையின் மேல் (துயில்) வளர் கரிய மேகம் போன்றவன், பொன்னிறம் படைத்த கனகன் (இரணியனுடைய) மார்பைப் பிளந்த நரசிம்மன், வலிமையான மாயங்களில் வல்ல வஞ்சகனாகிய ராவணனின் சிறந்த பத்து முடிகளும் ஒரே பாணத்தால் நிலத்தின் மேல் விழும்படி தூளாக்கிய கருணை மிகுத்த திருமால், (வாலி என்னும்) குரங்கைக் கோபித்தவனும், கிருபைக்கு இடமானவனுமான விஷ்ணுவின் மருகனே, திரிபுர அசுரர்கள் பொடியாகுமாறும், தேவர்கள் விளங்கும் பொருட்டும், (திரிபுராதிகள் மீது) கோபித்து (தேவர்களுக்கு) அருள் பாலிப்பவர், உமா தேவிக்குத் தன் உடலில் பாதியைக் கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையை தூளாக்கி அழித்த வேலவனே, அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்க வல்ல வீர ஞானபானுவே, திருவையாற்றில் வீற்றிருக்கும் தேவனே, கிருபாகர மூர்த்தியே, பெருமாளே.
சொரியும் மா முகிலோ இருளோ குழல் ... கூந்தல் மழையாய் சொரிந்து விழும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ? சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி ... கண்கள் ஒளிகொண்ட இரு வாள்களோ, அல்லது மானின் கண்களோ? சுரர் தம் ஆர அமுதோ குயிலோ மொழி ... தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ? இதழ் கோவை துவர் அதோ இலவோ ... வாயிதழ் கொவ்வைக் கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ? தெரியா இடை துகள் இலா அ(ன்)னமோ பிடியோ நடை ... இவர்களின் இடுப்பு கண்ணுக்கே தெரியாததோ? நடை குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ? துணை கொள் மா மலையோ முலை தான் என உரை ஆடி ... மார்பகங்கள் இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ? - என்றெல்லாம் உவமைகள் எடுத்துப் பேசி, பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு பகடியே படியா ஒழியா இடர் படு மாயப் பரவை மீது அழியா வகை ... அன்புடன் என்னை ஆண்டருளுக, நான் ஒரு குற்றமும் இல்லாதவன் என்று ஒளி மிக்க நெற்றியை உடைய மாதர்களுடன் வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத துன்பத்துக்கு இடமான (இந்தப் பிறவிச் சுழல்) என்னும் மாயக் கடலில் அழியாதபடி, ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே ... ஞானிகள் போற்றுகின்ற பெரும் புகழே உருவான சிறந்த மேலான மோட்சத்தைச் சேர்வதும், அங்ஙனம் சேரத் தகுந்தவன் ஆவதுமான, ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில் கனகன் மார்பு அது பீறிய ஆளரி ... கரு நிற உடல் உடையவன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், திருமால், (ஆதிசேஷன் என்ற) பாம்பணையின் மேல் (துயில்) வளர் கரிய மேகம் போன்றவன், பொன்னிறம் படைத்த கனகன் (இரணியனுடைய) மார்பைப் பிளந்த நரசிம்மன், கன மாயக் கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீது உற நூறிய கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே ... வலிமையான மாயங்களில் வல்ல வஞ்சகனாகிய ராவணனின் சிறந்த பத்து முடிகளும் ஒரே பாணத்தால் நிலத்தின் மேல் விழும்படி தூளாக்கிய கருணை மிகுத்த திருமால், (வாலி என்னும்) குரங்கைக் கோபித்தவனும், கிருபைக்கு இடமானவனுமான விஷ்ணுவின் மருகனே, திரி புராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள் கூர்பவர் தெரிவை பாதியார் சாதி இலாதவர் தருசேயே சிகர பூதர நீறு செய் வேலவ ... திரிபுர அசுரர்கள் பொடியாகுமாறும், தேவர்கள் விளங்கும் பொருட்டும், (திரிபுராதிகள் மீது) கோபித்து (தேவர்களுக்கு) அருள் பாலிப்பவர், உமா தேவிக்குத் தன் உடலில் பாதியைக் கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையை தூளாக்கி அழித்த வேலவனே, திமிர மோகரம் வீர திவாகர திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே. ... அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்க வல்ல வீர ஞானபானுவே, திருவையாற்றில் வீற்றிருக்கும் தேவனே, கிருபாகர மூர்த்தியே, பெருமாளே.