முகிலைக் காரைச் சருவிய குழல் அது சரியத் தாமத் தொடை வகை நெகிழ் தர முளரிப் பூவைப் பனி மதி தனை நிகர் முகம் வேர்வ
முனையில் காதிப் பொரு கணையினை இள வடுவைப் பானல் பரிமள நறை இதழ் முகையைப் போலச் சமர் செய்யும் இரு விழி குழை மோத
துகிரைக் கோவைக் கனி தனை நிகர் இதழ் பருகிக் காதல் துயர் அற வள நிறை துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களி கூர
சுடர் முத்து ஆரப் பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை துவளக் கூடி துயில்கினும் உனது அடி மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர் செய்யும் அசுரர்கள் கள(ம்) மீதே
குழறிக் கூளித் திரள் எழ வயிரவர் குவியக் கூடிக் கொடு வர அலகைகள் குணல் இட்டு ஆடிப் பசி கெட அயில் விடு குமரேசா
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழச் சூழத் திரு நடம் இடுபவர் செறி கண் காளப் பணி அணி இறையவர் தரு சேயே
சிகரப் பாரக் கிரி உறை குற மகள் கலசத் தாமத் தன கிரி தழுவிய திரு நெய்த் தானத்து உறைபவ சுரபதி பெருமாளே.
மேகத்தையும் இருளையும் கூடி நின்ற கூந்தலானது சரிந்து விழ, இடை அணியும் பூ மாலை வகைகளும் தளர்ந்து நெகிழ, தாமரை மலரையும் குளிர்ந்த சந்திரனையும் ஒத்த முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்ற, நுனியால் வெட்டுதல் போல முட்டுகின்றதும், போருக்கு உற்றதுமான அம்பை, இள மா வடுவை, கருங் குவளையை, நறுமணமும் தேனும் நிறைந்த தாமரை மொட்டின் இதழைப் போல் விளங்கி, போர் புரியும் இரண்டு கண்களும் காதில் உள்ள குண்டலங்களை மோத, பவளத்தையும் கொவ்வைக் கனியையும் ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு காம வருத்தம் நீங்க, வளப்பம் நிறைந்த இரண்டு அழகிய தோள்களிலும் என் உள்ளம் உருகி நின்று மகிழ்ச்சி மிகுந்திட, ஒளி வீசும் முத்து மாலையாகிய ஆபரணத்தை அணிந்துள்ளதும், கஸ்தூரி நிறைந்ததும், அழகுள்ளதும் கனம் உள்ளதும், நெகிழ்ச்சி கொண்டதும், குவிந்து தோன்றும் மார்பகங்கள் துவட்சியுறும்படி (பொது மகளிருடன்) கூடித் தூங்கினாலும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். (இவ்வாறான ஒலிகளுடன்) பறைகள் ஒன்று கூடிக் கோபத்தோடு முழங்க, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில் கூச்சலிட்டு பெருங் கழுகுகளின் கூட்டம் கூட, அஷ்ட பைரவர்கள் ஒன்று கூடி வர, பேய்கள் கொக்கரித்து ஆரவாரத்துடன் ஆடி தம் பசியை ஆற்றிக் கொள்ள, வேலைச் செலுத்திய குமரேசனே, செகசெச் சேசெச் செக என்று பறைகள் இவ்வாறு ஒலியை எழுப்பி முழங்கித் தம்மைச் சூழத் திரு நடனம் செய்பவர், (செவி உணர்ச்சியும்) கூடிய, கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை அணியாகச் சூடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடையதும், பருத்துப் பாரமுள்ளதுமான (வள்ளி) மலையில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் குடம் போன்றதும், பூ மாலை அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவனே, திருநெய்த்தானத்தில் வீற்றிருப்பவனே, தேவர்கள் பெருமாளே.
முகிலைக் காரைச் சருவிய குழல் அது சரியத் தாமத் தொடை வகை நெகிழ் தர முளரிப் பூவைப் பனி மதி தனை நிகர் முகம் வேர்வ ... மேகத்தையும் இருளையும் கூடி நின்ற கூந்தலானது சரிந்து விழ, இடை அணியும் பூ மாலை வகைகளும் தளர்ந்து நெகிழ, தாமரை மலரையும் குளிர்ந்த சந்திரனையும் ஒத்த முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்ற, முனையில் காதிப் பொரு கணையினை இள வடுவைப் பானல் பரிமள நறை இதழ் முகையைப் போலச் சமர் செய்யும் இரு விழி குழை மோத ... நுனியால் வெட்டுதல் போல முட்டுகின்றதும், போருக்கு உற்றதுமான அம்பை, இள மா வடுவை, கருங் குவளையை, நறுமணமும் தேனும் நிறைந்த தாமரை மொட்டின் இதழைப் போல் விளங்கி, போர் புரியும் இரண்டு கண்களும் காதில் உள்ள குண்டலங்களை மோத, துகிரைக் கோவைக் கனி தனை நிகர் இதழ் பருகிக் காதல் துயர் அற வள நிறை துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களி கூர ... பவளத்தையும் கொவ்வைக் கனியையும் ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு காம வருத்தம் நீங்க, வளப்பம் நிறைந்த இரண்டு அழகிய தோள்களிலும் என் உள்ளம் உருகி நின்று மகிழ்ச்சி மிகுந்திட, சுடர் முத்து ஆரப் பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை துவளக் கூடி துயில்கினும் உனது அடி மறவேனே ... ஒளி வீசும் முத்து மாலையாகிய ஆபரணத்தை அணிந்துள்ளதும், கஸ்தூரி நிறைந்ததும், அழகுள்ளதும் கனம் உள்ளதும், நெகிழ்ச்சி கொண்டதும், குவிந்து தோன்றும் மார்பகங்கள் துவட்சியுறும்படி (பொது மகளிருடன்) கூடித் தூங்கினாலும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர் செய்யும் அசுரர்கள் கள(ம்) மீதே ... (இவ்வாறான ஒலிகளுடன்) பறைகள் ஒன்று கூடிக் கோபத்தோடு முழங்க, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில் குழறிக் கூளித் திரள் எழ வயிரவர் குவியக் கூடிக் கொடு வர அலகைகள் குணல் இட்டு ஆடிப் பசி கெட அயில் விடு குமரேசா ... கூச்சலிட்டு பெருங் கழுகுகளின் கூட்டம் கூட, அஷ்ட பைரவர்கள் ஒன்று கூடி வர, பேய்கள் கொக்கரித்து ஆரவாரத்துடன் ஆடி தம் பசியை ஆற்றிக் கொள்ள, வேலைச் செலுத்திய குமரேசனே, செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழச் சூழத் திரு நடம் இடுபவர் செறி கண் காளப் பணி அணி இறையவர் தரு சேயே ... செகசெச் சேசெச் செக என்று பறைகள் இவ்வாறு ஒலியை எழுப்பி முழங்கித் தம்மைச் சூழத் திரு நடனம் செய்பவர், (செவி உணர்ச்சியும்) கூடிய, கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை அணியாகச் சூடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரப் பாரக் கிரி உறை குற மகள் கலசத் தாமத் தன கிரி தழுவிய திரு நெய்த் தானத்து உறைபவ சுரபதி பெருமாளே. ... சிகரங்களை உடையதும், பருத்துப் பாரமுள்ளதுமான (வள்ளி) மலையில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் குடம் போன்றதும், பூ மாலை அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவனே, திருநெய்த்தானத்தில் வீற்றிருப்பவனே, தேவர்கள் பெருமாளே.