நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத நாயக ரிடத்து காமி ...... மகமாயி நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாணுத லளித்த வீர ...... மயிலோனே மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம்
நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்
வேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு
நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ
பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு
பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய்
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான
பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ
நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத
நாயகரிடத்து காமி மகமாயி
நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத
நாயகி உமைச்சி நீலி திரிசூலி
வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
வாள் நுதல் அளித்த வீர மயிலோனே
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை
வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே.
நீர் இழிவு, குஷ்ட நோய், கோழை, வாயு இவைகளோடு பித்த நோய், வெகு நாளாக உள்ள குளிர் நோய், சுர நோய், மற்ற நோய்கள், வேர் ஊன்றி இருப்பதுவாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய், பிரமனால் படைக்கப்பட்டது (இந்த உடலாகிய) வீடு. நெடிதாய்ப் பரவி இருக்கும் ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் ஆகியவைகள் பொருந்திய பருத்த, ஒன்பது துவாரங்களை உடைய, நாற்றம் மிகுந்த, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வழியால் ஏற்படுகின்ற பிணி இவைகளால் ஆக்கப்பட்ட பொம்மை. நரியும் நாயும் பேயும் பருந்தும் கழுகுகளும் கோட்டான்களும் இவைகள் உண்ணுவதற்கு உரிய பாழான இந்த உடலை நான் எடுத்து வீண் பொழுது போக்கித் திரிவேனோ? துர்க்கை, முப்பத்திரண்டு அறங்களைப் புரிந்த தேவி, ஆறு சமயங்களையும் சார்ந்தவள், பூத கணங்களுக்குத் தலைவரான சிவபெருமானுடைய இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி, நடனங்களைச் செய்பவள், அழகிய நீல நிறம் உடையவள், வேதத் தலைவி, உமையம்மை, காளி, முத்தலைச் சூலத்தைக் கொண்டவள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், ஞானத்தைப் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத் தலைவி, மலை மகளாகிய, ஒளி வீசும் நெற்றியைக் கொண்ட பார்வதி தேவி பெற்ற வீரனே, மயில் வாகனனே, மாடங்களும் மதில்களும் முத்து இழைத்த மேடான தளங்களும் கோபுரங்களும் நறு மணம் வீசுகின்ற சோலைகளும் அழகாக வாய்ந்துள்ள குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த(ம்) மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள் ... நீர் இழிவு, குஷ்ட நோய், கோழை, வாயு இவைகளோடு பித்த நோய், வெகு நாளாக உள்ள குளிர் நோய், சுர நோய், மற்ற நோய்கள், வேர் உறு புழுக்கள் கூடு(ம்) நான் முகன் எடுத்த வீடு ... வேர் ஊன்றி இருப்பதுவாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய், பிரமனால் படைக்கப்பட்டது (இந்த உடலாகிய) வீடு. நீடிய இரத்த(ம்) மூளை தசை தோல் சீ ... நெடிதாய்ப் பரவி இருக்கும் ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் ஆகியவைகள் பொருந்திய பாரிய நவத் துவார நாறும் மு(ம்) மலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை ... பருத்த, ஒன்பது துவாரங்களை உடைய, நாற்றம் மிகுந்த, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வழியால் ஏற்படுகின்ற பிணி இவைகளால் ஆக்கப்பட்ட பொம்மை. நரி நாய் பேய் பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதானபாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ ... நரியும் நாயும் பேயும் பருந்தும் கழுகுகளும் கோட்டான்களும் இவைகள் உண்ணுவதற்கு உரிய பாழான இந்த உடலை நான் எடுத்து வீண் பொழுது போக்கித் திரிவேனோ? நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூத நாயகரிடத்து காமி மகமாயி ... துர்க்கை, முப்பத்திரண்டு அறங்களைப் புரிந்த தேவி, ஆறு சமயங்களையும் சார்ந்தவள், பூத கணங்களுக்குத் தலைவரான சிவபெருமானுடைய இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி, நாடக நடத்தி கோல நீல வருணத்தி வேத நாயகி உமைச்சி நீலி திரிசூலி ... நடனங்களைச் செய்பவள், அழகிய நீல நிறம் உடையவள், வேதத் தலைவி, உமையம்மை, காளி, முத்தலைச் சூலத்தைக் கொண்டவள், வார் அணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே ... கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், ஞானத்தைப் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத் தலைவி, மலை மகளாகிய, ஒளி வீசும் நெற்றியைக் கொண்ட பார்வதி தேவி பெற்ற வீரனே, மயில் வாகனனே, மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை ... மாடங்களும் மதில்களும் முத்து இழைத்த மேடான தளங்களும் கோபுரங்களும் நறு மணம் வீசுகின்ற சோலைகளும் வாகு உள குறட்டி மேவு(ம்) பெருமாளே. ... அழகாக வாய்ந்துள்ள குறட்டி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.