கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு
கலகக் காம நூலை முழுது உணர் இளைஞோர்கள் கலவிக்கு ஆசை கூர
வளர் பரிமள கற்பூர தூமம் கனதன கலகத்தாலும் வானின் அசையும் மின் இடையாலும்
விமலச் சோதி ரூப இமகர வதனத்தாலும்
நாத முதலிய விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும்
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும்
வடு வகிர் விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ
சமரில் பூதம் யாளி பரி பிணி கனகத் தேர்கள் யானை அவுணர்கள்
தகரக் கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே
சமுகப் பேய்கள் வாழி என எதிர் புகழக் கானில் ஆடு பரிபுர சரணத்து ஏக வீர அ(ம்) மை மன மகிழ் வீரா
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய்த் தோயு நாத
குற மகள் அணையச் சூழ நீத கர(ம்) மிசை உறு வேலா
அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின்
அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே.
தாமரையில் விளங்கும் லக்ஷ்மிக்கு ஒப்பான அழகிய அலங்காரம் உள்ள விலைமாதர்கள் மீது மோக மயக்கத்தைத் தருகின்றதும், கலக்கம் தரும் காம சாஸ்திரத்தை முற்றும் உணர்ந்த இளைஞர்களின் புணர்ச்சி இன்பத்துக்கு ஆசை மிக்கெழும்படியாகவும், நிரம்பிய நறு மணம் உள்ள பச்சைக் கற்பூரம், அகில் புகை போன்றவைகளைக் கொண்ட மார்பகங்கள் எழுப்பும் மனச் சலனத்தாலும், ஆகாயத்தில் அசையும் மின்னல் போன்ற இடுப்பாலும், களங்கம் இல்லாத ஒளிமயமான பனிக் கிரணம் கொண்ட சந்திர பிம்பத்தை ஒத்த முகத்தாலும், பாட்டு முதலியவை கலந்து எழச் செய்யும் வண்டுகள் சூழ்ந்துச் சுழலும் இருண்ட கரிய கூந்தலாலும், எப்போதும் ஒளி வீசுகின்ற ரத்தின மாலைகளை அணியும் அழகிய தோள்களாலும், மாவடுவின் கீற்றைப் போன்ற கண்களின் பார்வையாலும், இனிமேல் நான் துன்பம் அடைவேனோ? போரில் பூதம், யாளி, குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்கள், யானைகள், அசுரர்கள் ஆகியவை பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமையான உருவத்தனே, கூட்டமான பேய்கள் வாழி என்று எதிரே நின்று புகழ, சுடு காட்டில் (சிவனுடன்) நடனம் செய்யும் சிலம்பணிந்த திருவடிகளை உடைய, தன்னிகரில்லாத வீரம் வாய்ந்த தாயாகிய பார்வதி மனம் மகிழும் வீரனே, தேவர்களுக்குத் தலைவனான, இந்திராணியின் கணவனாகிய இந்திரனின் மகளான தேவயானையின் உடலைத் தழுவும் நாதனே, குறப் பெண்ணாகிய வள்ளி உன்னை அணைவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே, திருக்கையில் கொண்ட வேலாயுதனே. திருவருள் பாலிப்பதற்குப் புகழ் பெற்ற, பொய்யுறாத கணபதியும், அழகிய அக்னீசுரர் என்னும் பெயருடைய சிவபெருமானும் வீற்றிருக்கும் வயலூரின் அழகிய கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளே.
கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு ... தாமரையில் விளங்கும் லக்ஷ்மிக்கு ஒப்பான அழகிய அலங்காரம் உள்ள விலைமாதர்கள் மீது மோக மயக்கத்தைத் தருகின்றதும், கலகக் காம நூலை முழுது உணர் இளைஞோர்கள் கலவிக்கு ஆசை கூர ... கலக்கம் தரும் காம சாஸ்திரத்தை முற்றும் உணர்ந்த இளைஞர்களின் புணர்ச்சி இன்பத்துக்கு ஆசை மிக்கெழும்படியாகவும், வளர் பரிமள கற்பூர தூமம் கனதன கலகத்தாலும் வானின் அசையும் மின் இடையாலும் ... நிரம்பிய நறு மணம் உள்ள பச்சைக் கற்பூரம், அகில் புகை போன்றவைகளைக் கொண்ட மார்பகங்கள் எழுப்பும் மனச் சலனத்தாலும், ஆகாயத்தில் அசையும் மின்னல் போன்ற இடுப்பாலும், விமலச் சோதி ரூப இமகர வதனத்தாலும் ... களங்கம் இல்லாத ஒளிமயமான பனிக் கிரணம் கொண்ட சந்திர பிம்பத்தை ஒத்த முகத்தாலும், நாத முதலிய விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும் ... பாட்டு முதலியவை கலந்து எழச் செய்யும் வண்டுகள் சூழ்ந்துச் சுழலும் இருண்ட கரிய கூந்தலாலும், வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் ... எப்போதும் ஒளி வீசுகின்ற ரத்தின மாலைகளை அணியும் அழகிய தோள்களாலும், வடு வகிர் விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ ... மாவடுவின் கீற்றைப் போன்ற கண்களின் பார்வையாலும், இனிமேல் நான் துன்பம் அடைவேனோ? சமரில் பூதம் யாளி பரி பிணி கனகத் தேர்கள் யானை அவுணர்கள் ... போரில் பூதம், யாளி, குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்கள், யானைகள், அசுரர்கள் ஆகியவை தகரக் கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே ... பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமையான உருவத்தனே, சமுகப் பேய்கள் வாழி என எதிர் புகழக் கானில் ஆடு பரிபுர சரணத்து ஏக வீர அ(ம்) மை மன மகிழ் வீரா ... கூட்டமான பேய்கள் வாழி என்று எதிரே நின்று புகழ, சுடு காட்டில் (சிவனுடன்) நடனம் செய்யும் சிலம்பணிந்த திருவடிகளை உடைய, தன்னிகரில்லாத வீரம் வாய்ந்த தாயாகிய பார்வதி மனம் மகிழும் வீரனே, அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய்த் தோயு நாத ... தேவர்களுக்குத் தலைவனான, இந்திராணியின் கணவனாகிய இந்திரனின் மகளான தேவயானையின் உடலைத் தழுவும் நாதனே, குற மகள் அணையச் சூழ நீத கர(ம்) மிசை உறு வேலா ... குறப் பெண்ணாகிய வள்ளி உன்னை அணைவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே, திருக்கையில் கொண்ட வேலாயுதனே. அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின் ... திருவருள் பாலிப்பதற்குப் புகழ் பெற்ற, பொய்யுறாத கணபதியும், அழகிய அக்னீசுரர் என்னும் பெயருடைய சிவபெருமானும் வீற்றிருக்கும் வயலூரின் அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே. ... அழகிய கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளே.