கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும்
குறியாலும் கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்தங்(கு) கோதி வாரி முடிக்கும் குழலாலும் ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு
ஆசையாய் இ(ன்)னும் நித்தம் தளராதே ஆசு இலாத மறைக்கும் தேட ஒணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும் தேட ஒணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய்
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே.
கொவ்வைக் கனி போன்ற வாயிதழுக்கும், காம தாகத்தையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுக்கின்ற, மாலை அணிந்துள்ள விலைமாதர்களின் மார்பகத்துக்கும் வசப்பட்டு, பெண் குறியாலும், அழகிய மாலையை வளையப் புனைந்துள்ள தோள்களாலும், வாசனை தங்குவதும் அழகாகச் சிக்கெடுத்து வாரி முடிந்துள்ளதுமான கூந்தலாலும், கோடிக் கணக்கான உயிர்களை அழிக்கின்ற சேல் மீன் போன்ற கண்களாலும் மயக்கம் கொண்டு, ஆசை பூண்டவனாய் இன்னும் தினந்தோறும் நான் மனம் தளராமல், குற்றம் இல்லாத வேதங்களாலும் தேடிக் காண முடியாத ஒருவராகிய சிவபெருமானின் மனதுக்கு உவந்த, வெற்றி பொருந்திய உனது திருவடிகளை எனக்கு இன்று தந்தருள்க. ரிஷப (நந்தி) வாகனத்தின் மேல் ஏறுகின்ற நடன மூர்த்தி, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்டவன், காத்து அளிக்கும் தியாக சீலம் கொண்ட தூய ஒழுக்கமான குணம் கொண்டவன், திருமாலும் தேடிக் காண முடியாத திருவடிகளை உடையவன், தீமையே இல்லாத மனத்தை உடையவன், நெருப்பின் நிறம் உடையவன் (ஆகிய சிவபெருமானின்) மகனே. சோலைகள் நிறைந்த திருச் செங்கோட்டுப் பகுதியிலும், கருங்குவளை மலரும் நீர் நிலைகளும் சூழ்ந்துள்ள வயலூரிலும் விருப்பம் கொண்டுள்ளவனே, கொன்று மோதி எதிர்த்துப் போர் செய்யும் சூர தீரர்கள் வியக்கும்படியாக, யமனுடைய கொல்லும் தொழிலை (அவனுக்கு) இல்லாமல் (நீயே) செய்த பெருமாளே.
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் ... கொவ்வைக் கனி போன்ற வாயிதழுக்கும், காம தாகத்தையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுக்கின்ற, மாலை அணிந்துள்ள விலைமாதர்களின் மார்பகத்துக்கும் வசப்பட்டு, குறியாலும் கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்தங்(கு) கோதி வாரி முடிக்கும் குழலாலும் ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு ... பெண் குறியாலும், அழகிய மாலையை வளையப் புனைந்துள்ள தோள்களாலும், வாசனை தங்குவதும் அழகாகச் சிக்கெடுத்து வாரி முடிந்துள்ளதுமான கூந்தலாலும், கோடிக் கணக்கான உயிர்களை அழிக்கின்ற சேல் மீன் போன்ற கண்களாலும் மயக்கம் கொண்டு, ஆசையாய் இ(ன்)னும் நித்தம் தளராதே ஆசு இலாத மறைக்கும் தேட ஒணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே ... ஆசை பூண்டவனாய் இன்னும் தினந்தோறும் நான் மனம் தளராமல், குற்றம் இல்லாத வேதங்களாலும் தேடிக் காண முடியாத ஒருவராகிய சிவபெருமானின் மனதுக்கு உவந்த, வெற்றி பொருந்திய உனது திருவடிகளை எனக்கு இன்று தந்தருள்க. சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும் தேட ஒணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே ... ரிஷப (நந்தி) வாகனத்தின் மேல் ஏறுகின்ற நடன மூர்த்தி, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்டவன், காத்து அளிக்கும் தியாக சீலம் கொண்ட தூய ஒழுக்கமான குணம் கொண்டவன், திருமாலும் தேடிக் காண முடியாத திருவடிகளை உடையவன், தீமையே இல்லாத மனத்தை உடையவன், நெருப்பின் நிறம் உடையவன் (ஆகிய சிவபெருமானின்) மகனே. கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய் ... சோலைகள் நிறைந்த திருச் செங்கோட்டுப் பகுதியிலும், கருங்குவளை மலரும் நீர் நிலைகளும் சூழ்ந்துள்ள வயலூரிலும் விருப்பம் கொண்டுள்ளவனே, காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே. ... கொன்று மோதி எதிர்த்துப் போர் செய்யும் சூர தீரர்கள் வியக்கும்படியாக, யமனுடைய கொல்லும் தொழிலை (அவனுக்கு) இல்லாமல் (நீயே) செய்த பெருமாளே.