தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணை நினைப்பில் அடியேனை
தாதவிழ் கடுக்கை
நாகமகிழ் கற்ப தாருவென
மெத்திய விராலி மாமலையில்
நிற்ப நீகருதி யுற்று வாவென
அழைத்து என்மனதாசை மாசினை அறுத்து
ஞானமுது அளித்த வாரம்
இனி நித்த மறவேனே
காமனை யெரித்த தீநயன நெற்றி
காதிய சுவர்க்க நதி வேணி
கானிலுறை புற்றில் ஆடுபணி யிட்ட காது
உடைய அப்பர் குருநாதா
சோமனொடு அருக்கன் மீனுலவு
மிக்க சோலை புடைசுற்று வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடு
விடுத்து சூர்தலை துணித்த பெருமாளே.
தாமரைப்பூவிலேயே நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான உன் இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, மகரந்தப்பொடி விரியும் கொன்றை, சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து நிறைந்த விராலிப் பெருமலையில் யாம் நிற்போம் நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன். மன்மதனை எரித்த நெருப்புக்கண் உள்ள நெற்றியையும், வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய ஜடாமுடியையும், காட்டிலுள்ள புற்றில் படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும் கொண்ட தந்தை சிவனாரின் குருநாதனே, சந்திரனும், சூரியனும், நக்ஷத்திரங்களும் உலவும் உயரச் சோலைகள் சுற்றியும் உள்ள வயலூரனே, அகன்ற திருக்கை வேலினைக் கொண்டு, அதைச் செலுத்தி சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே.
தாமரையின் மட்டு வாசமல ரொத்த ... தாமரைப்பூவிலேயே நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான தாளிணை நினைப்பில் அடியேனை ... உன் இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, தாதவிழ் கடுக்கை ... மகரந்தப்பொடி விரியும் கொன்றை, நாகமகிழ் கற்ப தாருவென ... சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து மெத்திய விராலி மாமலையில் ... நிறைந்த விராலிப் பெருமலையில் நிற்ப நீகருதி யுற்று வாவென ... யாம் நிற்போம் நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைத்து என்மனதாசை மாசினை அறுத்து ... அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, ஞானமுது அளித்த வாரம் ... ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை இனி நித்த மறவேனே ... இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன். காமனை யெரித்த தீநயன நெற்றி ... மன்மதனை எரித்த நெருப்புக்கண் உள்ள நெற்றியையும், காதிய சுவர்க்க நதி வேணி ... வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய ஜடாமுடியையும், கானிலுறை புற்றில் ஆடுபணி யிட்ட காது ... காட்டிலுள்ள புற்றில் படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும் உடைய அப்பர் குருநாதா ... கொண்ட தந்தை சிவனாரின் குருநாதனே, சோமனொடு அருக்கன் மீனுலவு ... சந்திரனும், சூரியனும், நக்ஷத்திரங்களும் உலவும் மிக்க சோலை புடைசுற்று வயலூரா ... உயரச் சோலைகள் சுற்றியும் உள்ள வயலூரனே, சூடிய தடக்கை வேல்கொடு ... அகன்ற திருக்கை வேலினைக் கொண்டு, விடுத்து சூர்தலை துணித்த பெருமாளே. ... அதைச் செலுத்தி சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே.