நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ நெட்டை இணை விழி கணையோ பிணையோ
இனிது ஊறும் நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ நிற்கும் இள முலை குடமோ மலையோ
அறவே தேய்ந்து எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ இப் பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய்
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன் ரத்ந பரிபுர(ம்) இரு கால் ஒரு கால் மறவேனே
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திரு நீறு இடவே புக்க அனல் வயம் மிக ஏடு உயவே
உமையாள் தன் புத்ரன் என இசை பகர் மறை நூல் கற்ற தவ முனி பிரமா புரம் வாழ் பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும் சக்ரதர அரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே.
எண்ணெய்ப் பசை கொண்டதும் சுருண்டதுமான கூந்தல் கரு மணலோ, மேகமோ? தாமரை மலரின் நறு மணம் வீசும் நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? நீண்ட இரண்டு கண்களும் அம்போ, மானோ? இனிமையுடன் ஊறி நெகிழ்ந்து வரும் வாயூறலாகிய அமுதத்தைத் தரும் வாயிதழ் பழமோ, பவளமோ? பரிசுத்தமான கழுத்து சங்கோ, கமுக மரமோ? தாழாது நிற்கும் இள மார்பு குடமோ, மலையோ? அடியோடு தேய்ந்து போய் இளைத்த இடுப்பு கொடியோ, உடுக்கையோ? சிறந்த பெண்குறி பாம்போ, ரதமோ? இந்த அழகிய திருவடிகள் இரண்டும் பூவோ, தளிரோ? என்றெல்லாம் மோகம் கொண்டவனாய், காம இச்சையுடன் விலைமாதர்களுடன் பேசுதற்கு அந்த மயக்கமாகவே வீணாகத் திரிகின்ற நான், ரத்தினச் சிலம்பு அணிந்த உன் இரண்டு திருவடிகளையும் ஒரு காலும் மறக்க மாட்டேன். புத்தர்கள், சமணர்கள் மிகவும் அழிவுற, தென் பாண்டிய நாட்டு மன்னன் திரு நீறு இட, மூட்டிய நெருப்பினிடையே நல்ல வண்ணம் ஏடு (எரி படாது பச்சையாய்) ஊறு இல்லாது விளங்க, உமையம்மையின் பிள்ளை என்று சொல்லும்படி இசைத் தமிழால் இயற்றப்பட்ட நூலாகிய வேதம் அனைய தேவாரத்தை உணர்ந்து ஓதிய தவ முனியே, சீகாழியில் வாழ்ந்த புகழ்பெற்ற கவுணியர் குலத்தைச் சேர்ந்த பெருமான் திருவுருவத்துடன், திருஞான சம்பந்தராய் வந்தவனே, சக்தி வாய்ந்த அறுமுகனே, குகனே, மலைகளில் வீற்றிருக்கும் வேலனே, ஒளி வீசும் வேலாயுதனே, மயில் வாகனனே, சக்தி கணபதியின் தம்பியே, என்றும் எங்கும் உள்ளவனே, ஒளி மிக வீசும் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே, முருகனே, சினம் மிகுந்த இறையனார் சிவபெருமானின் மகனே, குளிர்ச்சி பொருந்திய நீர் நிலைகள் உள்ள வயலூரில் தகுதியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ நெட்டை இணை விழி கணையோ பிணையோ ... எண்ணெய்ப் பசை கொண்டதும் சுருண்டதுமான கூந்தல் கரு மணலோ, மேகமோ? தாமரை மலரின் நறு மணம் வீசும் நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? நீண்ட இரண்டு கண்களும் அம்போ, மானோ? இனிது ஊறும் நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ நிற்கும் இள முலை குடமோ மலையோ ... இனிமையுடன் ஊறி நெகிழ்ந்து வரும் வாயூறலாகிய அமுதத்தைத் தரும் வாயிதழ் பழமோ, பவளமோ? பரிசுத்தமான கழுத்து சங்கோ, கமுக மரமோ? தாழாது நிற்கும் இள மார்பு குடமோ, மலையோ? அறவே தேய்ந்து எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ இப் பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய் ... அடியோடு தேய்ந்து போய் இளைத்த இடுப்பு கொடியோ, உடுக்கையோ? சிறந்த பெண்குறி பாம்போ, ரதமோ? இந்த அழகிய திருவடிகள் இரண்டும் பூவோ, தளிரோ? என்றெல்லாம் மோகம் கொண்டவனாய், இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன் ரத்ந பரிபுர(ம்) இரு கால் ஒரு கால் மறவேனே ... காம இச்சையுடன் விலைமாதர்களுடன் பேசுதற்கு அந்த மயக்கமாகவே வீணாகத் திரிகின்ற நான், ரத்தினச் சிலம்பு அணிந்த உன் இரண்டு திருவடிகளையும் ஒரு காலும் மறக்க மாட்டேன். புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திரு நீறு இடவே புக்க அனல் வயம் மிக ஏடு உயவே ... புத்தர்கள், சமணர்கள் மிகவும் அழிவுற, தென் பாண்டிய நாட்டு மன்னன் திரு நீறு இட, மூட்டிய நெருப்பினிடையே நல்ல வண்ணம் ஏடு (எரி படாது பச்சையாய்) ஊறு இல்லாது விளங்க, உமையாள் தன் புத்ரன் என இசை பகர் மறை நூல் கற்ற தவ முனி பிரமா புரம் வாழ் பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே ... உமையம்மையின் பிள்ளை என்று சொல்லும்படி இசைத் தமிழால் இயற்றப்பட்ட நூலாகிய வேதம் அனைய தேவாரத்தை உணர்ந்து ஓதிய தவ முனியே, சீகாழியில் வாழ்ந்த புகழ்பெற்ற கவுணியர் குலத்தைச் சேர்ந்த பெருமான் திருவுருவத்துடன், திருஞான சம்பந்தராய் வந்தவனே, சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும் சக்ரதர அரி மருகா முருகா ... சக்தி வாய்ந்த அறுமுகனே, குகனே, மலைகளில் வீற்றிருக்கும் வேலனே, ஒளி வீசும் வேலாயுதனே, மயில் வாகனனே, சக்தி கணபதியின் தம்பியே, என்றும் எங்கும் உள்ளவனே, ஒளி மிக வீசும் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே, முருகனே, உக்ர இறையவர் புதல்வா முதல்வா தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே. ... சினம் மிகுந்த இறையனார் சிவபெருமானின் மகனே, குளிர்ச்சி பொருந்திய நீர் நிலைகள் உள்ள வயலூரில் தகுதியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.