கார் அணியும் குழலைக் குவித்து இடு கோகனகம் கொடு மெத்தெனப் பிறர் காண வருந்தி முடித்திட
கடு விரகாலே காது அளவும் கயலைப் புரட்டி
மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி
பூரண கும்பம் எனப் புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர பூஷித கொங்கையில் உற்று
முத்து அணி பிறையான போருவை ஒன்று நெகிழ்த்து உருக்கி மெய்
யாரையும் நெஞ்சை விலைப் படுத்திடு பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே
வீர புயம் கிரி உக்ர விக்ரம
பூத கணம் பல நிர்த்தம் இட்டிட வேகமுடன் பறை கொட்டிடக் கழுகு இனம் ஆட
வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி வீச நடம் செய் விடை தனித் துசர்
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா
சீர் அணியும் திரை தத்து(ம்) முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய
சீர் புனைகின்ற திருத்தவத் துறை வரும் வாழ்வே
சீறி எதிர்த்த அரக்கரைக் கெட மோதி அடர்ந்து அருள் பட்ச(ம்) முற்றிய தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே.
மேகத்தை ஒத்த கூந்தலை ஒன்று சேர்த்து அதில் அணியும் செந்தாமரை இதழ் போன்ற தங்க அணியை பக்குவமாக பிறர் காணும்படியாக சிரமப்பட்டு முடித்திட்டு, கடிய தந்திரத்தால் காது வரைக்கும் கயல் மீன் போன்ற கண்களைச் செலுத்தி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் அந்தக்கரணங்கள் எல்லாம் வஞ்சனை எண்ணமே அதிகரித்து, தங்களிடம் வந்து அடிபணியும் காமம் கொண்டவர்கள் ஆசை மயக்கத்துடன் வந்து கொட்டுகின்ற கைப்பொருளினால் உறவு ஏற்பட்டு, பூரண குடம் போல பருத்து எழுகின்ற, குளிர்ந்த செஞ்சாந்து தடவப்பட்டுள்ள, அழகிய, அலங்கரிக்கப்பட்ட மார்பிலே பொருந்த முத்துக்களால் ஆன, பிறைபோன்ற ஆபரணமாகத் தரித்திருக்கும் நகை ஒன்றைத் தளர்த்தி உடலை உருக்கி, யாராயிருந்தாலும் அவருடைய மனதைத் தமக்கு விற்பனையாகும்படி செய்கின்ற பொது மகளிர் மீதுள்ள காம மயக்கத்தை விட்டு ஒழிக்கும்படி அருள் புரிவாயாக. வீரம் மிக்க தோள் மலையை உடைய வலிமை வாய்ந்தவனே, பூத கணங்கள் பல நடனம் ஆட, வேகத்துடனே பறை வாத்தியங்கள் முழங்க, கழுகுக் கூட்டங்கள் ஆட, வீசி எறியப்பட்ட பம்பரம் போல் மகிழ்ச்சி பொங்க நடனம் செய்கின்ற, சிறப்பான ரிஷபக் கொடியை உடைய, சிவபெருமானும் வேத வழக்கில் முதன்மையான பார்வதியும் உள்ளம் மகிழ அவர்கள் எதிரில் வருகின்ற வீரனே, ஒழுங்கு பொருந்திய அலைகள் புரண்டு முத்துக்களை வீசி காவிரியின் கரை மேல் மோதி நிரப்புகின்ற அழகைக் கொண்டுள்ள திருத்தவத்துறையில் எழுந்தருளிய செல்வமே, கோபித்து எதிர்த்து வந்த அசுரர்களை கெட்டு அழியும்படி மோதி நெருக்கி, அருளும் அன்பும் நிறைந்த தேவர்களுடைய சிறையை வெட்டி நீக்கி அருளிய பெருமாளே.
கார் அணியும் குழலைக் குவித்து இடு கோகனகம் கொடு மெத்தெனப் பிறர் காண வருந்தி முடித்திட ... மேகத்தை ஒத்த கூந்தலை ஒன்று சேர்த்து அதில் அணியும் செந்தாமரை இதழ் போன்ற தங்க அணியை பக்குவமாக பிறர் காணும்படியாக சிரமப்பட்டு முடித்திட்டு, கடு விரகாலே காது அளவும் கயலைப் புரட்டி ... கடிய தந்திரத்தால் காது வரைக்கும் கயல் மீன் போன்ற கண்களைச் செலுத்தி, மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி ... மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் அந்தக்கரணங்கள் எல்லாம் வஞ்சனை எண்ணமே அதிகரித்து, தங்களிடம் வந்து அடிபணியும் காமம் கொண்டவர்கள் ஆசை மயக்கத்துடன் வந்து கொட்டுகின்ற கைப்பொருளினால் உறவு ஏற்பட்டு, பூரண கும்பம் எனப் புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர பூஷித கொங்கையில் உற்று ... பூரண குடம் போல பருத்து எழுகின்ற, குளிர்ந்த செஞ்சாந்து தடவப்பட்டுள்ள, அழகிய, அலங்கரிக்கப்பட்ட மார்பிலே பொருந்த முத்து அணி பிறையான போருவை ஒன்று நெகிழ்த்து உருக்கி மெய் ... முத்துக்களால் ஆன, பிறைபோன்ற ஆபரணமாகத் தரித்திருக்கும் நகை ஒன்றைத் தளர்த்தி உடலை உருக்கி, யாரையும் நெஞ்சை விலைப் படுத்திடு பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே ... யாராயிருந்தாலும் அவருடைய மனதைத் தமக்கு விற்பனையாகும்படி செய்கின்ற பொது மகளிர் மீதுள்ள காம மயக்கத்தை விட்டு ஒழிக்கும்படி அருள் புரிவாயாக. வீர புயம் கிரி உக்ர விக்ரம ... வீரம் மிக்க தோள் மலையை உடைய வலிமை வாய்ந்தவனே, பூத கணம் பல நிர்த்தம் இட்டிட வேகமுடன் பறை கொட்டிடக் கழுகு இனம் ஆட ... பூத கணங்கள் பல நடனம் ஆட, வேகத்துடனே பறை வாத்தியங்கள் முழங்க, கழுகுக் கூட்டங்கள் ஆட, வீசிய பம்பரம் ஒப்பு எனக் களி வீச நடம் செய் விடை தனித் துசர் ... வீசி எறியப்பட்ட பம்பரம் போல் மகிழ்ச்சி பொங்க நடனம் செய்கின்ற, சிறப்பான ரிஷபக் கொடியை உடைய, சிவபெருமானும் வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா ... வேத வழக்கில் முதன்மையான பார்வதியும் உள்ளம் மகிழ அவர்கள் எதிரில் வருகின்ற வீரனே, சீர் அணியும் திரை தத்து(ம்) முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய ... ஒழுங்கு பொருந்திய அலைகள் புரண்டு முத்துக்களை வீசி காவிரியின் கரை மேல் மோதி நிரப்புகின்ற சீர் புனைகின்ற திருத்தவத் துறை வரும் வாழ்வே ... அழகைக் கொண்டுள்ள திருத்தவத்துறையில் எழுந்தருளிய செல்வமே, சீறி எதிர்த்த அரக்கரைக் கெட மோதி அடர்ந்து அருள் பட்ச(ம்) முற்றிய தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே. ... கோபித்து எதிர்த்து வந்த அசுரர்களை கெட்டு அழியும்படி மோதி நெருக்கி, அருளும் அன்பும் நிறைந்த தேவர்களுடைய சிறையை வெட்டி நீக்கி அருளிய பெருமாளே.