முகில் அளகம் சரியாக் குழை இகல்வன கண் சிவவாச் சிவ(ம்) முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ
அநுபோக முலை புளகம் செய வார்த்தையு(ம்) நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமாக் கர(ம்) நுதல் சேர
துயர் ஒழுகும் செல பாத்திர(ம்) மெலிய மிகுத்து உதர அக்கினி துவள முயங்கி விடாய்த்து
அரிவையர் தோளின் துவயலி நின் தன வ்யாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு(ம்) நெஞ்சில் இராப் பகல் மறவேனே
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம் தனில் நாட்டிய மயில் ஏறி
அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ
அமரர் அடங்கலும் ஆட் கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே.
மேகம் போன்ற கரிய கூந்தல் சரிய, (காதிலுள்ள) குண்டலங்களோடு பகைத்து வருவன போன்ற கண்கள் சிவக்க, மகிழ்ச்சியைக் காட்டும் புன் சிரிப்புடன் கூடிய முகத்தில் சிறு வியர்வை தோன்ற, இன்ப நுகர்ச்சிக்கு இடமான மார்பகங்கள் புளகம் கொள்ள, பேச்சும் பதறுவது போல் எழ, குவிந்த தாமரையாக கைகள் நெற்றியில் சேர, துன்பமே பெருகுவதும், நீரோடு கூடியதுமான கொள்கலமாகிய இந்த உடல் மெலிந்து, வயிற்றில் எரி அதிகமாக, துவண்டு போகும் அளவுக்கு தழுவிப் புணர்ந்து களைப்பு அடைந்து, பெண்கள் தோள்களில் துவையல் போல் அரைக்கப் பட்ட நான் உன்னுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும், வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில் பொருந்தி விளங்கும் உனது வடிவழகையும் என் மனத்தில் இரவும் பகலும் மறக்க மாட்டேன். எங்கும் நிறைந்த பொருளாகிய பரமேசுரன், நட்சத்திரங்களுக்குத் தலைவனான இந்திரன் உய்யும் பொருட்டு தோற்றுவித்த சரவணபவனே, அறிவும், தெளிவும், வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்களைக் கொண்டவனாகி, போராடிய கிரவுஞ்ச மலை ஊடுருவிச் செல்லும்படி செலுத்திய வேலாயுதத்தால் போர்க் களத்தில் நடனம் செய்யும் மயில் மேல் ஏறி, எல்லாரும் பயப்படும்படியான கர்வத்தையும், தொந்தரையையும், அச்சத்தையும் தந்த வலிய ராக்ஷத அசுரர்களின் அகங்காரம் அழியும்படி கொடியில் விளங்கிய கோழி கூவ, தேவர்கள் எல்லாரும் ஆட்கொள்ளப் படவும், தேவர்கள் தங்கள் ஊருக்குக் குடி போகவும் அவர்களைச் (சூரனின்) சிறையினின்று மீட்டு அருளிய பெருமாளே.
முகில் அளகம் சரியாக் குழை இகல்வன கண் சிவவாச் சிவ(ம்) முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ ... மேகம் போன்ற கரிய கூந்தல் சரிய, (காதிலுள்ள) குண்டலங்களோடு பகைத்து வருவன போன்ற கண்கள் சிவக்க, மகிழ்ச்சியைக் காட்டும் புன் சிரிப்புடன் கூடிய முகத்தில் சிறு வியர்வை தோன்ற, அநுபோக முலை புளகம் செய வார்த்தையு(ம்) நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமாக் கர(ம்) நுதல் சேர ... இன்ப நுகர்ச்சிக்கு இடமான மார்பகங்கள் புளகம் கொள்ள, பேச்சும் பதறுவது போல் எழ, குவிந்த தாமரையாக கைகள் நெற்றியில் சேர, துயர் ஒழுகும் செல பாத்திர(ம்) மெலிய மிகுத்து உதர அக்கினி துவள முயங்கி விடாய்த்து ... துன்பமே பெருகுவதும், நீரோடு கூடியதுமான கொள்கலமாகிய இந்த உடல் மெலிந்து, வயிற்றில் எரி அதிகமாக, துவண்டு போகும் அளவுக்கு தழுவிப் புணர்ந்து களைப்பு அடைந்து, அரிவையர் தோளின் துவயலி நின் தன வ்யாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு(ம்) நெஞ்சில் இராப் பகல் மறவேனே ... பெண்கள் தோள்களில் துவையல் போல் அரைக்கப் பட்ட நான் உன்னுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும், வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில் பொருந்தி விளங்கும் உனது வடிவழகையும் என் மனத்தில் இரவும் பகலும் மறக்க மாட்டேன். சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி ... எங்கும் நிறைந்த பொருளாகிய பரமேசுரன், நட்சத்திரங்களுக்குத் தலைவனான இந்திரன் உய்யும் பொருட்டு தோற்றுவித்த சரவணபவனே, அறிவும், தெளிவும், வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்களைக் கொண்டவனாகி, சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம் தனில் நாட்டிய மயில் ஏறி ... போராடிய கிரவுஞ்ச மலை ஊடுருவிச் செல்லும்படி செலுத்திய வேலாயுதத்தால் போர்க் களத்தில் நடனம் செய்யும் மயில் மேல் ஏறி, அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ ... எல்லாரும் பயப்படும்படியான கர்வத்தையும், தொந்தரையையும், அச்சத்தையும் தந்த வலிய ராக்ஷத அசுரர்களின் அகங்காரம் அழியும்படி கொடியில் விளங்கிய கோழி கூவ, அமரர் அடங்கலும் ஆட் கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே. ... தேவர்கள் எல்லாரும் ஆட்கொள்ளப் படவும், தேவர்கள் தங்கள் ஊருக்குக் குடி போகவும் அவர்களைச் (சூரனின்) சிறையினின்று மீட்டு அருளிய பெருமாளே.