குருவும் அடியவர் அடியவர் அடிமையும்
அருண மணி அணி கண பண விதகர குடில செடிலினு(ம்)
நிகர் என வழிபடு குணசீலர் குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி
நலம் இலி பொறை இலி குசல கலை இலி தலை இலி நிலை இலி
விலைமாதர் மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும்
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே
வயலி நகரியில் அருள் பெற மயில் மிசை உதவு
பரிமள மது கர வெகு வித வனச மலர் அடி கனவிலும் மறவேனே
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட
வரைதனில் உரலினொடு தவழ் விரகு உள இளமையும்
மிக மாரி உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும்
நிலை கெட உலவு இல் நிலவறை உருவிய அருமையும்
ஒரு நூறு நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும்
நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே
நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய
குடக தமனியு(ம்) நளினமும் மருவிய
நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே.
குருவின் நிலையிலும், சீடனாக இருக்கும் போதும், அந்தச் சீடருக்கு அடிமையாக இருக்கும் நிலையிலும், சிவந்த ரத்தினங்களைக் கொண்டுள்ள, கூட்டமான படங்களை உடைய பாம்பின் தன்மையைக் கொண்ட, வளைவுள்ள குண்டலினி யோக நிலையிலும், ஒப்ப மனம் அடங்கி நின்று, உன்னையே வழிபடுகின்ற நற்குணங்களை உடைய சீலர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்து அவர்கள் வழி நடத்தல், போற்றுதல், விழுந்து வணங்குதல், (பக்திப் பரவசத்தால்) அழுதல் இவை ஏதும் நான் இல்லாதவன், நல்ல குணம் எதுவும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை பயக்கும் நூல்களைக் கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், நிலைத்த புத்தி இல்லாதவன், வேசியர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும், கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும், மகர மீன்களைப் போல் (காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத்) தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலைச்சல் உறாமல், வயலூர்ப் பதியில் அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். உருவம் பெரியதாய் பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ, அதனால் நீதி வெளிப்பட, (இடுப்பில் கட்டிய) மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட இளமை அழகையும், வலுத்த மழை பொழிய, பசுக்களின் துயர் நீங்க, நெருங்கிய (கோவர்த்தன) மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையான வலிமையையும், நிலை தடுமாற, உலவுவதற்கு இடமில்லாத பாதாள அறையில், (தேவகி - வசுதேவருக்காக) விஸ்வ ரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும், ஒப்பற்ற நூறு (துரியோதனன் முதலிய) அரசர்களும், போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய, அர்ச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திய (அடியார்க்கு உதவும்) எளிமையையும் பற்றி எல்லா பூமிகளும் புகழ்ந்து உரைக்கும் (கண்ணனாம்) திருமாலின் இனிய மருகனே, ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும், மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை என்னும் நகரில் வீற்றிருக்கும், அழகிய திருவுருவம் கொண்ட பெருமாளே.
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் ... குருவின் நிலையிலும், சீடனாக இருக்கும் போதும், அந்தச் சீடருக்கு அடிமையாக இருக்கும் நிலையிலும், அருண மணி அணி கண பண விதகர குடில செடிலினு(ம்) ... சிவந்த ரத்தினங்களைக் கொண்டுள்ள, கூட்டமான படங்களை உடைய பாம்பின் தன்மையைக் கொண்ட, வளைவுள்ள குண்டலினி யோக நிலையிலும், நிகர் என வழிபடு குணசீலர் குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி ... ஒப்ப மனம் அடங்கி நின்று, உன்னையே வழிபடுகின்ற நற்குணங்களை உடைய சீலர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்து அவர்கள் வழி நடத்தல், போற்றுதல், விழுந்து வணங்குதல், (பக்திப் பரவசத்தால்) அழுதல் இவை ஏதும் நான் இல்லாதவன், நலம் இலி பொறை இலி குசல கலை இலி தலை இலி நிலை இலி ... நல்ல குணம் எதுவும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை பயக்கும் நூல்களைக் கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், நிலைத்த புத்தி இல்லாதவன், விலைமாதர் மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் ... வேசியர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும், கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும், மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே ... மகர மீன்களைப் போல் (காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத்) தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலைச்சல் உறாமல், வயலி நகரியில் அருள் பெற மயில் மிசை உதவு ... வயலூர்ப் பதியில் அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த பரிமள மது கர வெகு வித வனச மலர் அடி கனவிலும் மறவேனே ... நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட ... உருவம் பெரியதாய் பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ, அதனால் நீதி வெளிப்பட, வரைதனில் உரலினொடு தவழ் விரகு உள இளமையும் ... (இடுப்பில் கட்டிய) மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட இளமை அழகையும், மிக மாரி உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் ... வலுத்த மழை பொழிய, பசுக்களின் துயர் நீங்க, நெருங்கிய (கோவர்த்தன) மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையான வலிமையையும், நிலை கெட உலவு இல் நிலவறை உருவிய அருமையும் ... நிலை தடுமாற, உலவுவதற்கு இடமில்லாத பாதாள அறையில், (தேவகி - வசுதேவருக்காக) விஸ்வ ரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும், ஒரு நூறு நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் ... ஒப்பற்ற நூறு (துரியோதனன் முதலிய) அரசர்களும், போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய, அர்ச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திய (அடியார்க்கு உதவும்) எளிமையையும் பற்றி நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே ... எல்லா பூமிகளும் புகழ்ந்து உரைக்கும் (கண்ணனாம்) திருமாலின் இனிய மருகனே, நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய ... ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும், குடக தமனியு(ம்) நளினமும் மருவிய ... மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே. ... நெருவை என்னும் நகரில் வீற்றிருக்கும், அழகிய திருவுருவம் கொண்ட பெருமாளே.