காந்தள் கர வளை சேந்து உற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி காந்தத்து உறவு என வீழ்ந்து
அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவிச் சாந்தைத் தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு
அயில் விழி குழை மீதே தாண்டிப் பொர உடை தீண்டித் தன கிரி தாங்கித் தழுவுதல் ஒழியேனோ
மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப் படி அருள் வயலூரா
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதிகாமி
பாந்தள் சடை முடி ஏந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி உடையாரும் பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே.
காந்தள் மலரைப் போன்ற, வளையல் அணிந்துள்ள, கைகள் சிவக்க, மன்மதனுடைய வில்லுக்குத் தோதாகும் மாதர்களுடன் ஊசிக்கும் காந்தத்துக்கும் உள்ள உறவைப் போல, அக் காம மயக்கத்தில் விழுந்து, அவ்வாறே பெண்குறியைக் காண்பதற்கு அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி, நறுஞ்சாந்து தடவப்பட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து, வேல் போன்ற கண்கள் (காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கும்படியாக, ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையைப் பிடித்துத் தழுவும் செயலை ஒழிக்க மாட்டேனோ? மனிதர்களுக்கும் தேவ அரசனாகிய இந்திரனுக்கும் அவரவர்களுடைய விருப்பப்படி அருள் பாலிக்கும் வயலூரனே, ஆகாயத்தைக் கிட்டிய பெரிய மூங்கில் காடு உள்ள (வள்ளிமலைத்) தினைப்புனத்தின் மீது இருந்த மான் போன்ற வள்ளியின் சிறிய பாதங்களைத் தொழுத காதல் மிக்கவனே, பாம்பை தனது சடா முடியில் தாங்கி விளங்குபவரும் பாண்டிக் கொடுமுடி என்னும் தலத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு, உரிய முறையில் மேலான குருவான சங்கற்பத்தோடு பண் போன்ற சொற்களைக் கொண்டு (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தளித்த பெருமாளே.
காந்தள் கர வளை சேந்து உற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி காந்தத்து உறவு என வீழ்ந்து ... காந்தள் மலரைப் போன்ற, வளையல் அணிந்துள்ள, கைகள் சிவக்க, மன்மதனுடைய வில்லுக்குத் தோதாகும் மாதர்களுடன் ஊசிக்கும் காந்தத்துக்கும் உள்ள உறவைப் போல, அக் காம மயக்கத்தில் விழுந்து, அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவிச் சாந்தைத் தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு ... அவ்வாறே பெண்குறியைக் காண்பதற்கு அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி, நறுஞ்சாந்து தடவப்பட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து, அயில் விழி குழை மீதே தாண்டிப் பொர உடை தீண்டித் தன கிரி தாங்கித் தழுவுதல் ஒழியேனோ ... வேல் போன்ற கண்கள் (காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கும்படியாக, ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையைப் பிடித்துத் தழுவும் செயலை ஒழிக்க மாட்டேனோ? மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப் படி அருள் வயலூரா ... மனிதர்களுக்கும் தேவ அரசனாகிய இந்திரனுக்கும் அவரவர்களுடைய விருப்பப்படி அருள் பாலிக்கும் வயலூரனே, வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதிகாமி ... ஆகாயத்தைக் கிட்டிய பெரிய மூங்கில் காடு உள்ள (வள்ளிமலைத்) தினைப்புனத்தின் மீது இருந்த மான் போன்ற வள்ளியின் சிறிய பாதங்களைத் தொழுத காதல் மிக்கவனே, பாந்தள் சடை முடி ஏந்திக் குலவிய பாண்டிக் கொடுமுடி உடையாரும் பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே. ... பாம்பை தனது சடா முடியில் தாங்கி விளங்குபவரும் பாண்டிக் கொடுமுடி என்னும் தலத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு, உரிய முறையில் மேலான குருவான சங்கற்பத்தோடு பண் போன்ற சொற்களைக் கொண்டு (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தளித்த பெருமாளே.