இரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும், பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும், குளிர்ச்சியுள்ள சோலையில் குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும், புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக) ஓசையைத் தருவதாலும், உன்னைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற கண்கள் சோர்வடைய, தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல், அவளின் நொந்த மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை அணிந்த மார்பிடத்தே, அருளே உருவான முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக. கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமரனே, இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழுக்குப் பெருமானே, பெரும் ஜோதி ஸ்வரூபனான சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம் என்ற பதியில் வீற்றிருப்பவனே, போருக்கு எழுந்த ஏழு கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க, ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்தவனே, புள்ளியை உடைய யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளையவனாகிய அற்புதப் பெருமாளே.
பரிவுறு நார் அற்று அழல்மதி வீச ... இரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும், சிலைபொரு காலுற்று அதனாலே ... பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும், பனிபடு சோலைக் குயிலது கூவ ... குளிர்ச்சியுள்ள சோலையில் குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும், குழல்தனி யோசைத் தரலாலே ... புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக) ஓசையைத் தருவதாலும், மருவியல் மாதுக்கு இருகயல் சோர ... உன்னைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற கண்கள் சோர்வடைய, தனிமிக வாடித் தளராதே ... தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல், மனமுற வாழத் திருமணி மார்பத்து ... அவளின் நொந்த மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை அணிந்த மார்பிடத்தே, அருள்முருகா உற்று அணைவாயே ... அருளே உருவான முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக. கிரிதனில் வேல்விட்டு இருதொளை யாகத் தொடுகுமரா ... கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமரனே, முத்தமிழோனே ... இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழுக்குப் பெருமானே, கிளரொளி நாதர்க்கு ஒருமகனாகி ... பெரும் ஜோதி ஸ்வரூபனான சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, திருவளர் சேலத்து அமர்வோனே ... லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம் என்ற பதியில் வீற்றிருப்பவனே, பொருகிரி சூரக் கிளையது மாள ... போருக்கு எழுந்த ஏழு கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க, தனிமயி லேறித் திரிவோனே ... ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்தவனே, புகர்முக வேழக் கணபதி யாருக்கு ... புள்ளியை உடைய யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளைய விநோதப் பெருமாளே. ... இளையவனாகிய அற்புதப் பெருமாளே.