உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
ஒலித்திடும் செவி செவிடு உற ஒள் கண் குருடாகி
உரத்த வெண் ப(ல்)லும் நழுவி
மதம் கெட்டு
இரைத்து கிண் கிண் என இருமல் எழுந்திட்டு
உளைப்புடன் தலை கிறு கிறு எனும் பித்தமும் மேல் கொண்டு
அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து
உளம் செயல் வசனம் வரம்பு அற்று
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து
அனைவோரும் அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி
துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு அவத்தை வந்து
உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்டு
இடக்கை துந்துமி முரசு முழங்க
செருக் களந்தனில் நிருதர் தயங்க
சில பேய்கள் தரித்து மண்டையில் உதிரம் அருந்த
திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா
தடம் சிகண்டியில் வயலியில்
அன்பைப் படைத்த நெஞ்சினில்
இயல் செறி கொங்கில் தனிச்சயம் தனில்
இனிது உறை கந்தப் பெருமாளே.
எல்லாரும் புகழும்படி மிக திடகாத்திரமாக இருந்த உருவம் வதங்கி, கறுப்பாக இருந்த தலை மயிரும் வெளுத்து பஞ்சு போல் ஆகி, நன்றாக ஒலிகளைக் கேட்டிருந்த காது செவிடாகி, ஒளி பொருந்திய கண்கள் குருடாகி, பலத்துடன் அழுத்தமாயிருந்த வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி விழுதலுற்று, நான் என்ற இறுமாப்பு நிலை அழிந்து, மூச்சு வாங்கி, கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகி, வேதனையுடன் தலை கிறுகிறு என்று பித்தமும் மேல் கொண்டு எழ, இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக உடல் வெளுத்து, மனம், வாக்கு, செயல் இவைகள் ஒரு அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து, சேர்ந்துள்ள மாதர்களும் எதிரே வந்து இகழ்ந்து பேச, யாவரும் (இவன்) அழுக்கன் என்று சொல்லும்படியாக உணர்ச்சி குறைந்து மரத்துப் போய், நாடி துடிப்பதும் கொஞ்சமே இருக்கின்றது, அது கூட இல்லை என்றே சொல்லலாம், என்னும் கஷ்டமான நிலையை அடைந்து, உயிர் வேதனைப்படும் அந்த நாளில் நீ எனக்கு அருள் புரிவாயாக. (இந்த ஒலிகளை) எழுப்பிக்கொண்டு, இடக்கையால் கொட்டும் தோற்கருவி துந்துமி, பேரிகை வகைகள் முழக்கமிட, போர்க்களத்தில் அசுரர்கள் கலக்கம் கொள்ள, சில பேய்கள் மண்டை ஓட்டை கையில் எடுத்து ஏந்தி இரத்தத்தைக் குடிக்க, கூட்டமான பருந்துகள் பிணங்களின் குடல்களைப் பிடுங்க, களிப்புறும் நரிகள் மாமிசத்தை சிந்திச் சிதற, சண்டை செய்யும் வேலனே, பெருமை வாய்ந்த மயில் மீதும், வயலூர் என்னும் தலத்திலும், அடியார்களின் அன்பான உள்ளத்திலும், தகுதி நிறைவுற்ற கொங்கு நாட்டில் உள்ள தனிச்சயம் என்னும் தலத்திலும், இன்பத்துடன் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி ... எல்லாரும் புகழும்படி மிக திடகாத்திரமாக இருந்த உருவம் வதங்கி, கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து ... கறுப்பாக இருந்த தலை மயிரும் வெளுத்து பஞ்சு போல் ஆகி, ஒலித்திடும் செவி செவிடு உற ஒள் கண் குருடாகி ... நன்றாக ஒலிகளைக் கேட்டிருந்த காது செவிடாகி, ஒளி பொருந்திய கண்கள் குருடாகி, உரத்த வெண் ப(ல்)லும் நழுவி ... பலத்துடன் அழுத்தமாயிருந்த வெள்ளை நிறம் கொண்ட பல்லும் நழுவி விழுதலுற்று, மதம் கெட்டு ... நான் என்ற இறுமாப்பு நிலை அழிந்து, இரைத்து கிண் கிண் என இருமல் எழுந்திட்டு ... மூச்சு வாங்கி, கிண் கிண் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகி, உளைப்புடன் தலை கிறு கிறு எனும் பித்தமும் மேல் கொண்டு ... வேதனையுடன் தலை கிறுகிறு என்று பித்தமும் மேல் கொண்டு எழ, அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து ... இரத்தம் இல்லாத புழுவைக் காட்டிலும் அதிகமாக உடல் வெளுத்து, உளம் செயல் வசனம் வரம்பு அற்று ... மனம், வாக்கு, செயல் இவைகள் ஒரு அளவு கடந்து ஒழுங்கீனமான நிலையை அடைந்து, அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து ... சேர்ந்துள்ள மாதர்களும் எதிரே வந்து இகழ்ந்து பேச, அனைவோரும் அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி ... யாவரும் (இவன்) அழுக்கன் என்று சொல்லும்படியாக உணர்ச்சி குறைந்து மரத்துப் போய், துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு அவத்தை வந்து ... நாடி துடிப்பதும் கொஞ்சமே இருக்கின்றது, அது கூட இல்லை என்றே சொல்லலாம், என்னும் கஷ்டமான நிலையை அடைந்து, உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே ... உயிர் வேதனைப்படும் அந்த நாளில் நீ எனக்கு அருள் புரிவாயாக. திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்டு ... (இந்த ஒலிகளை) எழுப்பிக்கொண்டு, இடக்கை துந்துமி முரசு முழங்க ... இடக்கையால் கொட்டும் தோற்கருவி துந்துமி, பேரிகை வகைகள் முழக்கமிட, செருக் களந்தனில் நிருதர் தயங்க ... போர்க்களத்தில் அசுரர்கள் கலக்கம் கொள்ள, சில பேய்கள் தரித்து மண்டையில் உதிரம் அருந்த ... சில பேய்கள் மண்டை ஓட்டை கையில் எடுத்து ஏந்தி இரத்தத்தைக் குடிக்க, திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க ... கூட்டமான பருந்துகள் பிணங்களின் குடல்களைப் பிடுங்க, தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா ... களிப்புறும் நரிகள் மாமிசத்தை சிந்திச் சிதற, சண்டை செய்யும் வேலனே, தடம் சிகண்டியில் வயலியில் ... பெருமை வாய்ந்த மயில் மீதும், வயலூர் என்னும் தலத்திலும், அன்பைப் படைத்த நெஞ்சினில் ... அடியார்களின் அன்பான உள்ளத்திலும், இயல் செறி கொங்கில் தனிச்சயம் தனில் ... தகுதி நிறைவுற்ற கொங்கு நாட்டில் உள்ள தனிச்சயம் என்னும் தலத்திலும், இனிது உறை கந்தப் பெருமாளே. ... இன்பத்துடன் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.