பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி
வளமொடு செந்தமிழுரைசெய
அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே
அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத
குறமகள் இங்கித மணவாளா
கருதரு திண்புய சரவண
குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் பெருமாளே.
யாவரும் துதிக்கும் நீண்ட கதிர்களை உடைய சூரியன் உலகுளோர் விரும்பும்படி உலா வரும் காட்சிதானோ (இந்தத் திருவடி) என்றும், சொல்லத்தக்க வளப்பங்களுக்கு ஒப்பாக விளங்குவதும், இருளைப் போக்கி உதிக்கும் நிலவொளிதானோ (இந்தத் திருவடி) என்றும், மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்து வரிசையான காட்சியைத் தரும் உன் திருவடியை நான் பாடி, சொல் வளம், பொருள் வளத்துடன் செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ, அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக. ஹர ஹர, அழகா, ஆறுமுகனே, என்று உன்னைத் தியானித்து, அடியார்கள் வணங்க மகிழ்ச்சி கொள்பவனே, ஹிமவானின் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற அம்மை உமாதேவி பெற்ற பிள்ளையே, குறமகள் வள்ளிக்கு இனிமையான மணவாளனே, நினைப்பதற்கு அருமையான திண்ணிய புயங்களை உடைய சரவணபவனே, குங்குமமும் சந்தனமும் சேர்த்து அணியும் அழகிய மார்பனே, பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்ற செழிப்பான தலத்தில் விளங்கி வீற்றிருந்து அருளும் பெருமாளே.