பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்
அளவளப் பதனாலே படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர்
கார்த்திகை வருது என உறு பொருள் பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே அழைப்பர்
ஆஸ்திகள் கருதுவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர்
அழிகுடி அரிவையர் அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ
அவத்தமாய்ச் சில படு குழி தனில் விழும் விபத்தை நீக்கி
உன் அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட் கொள மனதினில் அருள் செய்து கதி தனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறை பொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறி தனை
அடைவொடு தகப்பனார்க்கு ஒரு செவி தனில் உரை செய்த முருக வித்தக வேளே
சமத்தினால் புகழ் சனகியை நலிவு செய் திருட்டு ராக்கதன் உடல் அது துணி செய்து
சயத்து அயோத்தியில் வருபவன் அரி திரு மருமகப் பரிவோனே
செழித்த வேல் தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி செலுத்தி
ஈட்டிய சுர பதி மகள் தனை மணம் அது உற்றிடுவோனே
திறத்தினால் பல சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை தரும் அறுமுகப் பெருமாளே.
பொருள் கொடாவிட்டால் சில பேர்களைப் பழிப்பார்கள். சில பேர்களை வாழ்த்துவார்கள். ஒருவர் வாயில் வைத்த வெற்றிலைச் சுருளை மற்றொருவர் கையில் கொடுத்து உதவுவார்கள். பணத்தின் மேலேயே நோக்கமாக இருப்பார்கள். (பொருள் கிட்டினால்) பிணத்தையும் தழுவுவார்கள். கலந்து பேசிக் கொண்டிருக்கும் போதே படுக்கை அறைக்குள் சென்று மருந்திடுவார்கள். அணைத்துக் கொள்வார்கள். கார்த்திகைப் பண்டிகை வருகின்றது, (செலவுக்குப் பொருள் வேண்டும்) என்று பொருளைப் பறிப்பார்கள். மாதத்துக்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்று வந்த ஒவ்வொருவரிடமும் உறவு பாராட்டுபவர்களாய் அழைப்பார்கள். வருபவருடைய சொத்து அனைத்தையும் பறிக்கக் கருதுவார்கள். (பொருள் கொடாதவரை) விரட்டி ஓட்டி விடுவார்கள். (இவ்வாறு) குடியை அழிக்கும் விலைமாதர்களின் உபத்திரவத்தால், (மற்றொரு மாட்டுடன்) பிணைத்துக் கட்டப்பட்ட எருது போல காம மயக்கம் என்னும் நரகத்தில் சுழற்சி அடைவேனோ? பயனற்றுக் கேடுறுவதாய் பெருங் குழியில் விழும் ஆபத்தினின்றும் என்னைக் காப்பாற்றி, உன் அடியாருடன் என்னைச் சேர்த்து ஆண்டு கொள்ளும் வகைக்கு உன் மனதில் அருள் கூர்ந்து நற்கதியைத் தருவாயாக. விரிவாகத் தழைத்துள்ள சாஸ்திரங்களில் மறைபொருளாக உள்ள தத்துவங்களை, ஞானம் நிறைந்த குரு மூர்த்தி போல விளங்கி, சைவ சித்தாந்தங்களை முறையோடு தந்தையாகிய சிவபெருமானுடைய ஒப்பற்ற திருச் செவியில் உபதேசித்த முருகனே, ஞானியே, செவ்வேளே, தன்னுடைய சாமர்த்தியத்தால் புகழ் பெற்ற ஜானகியை துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச் சென்ற அரக்கனாகிய ராவணனுடைய உடலைத் துண்டாக்கி, வெற்றி நிலையில் அயோத்தி நகருக்குத் திரும்பி வந்தவனாகிய (ராமனாம்) திருமாலின் அழகிய மருமகனாய் அன்பு கூர்ந்தவனே, செழுமை வாய்ந்த வேலாயுதத்தினால் அசுரர்களுடைய உடல்களைப் பிளக்கும்படிச் செலுத்திய பின்னர், தேவர்களை அவர்களின் பொன்னுலகத்துக்கு அனுப்பி வைத்து, நெருங்கி நின்ற, தேவர்கள் தலைவனான இந்திரனுடைய மகளான, தேவயானையை திருமணம் செய்து கொண்டவனே, (திருஞான சம்பந்தராக வந்த உனது) சாமர்த்தியத்தால் பல சமணர்களை எதிர் எதிராக கழுமரங்களில் ஏற வைத்த அற்புத நிகழ்ச்சியை இன்பகரமாக நடத்தி, (தத்தம்) பிழை திருந்திய நிலையினராய் ஆக்கிப் பின், மதுரையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ... பொருள் கொடாவிட்டால் சில பேர்களைப் பழிப்பார்கள். சில பேர்களை வாழ்த்துவார்கள். ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர் ... ஒருவர் வாயில் வைத்த வெற்றிலைச் சுருளை மற்றொருவர் கையில் கொடுத்து உதவுவார்கள். பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ... பணத்தின் மேலேயே நோக்கமாக இருப்பார்கள். (பொருள் கிட்டினால்) பிணத்தையும் தழுவுவார்கள். அளவளப் பதனாலே படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் ... கலந்து பேசிக் கொண்டிருக்கும் போதே படுக்கை அறைக்குள் சென்று மருந்திடுவார்கள். அணைத்துக் கொள்வார்கள். கார்த்திகை வருது என உறு பொருள் பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே அழைப்பர் ... கார்த்திகைப் பண்டிகை வருகின்றது, (செலவுக்குப் பொருள் வேண்டும்) என்று பொருளைப் பறிப்பார்கள். மாதத்துக்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்று வந்த ஒவ்வொருவரிடமும் உறவு பாராட்டுபவர்களாய் அழைப்பார்கள். ஆஸ்திகள் கருதுவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் ... வருபவருடைய சொத்து அனைத்தையும் பறிக்கக் கருதுவார்கள். (பொருள் கொடாதவரை) விரட்டி ஓட்டி விடுவார்கள். அழிகுடி அரிவையர் அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ ... (இவ்வாறு) குடியை அழிக்கும் விலைமாதர்களின் உபத்திரவத்தால், (மற்றொரு மாட்டுடன்) பிணைத்துக் கட்டப்பட்ட எருது போல காம மயக்கம் என்னும் நரகத்தில் சுழற்சி அடைவேனோ? அவத்தமாய்ச் சில படு குழி தனில் விழும் விபத்தை நீக்கி ... பயனற்றுக் கேடுறுவதாய் பெருங் குழியில் விழும் ஆபத்தினின்றும் என்னைக் காப்பாற்றி, உன் அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட் கொள மனதினில் அருள் செய்து கதி தனைத் தருவாயே ... உன் அடியாருடன் என்னைச் சேர்த்து ஆண்டு கொள்ளும் வகைக்கு உன் மனதில் அருள் கூர்ந்து நற்கதியைத் தருவாயாக. தழைத்த சாத்திர மறை பொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறி தனை ... விரிவாகத் தழைத்துள்ள சாஸ்திரங்களில் மறைபொருளாக உள்ள தத்துவங்களை, ஞானம் நிறைந்த குரு மூர்த்தி போல விளங்கி, சைவ சித்தாந்தங்களை அடைவொடு தகப்பனார்க்கு ஒரு செவி தனில் உரை செய்த முருக வித்தக வேளே ... முறையோடு தந்தையாகிய சிவபெருமானுடைய ஒப்பற்ற திருச் செவியில் உபதேசித்த முருகனே, ஞானியே, செவ்வேளே, சமத்தினால் புகழ் சனகியை நலிவு செய் திருட்டு ராக்கதன் உடல் அது துணி செய்து ... தன்னுடைய சாமர்த்தியத்தால் புகழ் பெற்ற ஜானகியை துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச் சென்ற அரக்கனாகிய ராவணனுடைய உடலைத் துண்டாக்கி, சயத்து அயோத்தியில் வருபவன் அரி திரு மருமகப் பரிவோனே ... வெற்றி நிலையில் அயோத்தி நகருக்குத் திரும்பி வந்தவனாகிய (ராமனாம்) திருமாலின் அழகிய மருமகனாய் அன்பு கூர்ந்தவனே, செழித்த வேல் தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி செலுத்தி ... செழுமை வாய்ந்த வேலாயுதத்தினால் அசுரர்களுடைய உடல்களைப் பிளக்கும்படிச் செலுத்திய பின்னர், தேவர்களை அவர்களின் பொன்னுலகத்துக்கு அனுப்பி வைத்து, ஈட்டிய சுர பதி மகள் தனை மணம் அது உற்றிடுவோனே ... நெருங்கி நின்ற, தேவர்கள் தலைவனான இந்திரனுடைய மகளான, தேவயானையை திருமணம் செய்து கொண்டவனே, திறத்தினால் பல சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை தரும் அறுமுகப் பெருமாளே. ... (திருஞான சம்பந்தராக வந்த உனது) சாமர்த்தியத்தால் பல சமணர்களை எதிர் எதிராக கழுமரங்களில் ஏற வைத்த அற்புத நிகழ்ச்சியை இன்பகரமாக நடத்தி, (தத்தம்) பிழை திருந்திய நிலையினராய் ஆக்கிப் பின், மதுரையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.