வந்து வந்து முன்தவழ்ந்து
வெஞ்சுகந் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி யென்றழுங் குழந்தையோடு
மண்டலங் குலுங்க அண்டர்
விண்தலம் பிளந்தெழுந்த
செம்பொன் மண்டபங்களும் பயின்றவீடு
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து
குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி
தஞ்ச மென்று மங்குகாலம்
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு
பைங்கடம்பு தண்டை கொஞ்சு
செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள்தாராய்
சந்து அடர்ந்தெழுந்த ரும்பு
மந்தரம் செழுங்கரும்பு
மந்தரம்கந்தரம்பை செண்பதங்கொள் செந்தில் வாழ்வே
தண்கடம் கடந்து சென்று
பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல்
திண்புனம்புகுந்து கண்டு இறைஞ்சுகோவே
அந்தகன்கலங்க வந்த
கந்தரம் கலந்த சிந்துரம்
சிறந்து வந்து அலம் புரிந்தமார்பா
அம்புனம்புகுந்த நண்பர்
சம்பு நன் புரந்தரன்
தரம்பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே.
மீண்டும் மீண்டும் என்முன் வந்து, தவழ்ந்து, விரும்பத்தக்க இன்பத்தை அளித்து நின்று, பால் வேண்டும் வேண்டும் என்று அழுகின்ற குழந்தையும், இந்தப் பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும் செம்பொன் மண்டபங்கள் நிறைந்த வீடும், பூங்கொத்துக்கள் தரித்த கூந்தல் தழையத் தழைய, குங்குமம் அப்பிய மார்புகளும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் உடைய மனைவியும், எனக்கு ஆதரவு என்று இருந்த என் அறிவு மங்கி நான் இறக்கும் சமயத்தில், கோங்குப்பூ, அடம்புப் பூ, வாசம் மிகுந்த பசும் கடப்பமலர், தண்டைக்கழல், கொஞ்சுவதுபோல ஒலிக்கும் செவ்விய சதங்கைகள் - இவை தங்கும் தாமரைபோன்ற உன் பாதங்களைத் தந்தருள்வாயாக. சந்தன மரம், அடர்த்தியாக அரும்புவிடும் மந்தாரம், செழிப்பான கரும்பு, குலை தள்ளிய வாழை - இவையெல்லாம் வானம்வரை வளர்ந்த திருச்செந்தூர் தலத்தில் வாழ்பவனே, குளிர்ந்த காட்டைக் கடந்து சென்று இசைப்பண்கள் யாவும் கூடிச்சேர்ந்தது போன்ற இனிமையான குரலுடைய வள்ளியின் செழிப்பான தினைப்புனத்தை அடைந்து அவளைக் கண்டு, பின்பு கும்பிட்ட தலைவனே, யமன் அருகே வருவதற்கு கலங்கி அஞ்சும்படியாக, (உன் அடியார்களின் இதயமாகிய) குகையில் விருப்புற்றுக்கலந்த குங்கும அழகி தேவயானை சிறப்பாக வந்து மகிழ்ச்சியோடு அணைக்கும் திருமார்பனே, அழகிய தினைப்புனத்தில் உன்பொருட்டுச் சென்ற உன் நண்பர் நாரதரும், சிவபிரான், நல்ல இந்திரன், தகுதிபெற்ற வேறு பல தேவர்கள், கும்பமுனி அகஸ்தியர் இவர்கள் யாவரும் உன்னை நம்பித் தொழும் தம்பிரானே.
வந்து வந்து முன்தவழ்ந்து ... மீண்டும் மீண்டும் என்முன் வந்து, தவழ்ந்து, வெஞ்சுகந் தயங்க நின்று ... விரும்பத்தக்க இன்பத்தை அளித்து நின்று, மொஞ்சி மொஞ்சி யென்றழுங் குழந்தையோடு ... பால் வேண்டும் வேண்டும் என்று அழுகின்ற குழந்தையும், மண்டலங் குலுங்க அண்டர் விண்தலம் பிளந்தெழுந்த ... இந்தப் பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும் செம்பொன் மண்டபங்களும் பயின்றவீடு ... செம்பொன் மண்டபங்கள் நிறைந்த வீடும், கொந்து அளைந்த குந்தளம் தழைந்து ... பூங்கொத்துக்கள் தரித்த கூந்தல் தழையத் தழைய, குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி ... குங்குமம் அப்பிய மார்புகளும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் உடைய மனைவியும், தஞ்ச மென்று மங்குகாலம் ... எனக்கு ஆதரவு என்று இருந்த என் அறிவு மங்கி நான் இறக்கும் சமயத்தில், கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைங்கடம்பு ... கோங்குப்பூ, அடம்புப் பூ, வாசம் மிகுந்த பசும் கடப்பமலர், தண்டை கொஞ்சு செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள்தாராய் ... தண்டைக்கழல், கொஞ்சுவதுபோல ஒலிக்கும் செவ்விய சதங்கைகள் - இவை தங்கும் தாமரைபோன்ற உன் பாதங்களைத் தந்தருள்வாயாக. சந்து அடர்ந்தெழுந்த ரும்பு மந்தரம் ... சந்தன மரம், அடர்த்தியாக அரும்புவிடும் மந்தாரம், செழுங்கரும்பு கந்தரம்பை செண்பதங்கொள் செந்தில் வாழ்வே ... செழிப்பான கரும்பு, குலை தள்ளிய வாழை - இவையெல்லாம் வானம்வரை வளர்ந்த திருச்செந்தூர் தலத்தில் வாழ்பவனே, தண்கடம் கடந்து சென்று ... குளிர்ந்த காட்டைக் கடந்து சென்று பண்கள் தங்கு அடர்ந்த இன்சொல் ... இசைப்பண்கள் யாவும் கூடிச்சேர்ந்தது போன்ற இனிமையான குரலுடைய வள்ளியின் திண்புனம்புகுந்து கண்டு இறைஞ்சுகோவே ... செழிப்பான தினைப்புனத்தை அடைந்து அவளைக் கண்டு, பின்பு கும்பிட்ட தலைவனே, அந்தகன்கலங்க வந்த ... யமன் அருகே வருவதற்கு கலங்கி அஞ்சும்படியாக, கந்தரம் கலந்த சிந்துரம் ... (உன் அடியார்களின் இதயமாகிய) குகையில் விருப்புற்றுக்கலந்த குங்கும அழகி தேவயானை சிறந்து வந்து அலம் புரிந்தமார்பா ... சிறப்பாக வந்து மகிழ்ச்சியோடு அணைக்கும் திருமார்பனே, அம்புனம்புகுந்த நண்பர் ... அழகிய தினைப்புனத்தில் உன்பொருட்டுச் சென்ற உன் நண்பர் நாரதரும், சம்பு நன்புரந்த ரன்தரம்பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே. ... சிவபிரான், நல்ல இந்திரன், தகுதிபெற்ற வேறு பல தேவர்கள், கும்பமுனி அகஸ்தியர் இவர்கள் யாவரும் உன்னை நம்பித் தொழும் தம்பிரானே.