மாசு இல்லாததாய், (ஆறு ஆதாரங்ளுக்கு அப்பால் உள்ளதாய் 1008 இதழோடு கூடிய) தாமரையாகிய ஹஸ்ரார குருகமல உருவிடத்தே (பிராணவாயுவைச் செலுத்தி அப்போது உண்டாகும்) சங்க நாதம் ஒலிக்க, அற்புதமான ஆகாச வெளி எங்கணும் பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் நிலை பெற்றதான தன்மையை ரகசியமாய் உணர்ந்தும், அவ்விடத்தில் எவராலும் தனது உண்மைத் தன்மையை அறிய முடியாததாகும். (வடமொழியில்) உயிரும் மெய்யும் ஆகிய உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்களுக்கும், சகல லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிறச் சுத்த ஜோதிப் பேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய், முதலும் நடுவுமான யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான (பிரமரந்திரம் என்ற) பேரின்ப கமலத்தில், சந்திரனுடைய காந்தி பரந்துள்ளதும், பொன்னொளி வீசும், அழகிய ஸ்படிக நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில், சுழி முனை நாடியின் உச்சியில, (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்) ஐந்து இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை உனது கருணையினால் அறியும்படியான வழியை (நான்) அடைவதற்கு, பார்வதியின் குமரனே, குமர குருவே என்றென்று பல முறை கூற முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, அதற்கு வேண்டிய இளமை வலிமையைத் தந்து, உன் திருவடியில் என்னை சேர்த்துக் கொள்ளுவாயாக. பறையும், பலவிதமான மத்தள வகையும் (அதே) தாளத்துக்கு ஏற்ப ஒலிக்கவும், ஆதிசேஷனின் முடிகளும், அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பும் வெற்றிச் சின்னங்களை சங்கங்கள் முழங்க, அசுரர்கள் சண்டை செய்து மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பூமாரி பொழிய, அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க, திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, திருமாலின் மகளான வள்ளியின் மார்பகங்களில் உனது உடல் புதையும்படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து, அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்ற ஊரில் ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே.
அமல கமல உரு சங்கம் தொனித்த ... மாசு இல்லாததாய், (ஆறு ஆதாரங்ளுக்கு அப்பால் உள்ளதாய் 1008 இதழோடு கூடிய) தாமரையாகிய ஹஸ்ரார குருகமல உருவிடத்தே (பிராணவாயுவைச் செலுத்தி அப்போது உண்டாகும்) சங்க நாதம் ஒலிக்க,
மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் அளவும் அசலம் அது கண்டு ... அற்புதமான ஆகாச வெளி எங்கணும் பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் நிலை பெற்றதான தன்மையை ரகசியமாய் உணர்ந்தும்,
அங்கு ஒருத்தரு(ம்) உளவு அறியாதது ... அவ்விடத்தில் எவராலும் தனது உண்மைத் தன்மையை அறிய முடியாததாகும்.
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு ... (வடமொழியில்) உயிரும் மெய்யும் ஆகிய உருக் கொண்டுள்ள அகராதி 51 அக்ஷரங்களுக்கும்,
அகில புவன நதி அண்டங்களுக்கும் முதல் அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று ... சகல லோகங்களுக்கும், ஆறுகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிறச் சுத்த ஜோதிப் பேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய்,
முதல் நடுவான கமல துரியம் அதில் ... முதலும் நடுவுமான யோகியர் தன் மயமாய் நின்று தியானிக்கும் உயர் நிலையான (பிரமரந்திரம் என்ற) பேரின்ப கமலத்தில்,
இந்தும் கதிர்ப் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி(க)க் கதவம் ககனம் ... சந்திரனுடைய காந்தி பரந்துள்ளதும், பொன்னொளி வீசும், அழகிய ஸ்படிக நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய வெளியில்,
சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் ... சுழி முனை நாடியின் உச்சியில, (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்) ஐந்து இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல் விளங்கும் சிவ யோக நிலையை
கருணை உடன் அறிவு இதம் கொண்டிட ... உனது கருணையினால் அறியும்படியான வழியை (நான்) அடைவதற்கு,
கவுரி குமர குமர குரு என்று என்று உரைப்ப ... பார்வதியின் குமரனே, குமர குருவே என்றென்று பல முறை கூற
முது கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே ... முதிர்ந்து கனிந்த பக்தி நிலை வர, அதற்கு வேண்டிய இளமை வலிமையைத் தந்து, உன் திருவடியில் என்னை சேர்த்துக் கொள்ளுவாயாக.
திமிலை பல முருடு ... பறையும், பலவிதமான மத்தள வகையும்
அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு திமிர்த(ம்) குல விருது சங்கம் தொனித்து ... ஆதிசேஷனின் முடிகளும், அண்டங்களும் பிளந்து போகும்படி மிக்க பேரொலியை எழுப்பும் வெற்றிச் சின்னங்களை சங்கங்கள் முழங்க,
அசுரர் களம் மீதே அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள ... அசுரர்கள் சண்டை செய்து மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்று கூடி மலர்களைக் கொண்டு அங்கு பூமாரி பொழிய,
அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள ... அருமை வாய்ந்த கோழிக் கொடி எங்கும் சிறப்பாக விளங்க,
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா ... திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும் பிழைத்து உய்ய, வேலாயுதத்தைச் செலுத்தியவனே,
அரியின் மகள் தனமொடு அங்கம் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் ... திருமாலின் மகளான வள்ளியின் மார்பகங்களில் உனது உடல் புதையும்படி, திருமுக அழகுடன் திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து,
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே. ... அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும் இந்தம்பலம் என்ற ஊரில் ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே.