தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற
தோளு கை கால் உற்ற குடிலூடே
சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு
வேதித்த சூலத்தன் அணுகா முன்
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே
பட்டு வீழ்வித்த கொலை வேலா
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி
கூர்கைக்கு நீ கொற்ற அருள் தாராய்
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர்
ஆவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும்
ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட
தோதக் கண் மானுக்கு மணவாளா
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர்
சேவிக்க வாழ்வித்த பெருமாளே.
தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள தோள், கை, கால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில் தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருந்த காலத்தில் (உனது திருவடியைப்) பிடித்து நான் வாழ்நாளைச் செலுத்துதற்கு விடாமல் என் மேல் மாறு கொண்ட, திரிசூலத்தை ஏந்திய, யமன் என்னை நெருங்கிவரும் முன்பாக, தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரன் தன் குலத்தாருடன் அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதனே, குற்றமற்ற உனது திருவடியில் பக்தி மிகுந்த புத்தி நுண்மை அடைவதற்கு நீ வெற்றி தரும் திருவருளை எனக்குத் தந்தருள்க. ஆலகால விஷத்தை பூமியில் உள்ளவர்களும் பல திசைகளில் இருந்த விண்ணோர்களும் தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல், களித்து நடனமாடி அடியோடு (முழு விஷத்தையும்) உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும் ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்தவனே, சேல் மீன் போன்றதும், வேலாயுதம் போன்றதும், நீலோற்பல மலரைவிடச் சிறந்ததுமான கண்களைக் கொண்டு உனக்கு விரக தாபம் தந்த மான் போன்ற வள்ளிக்கு மணவாளனே, குற்றம் இல்லாத நீதி வழியில் பொருந்திய பக்தி மிக்க அடியார்கள் உன்னைப் போற்ற, அவர்களை வாழ்வித்த பெருமாளே.
தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற ... தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள தோளு கை கால் உற்ற குடிலூடே ... தோள், கை, கால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில் சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் ... தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருந்த காலத்தில் பற்றி ஏகைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் ... (உனது திருவடியைப்) பிடித்து நான் வாழ்நாளைச் செலுத்துதற்கு விடாமல் என் மேல் மாறு கொண்ட, திரிசூலத்தை ஏந்திய, யமன் என்னை நெருங்கிவரும் முன்பாக, கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் ... தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரன் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா ... தன் குலத்தாருடன் அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதனே, கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு ... குற்றமற்ற உனது திருவடியில் பக்தி மிகுந்த புத்தி நுண்மை அடைவதற்கு நீ கொற்ற அருள் தாராய் ... நீ வெற்றி தரும் திருவருளை எனக்குத் தந்தருள்க. ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ... ஆலகால விஷத்தை பூமியில் உள்ளவர்களும் பல திசைகளில் இருந்த விண்ணோர்களும் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே ... தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல், ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும் ... களித்து நடனமாடி அடியோடு (முழு விஷத்தையும்) உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே ... ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்தவனே, சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட ... சேல் மீன் போன்றதும், வேலாயுதம் போன்றதும், நீலோற்பல மலரைவிடச் சிறந்ததுமான தோதக் கண் மானுக்கு மணவாளா ... கண்களைக் கொண்டு உனக்கு விரக தாபம் தந்த மான் போன்ற வள்ளிக்கு மணவாளனே, தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் ... குற்றம் இல்லாத நீதி வழியில் பொருந்திய பக்தி மிக்க அடியார்கள் சேவிக்க வாழ்வித்த பெருமாளே. ... உன்னைப் போற்ற, அவர்களை வாழ்வித்த பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 1034 thalam %E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D thiru name %E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D