குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும்
குலமும் இறுமாப்பும் மிகுதியான
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியே
குருடுபடு மோட்டு என உடல் வீழில்
அடைவு உடை விடாச் சிறு பழைய துணி போர்த்தியெ
அரிட(ம்) சுடு காட்டு இடை இடு காயம் அழியும் அளவாட்டில்
உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே
அடியினொடு மாத் தரு மொள மொள மொள ஆச்சு என அலறி விழ
வேர்க் குலமொடு சாய
அவுணர் படை தோற்பு எழ அருவரைகள் ஆர்ப்பு எழ
அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் உடைய முனி ஆள் பட
முடுகு அவுணர் கீழ்ப் பட உயர் அமரர் மேற் பட
வடியாத உததி கமராப் பிள
முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே.
குடிப்பிறப்பின் ஒழுக்கத்துக்கு ஏற்ற மனைவியும், ஏவலாலர்களுடைய கூட்டமும், குலப் பெருமையும், ஆணவச் செருக்கும் மிகுந்து நிற்கும் பொல்லாத இப்பெரிய வாழ்க்கையில் இனிமை தரும் பொருளைச் சேகரித்து, கண் தெரியாத குருடுபோல் இங்கும் அங்கும் அலைந்த இந்த உடம்பு இறந்து வீழ்ந்தால், தகுந்த உடையைத் தவிர்த்து, (அதற்குப் பதிலாகச்) சிறிய பழைய துணி ஒன்றால் (பிணத்தைப்) போர்த்தி, துயரத்துக்கு இடமான சுடு காட்டில் போடப்பட்டு உடல் எரிந்து அழிந்து போகும் சமயத்தில், உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக. அடியோடு (சூரனாகிய) பெரிய மாமரம் மொள மொள மொள என்னும் ஒலியோடு அலறிக் கூச்சலிட்டு விழ, (தன்னுடைய) வேர் போன்ற எல்லா அசுரர் கூட்டத்துடன் சாய்ந்து அழிய, அசுரர்கள் சேனை தோல்வி அடைய, அருமையான கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் முதலிய மலைகள் கூக்குரல் இட்டு இடிய, வேலாயுதம் (ரத்தத்தின்) செந்நிறம் காட்ட, நான்கு வேதங்களும் வல்ல முனியாகிய பிரமன் தனது ஆணவம் அடங்க, எதிர்த்து வந்த அசுரர்கள் கீழ்மை அடைய, சிறந்த தேவர்கள் மேம்பட்டு விளங்க, வற்றாத கடலும் பூமி பிளவு கொண்டது போலப் பிளவுபட, பழையவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய இந்திரனை பொன்னுலகில் மீண்டும் குடி ஏற்றி வைத்த பெருமாளே.
குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் ... குடிப்பிறப்பின் ஒழுக்கத்துக்கு ஏற்ற மனைவியும், ஏவலாலர்களுடைய கூட்டமும், குலமும் இறுமாப்பும் மிகுதியான ... குலப் பெருமையும், ஆணவச் செருக்கும் மிகுந்து நிற்கும் கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியே ... பொல்லாத இப்பெரிய வாழ்க்கையில் இனிமை தரும் பொருளைச் சேகரித்து, குருடுபடு மோட்டு என உடல் வீழில் ... கண் தெரியாத குருடுபோல் இங்கும் அங்கும் அலைந்த இந்த உடம்பு இறந்து வீழ்ந்தால், அடைவு உடை விடாச் சிறு பழைய துணி போர்த்தியெ ... தகுந்த உடையைத் தவிர்த்து, (அதற்குப் பதிலாகச்) சிறிய பழைய துணி ஒன்றால் (பிணத்தைப்) போர்த்தி, அரிட(ம்) சுடு காட்டு இடை இடு காயம் அழியும் அளவாட்டில் ... துயரத்துக்கு இடமான சுடு காட்டில் போடப்பட்டு உடல் எரிந்து அழிந்து போகும் சமயத்தில், உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே ... உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக. அடியினொடு மாத் தரு மொள மொள மொள ஆச்சு என அலறி விழ ... அடியோடு (சூரனாகிய) பெரிய மாமரம் மொள மொள மொள என்னும் ஒலியோடு அலறிக் கூச்சலிட்டு விழ, வேர்க் குலமொடு சாய ... (தன்னுடைய) வேர் போன்ற எல்லா அசுரர் கூட்டத்துடன் சாய்ந்து அழிய, அவுணர் படை தோற்பு எழ அருவரைகள் ஆர்ப்பு எழ ... அசுரர்கள் சேனை தோல்வி அடைய, அருமையான கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் முதலிய மலைகள் கூக்குரல் இட்டு இடிய, அயில் அலகு சேப்பு எழ மறை நாலும் உடைய முனி ஆள் பட ... வேலாயுதம் (ரத்தத்தின்) செந்நிறம் காட்ட, நான்கு வேதங்களும் வல்ல முனியாகிய பிரமன் தனது ஆணவம் அடங்க, முடுகு அவுணர் கீழ்ப் பட உயர் அமரர் மேற் பட ... எதிர்த்து வந்த அசுரர்கள் கீழ்மை அடைய, சிறந்த தேவர்கள் மேம்பட்டு விளங்க, வடியாத உததி கமராப் பிள ... வற்றாத கடலும் பூமி பிளவு கொண்டது போலப் பிளவுபட, முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே. ... பழையவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய இந்திரனை பொன்னுலகில் மீண்டும் குடி ஏற்றி வைத்த பெருமாளே.