ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
மாமாய இருளும் அற்று ஏகி பவமென
ஆகாசபரமசிற் சோதி பரையை அடைந்து உளாமே
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம்
யோகீசர் எவரும் எட்டாத பரதுரிய
அதீதம் அகளம் எப்போதும் உதயம் அநந்தமோகம்
வானாதி சகலவிஸ்த்தார விபவரம்
லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
மாலீச ரெனுமவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள்
மாளாத தன் நிசமுற்றாயது அரிய
நிராதாரம் உலைவு இல்சற் சோதி நிருபமும்
மாறாத சுகவெ(ள்)ளத் தாணுவுடன் இனிதென்றுசேர்வேன்
நானாவித கருவிச் சேனை வகைவகை
சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
நாவாய்செல் கடலடைத்து ஏறி நிலைமை யிலங்கைசாய
நாலாறு மணிமுடிப் பாவி தனை அடு
சீராமன் மருக மைக் காவில் பரிமள
நாவீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா
கானாளும் எயினர்தற் சாதி வளர் குற
மானொடு மகிழ்கருத் தாகி மருள் தரு
காதாடும் உனது கண் பாணம் எனதுடை நெஞ்சுபாய்தல்
காணாது மமதைவிட்டு ஆவி யுயவருள்
பாராய் எனுரைவெகுப் ப்ரீதி யிளையவ
காவேரி வடகரைச் சாமி மலையுறை தம்பிரானே.
நீங்குதற்கு அரிய மண்ணாசை என்ற விலங்கும், பெரும் மயக்கத்தைத் தரும் ஆணவம் என்ற இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படியாக, வானம் போல் பரந்த பெரிய ஞான ஜோதியான பராசக்தியை அடைந்து நினைப்பு எதுவும் இன்றி, முப்பத்தாறு மேலான தத்துவங்களுக்கு அப்பால் முதன்மையானதாய், என்றும் யோகீசர் எவர்க்கும் எட்டாததான பெரிய துரிய நிலைக்கும் மேம்பட்டதாய், உருவம் இல்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய், வான் முதலிய எல்லாமாய் விரிவான உயிர்ப்பொருளாய், உலகத்தின் முதலாகவும் முடிவாகவும் விளங்குவதாய், உண்மை அறிவாய், தாமரையான் பிரமன், திருமால், சிவபிரான் என்ற மும்மூர்த்திகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பெருமை வாய்ந்ததாய், சந்தேகம் இன்றி நீடூழிகாலம் இறப்பின்றி தானே மெய்த்தன்மைத்தாக இருப்பதாய், அரியதாய், மற்ற ஒன்றையும் சாராததாய், அழிவின்றி சத்திய ஜோதியாகத் துலங்குவதாய், உருவம் ஏதும் இல்லாததாய், மாறுதல் இல்லாது விளங்கும் இன்ப வெள்ளமான சிவத்துடன் யான் இனிமையாக என்றைக்கு இணைவேன்? பல்விதமான ஆயுதங்கள் (கத்தி, வில், வாள் முதலியவை) தாங்கிய சேனைகள் விதவிதமாக சூழ்ந்து வர, பிரசித்தி பெற்ற வீரர்களுடன், பெரும் கப்பல்கள் செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து, அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி, பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை வதைத்த ஸ்ரீராமனின் மருகனே, இருண்ட சோலைகளில் நறுமணம் நன்றாக வீசும் வயலூரில் வீற்றுள்ள அக்னீஸ்வரருடைய குமாரனே, கடப்பமலர் அணிந்தவனே, வேலாயுதனே, காட்டை ஆளும் வேட்டுவர் குலத்திலே வளர்ந்த குறமானாகிய வள்ளியோடு மகிழ்வதற்கு எண்ணம் கொண்டு, மருட்சியைத் தருகின்றதும், காதுவரை நீண்டதுமான உனது கண்களிலிருந்து வரும் பாணமானது என்னுடைய நெஞ்சினில் பாய்வதை நீகாணாமல் இருக்கின்றாய், உன் செருக்கை விடுத்து என்னுயிர் உய்ய அருள்வாயாக என்றெல்லாம் வள்ளியிடம் உரைத்து மிக்க அன்புடன் சேர்ந்த இளையவனே, காவேரியின் வடகரையினுள்ள சுவாமிமலைத் தலத்தில் எழுந்தருளிய தனிப் பெரும் தலைவனே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 203 thalam %E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 thiru name %E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF