சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
ஜட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த
தமியன் மடியால் மயக்கம் உறுவேனோ?
கருணை புரியாதிருப்ப தென குறை இவேளை செப்பு
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே
கடக புயமீதி ரத்ன மணியணி பொன்மாலை செச்சை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே
தருணம் இதையா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு
தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா
அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த
அழக, திருவேரகத்தின் முருகோனே.
உனது தாமரை போன்ற திருவடிகளில் அரை நிமிஷ நேர அளவுக்காவது தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான் பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள தன்னம் தனியனான யான் வறுமையால் மயக்கத்தை அடையலாமோ? கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு? இப்பொழுதே சொல்லி அருளவேண்டும் கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே தக்க சமயம் இதுதான் ஐயா மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம் எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து) உதவி புரிய வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே சிவந்த தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும் அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே.
சரண கமலாலயத்தில் ... உனது தாமரை போன்ற திருவடிகளில் அரை நிமிஷ நேர மட்டில் ... அரை நிமிஷ நேர அளவுக்காவது தவமுறை தியானம் வைக்க அறியாத ... தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத ஜட கசட மூட மட்டி ... பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான் பவ வினையிலே சனித்த ... பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள தமியன் ... தன்னம் தனியனான யான் மடியால் மயக்கம் உறுவேனோ? ... வறுமையால் மயக்கத்தை அடையலாமோ? கருணை புரியாதிருப்ப தென குறை ... கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு? இவேளை செப்பு ... இப்பொழுதே சொல்லி அருளவேண்டும் கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே ... கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே கடக புயமீதி ... வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது ரத்ன மணியணி பொன்மாலை செச்சை ... ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை கமழு மணமார் கடப்பம் அணிவோனே ... வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே தருணம் இதையா ... தக்க சமயம் இதுதான் ஐயா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய ... மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ... எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) ... நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத்(து) (உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா ... உதவி புரிய வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க ... சிவந்த தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த ... அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும் அழக, திருவேரகத்தின் முருகோனே. ... அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 216 thalam %E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 thiru name %E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D