அரகர சிவன் அரிஅயனிவர் பரவ பரவி முன்
அறுமுக சரவண பவனே என்று
அநுதின மொழிதர அசுரர்கள் கெட அயில்
அநலென எழ அயில்விடும் அதிவீரா
பரிபுர கமலமது அடியிணை யடியவர்
உளமதில் உற அருள் முருகேசா
பகவதி வரைமகள் உமை தர வருகுக
பரமன திருசெவி களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர உயர்வாய
உலக மன் அலகில வுயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர முநிவோரும்
பரவிமுன் அநுதின மனமகிழ் வுற அணி
பணிதிகழ் தணிகையில் உறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை யுறவரு பெருமாளே. அணி
பாவங்களைப் போக்கவல்ல சிவனும், திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும் போற்றி நின்று உனது முன்னிலையில் ஆறுமுகனே, சரவணபவனே, என்று கூறி நாள்தோறும் துதிக்க, சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு அக்கினி போல எழும்பிய வேலினை விடுத்த வீர மூர்த்தியே, வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை உன் அடியார்களின் உள்ளத்தில் பொருந்துமாறு அருள்செய்யும் முருகக் கடவுளே. மலையரசன் மகளாக வந்த பகவதியின் அருளினால் வந்த குகனே, சிவனின் இருசெவிகளும் மகிழும்படி யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உபதேசித்த மேலான குருவே, உயர்ந்த இவ்வுலகில் வாழும் எண்ணற்ற உயிர்களும் தேவர்களும் பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும் உன் முன்னேவணங்கி துதி செய்து, நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே, புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும், கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானையும், இருபுறமும் பொருந்த வந்த பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 240 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88 thiru name %E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF