அறிவு மங்கிப் போகவும், மயக்கம் பெருகவும், பேச்சும் அடங்கிப் போகவும், கண்கள் சுழலவும், உடம்பின் சூடு தணியவும், மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும், நீங்காமலே என் அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து பயந்து அழ, உறவினரும் அழ, நெருப்பை நிகர்த்த கொடிய யமன் என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவன் (அகத்தியன்) உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர, இனிய தமிழை ஓதியவனே தத்தமக்கு உண்டான வழி தவறி சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும், நிலைத்த பிரமன், ஆகியவர்கள் அலையும்படி (கொடிய) ஆட்சி புரிந்த அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி வேலைச் செலுத்தியவனே மானும், மழுவும் கரங்களில் விளங்கும் பரமசிவனும், உமையும் தங்கள் இருவிழிகளும் உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல் வளரும் இளைய குமாரனே கப்பல்கள் தவழும் கடலிடையே வருகின்ற முத்து மணிகள் மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த (திருச்செந்தூர்க்) கரையில் அமர்ந்த பெருமாளே.