அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத அவலர்
மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து
அவரைவாழ்த்தித் திரிந்து பொருள்தேடி
சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து
தெரிவைமார்க்குச் சொரிந்து
அவமேயான் திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி
பரிந்து தெளிய மோக்ஷத்தை யென்று அருள்வாயே
இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த உமையாள்
தன் இருளைநீக்கத் தவஞ்செய்து
அருளநோக்கிக் குழைந்த இறைவர்
கேட்கத் தகுஞ்சொல் உடையோனே
குறவர்கூட்டத்தில் வந்து
கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட்டித்திரிந்த தவமானை
குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த
குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே.
அறிவு இல்லாத பித்தர், உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர், மூடர்கள், பேய்த்தன்மை கொண்ட செய்கையர், நன்றி இல்லாத பயனற்றவர் .. ஆகியோர் மீது வார்த்தைகளால் பாடல்கள் புனைந்து அவர்களைப் புகழ்ந்தும், அவர்களை வாழ்த்தியும், அதன் பொருட்டு அலைந்து திரிந்து பொருள் சம்பாதித்தும், சிறிதளவு சேகரித்த பொருளைக் கொண்டுவந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து, அப் பெண்களுக்கே அந்தப் பொருளை நிரம்பவும் வாரிக் கொடுத்து இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி, அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்? சிவ பெருமானது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி பிரிந்து ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சீபுரத்துக்கு வந்த உமையவள் தன் அஞ்ஞான இருள் நீங்குவதற்காகத் தவம் செய்து விளங்க அந்தத் தவத்தைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த இறைவர் கேட்டு மகிழத்தக்கதான உபதேசச் சொல்லை உடையவனே, குறவர்களின் கூட்டத்துக்கு இடையில் வந்து, ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப் புகுந்து நின்று, தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித் திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியை தன் வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே, குமரக்கோட்டம் என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர் ... அறிவு இல்லாத பித்தர், உன் திருவடியைத் தொழாத கெட்ட வஞ்சகர், அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத அவலர் ... மூடர்கள், பேய்த்தன்மை கொண்ட செய்கையர், நன்றி இல்லாத பயனற்றவர் .. மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து ... ஆகியோர் மீது வார்த்தைகளால் பாடல்கள் புனைந்து அவர்களைப் புகழ்ந்தும், அவரைவாழ்த்தித் திரிந்து பொருள்தேடி ... அவர்களை வாழ்த்தியும், அதன் பொருட்டு அலைந்து திரிந்து பொருள் சம்பாதித்தும், சிறிதுகூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித் திரிந்து ... சிறிதளவு சேகரித்த பொருளைக் கொண்டுவந்து, பொது மகளிர் வாழும் தெருக்களில் உலாவித் திரிந்து, தெரிவைமார்க்குச் சொரிந்து ... அப் பெண்களுக்கே அந்தப் பொருளை நிரம்பவும் வாரிக் கொடுத்து அவமேயான் திரியுமார்க்கத்து நிந்தை யதனை மாற்றி ... இப்படி காலத்தை நான் வீணாகக் கழித்துத் திரியும் போக்கினால் எனக்கு வருகின்ற அபவாதத்தை அகற்றி, பரிந்து தெளிய மோக்ஷத்தை யென்று அருள்வாயே ... அன்பு கூர்ந்து, நான் தெளிவு பெறுவதற்கான மோக்ஷ இன்பத்தை என்று எனக்கு அருளப் போகிறாய்? இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப்பி ரிந்து ... சிவ பெருமானது மாற்றறியாத செம்பொன் வடிவம் வேறாகும்படி பிரிந்து இடபமேற் கச்சி வந்த உமையாள் ... ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சீபுரத்துக்கு வந்த உமையவள் தன் இருளைநீக்கத் தவஞ்செய்து ... தன் அஞ்ஞான இருள் நீங்குவதற்காகத் தவம் செய்து விளங்க அருளநோக்கிக் குழைந்த இறைவர் ... அந்தத் தவத்தைப் பார்த்து அருளோடு மனம் குழைந்த இறைவர் கேட்கத் தகுஞ்சொல் உடையோனே ... கேட்டு மகிழத்தக்கதான உபதேசச் சொல்லை உடையவனே, குறவர்கூட்டத்தில் வந்து ... குறவர்களின் கூட்டத்துக்கு இடையில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று ... ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப் புகுந்து நின்று, குருவியோட்டித்திரிந்த தவமானை ... தினைப்புனத்தில் குருவிகளை ஓட்டித் திரிந்த தவம் நிறைந்த மானாம் வள்ளியை குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த ... தன் வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே, குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே. ... குமரக்கோட்டம் என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.