மகரம் எறி கடல் விழியினு(ம்) மொழியினு(ம்) மதுப(ம்) முரல் குழல் வகையினு(ம்) நகையினும் வளமையினு(ம்) முக நிலவினும் இலவினு(ம்) நிறம் மூசும் மதுர இதழினும்
இடையினு(ம்) நடையினு(ம்) மகளிர் முகுளித முலையினு(ம்) நிலையினும் வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம் பகருகினும் அவர் பணிவிடை திரிகினும்
உருகி நெறி முறை தவறினும் அவரோடு பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராகப் பரவை படியினும் வசம் அழியினும்
முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல கனக கன குவடு அடியொடு முறிபட
முது சூதம் கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள சயன
வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் தரள முகபட(ம்) நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே.
மகர மீன்களை வீசி எறியும் கடல் போன்ற கண்ணிலும், அவர்களது பேச்சிலும், வண்டுகள் ஒலி செய்யும் கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும், வளப்பத்திலும், சந்திரன் போன்ற முகத்திலும், இலவ மலரைக் காட்டிலும் செந்நிற ஒளி விளங்கும் இனிமை தரும் வாயிதழிலும், இடையிலும் நடையிலும், மாதர்களின் அரும்பிய மார்பிலும், (அவர்கள்) நிற்கும் நிலையிலும், தாமரை போன்றதும், சிலம்பு அணிந்ததுமான மலர் போன்ற அடிகளிலும், அந்த மாதர்களின் பெயர்களைச் சொல்லிச் செபித்தாலும், அவர்கள் இட்ட வேலைகளைச் செய்வதிலேயே ஈடுபட்டுத் திரிந்தாலும், (அவர் பொருட்டு) மனம் உருகி நீதி முறை தவறி நடந்தாலும், அவர்களோடு விகட மொழிகள் பேசினாலும், படுக்கையில் அவர்கள் கொடுக்கும் காமப் பற்றாகிய கடலில் முழுகினாலும், என் வசம் அழிந்தாலும், முதன் முதலில், திருவண்ணாமலைப் பதியில் நீ கருணையோடு அளித்து அருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், உனது இரண்டு திருவடிகளையும் மறக்க மாட்டேன். விண்ணுலகத்துத் தேவர் தலைவனாகிய இந்திரன் துதிக்க, (சூரனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளும் வட்டமான சக்ரவாள கிரியுடன் மிதிபட, வடக்கே உள்ள சிறந்த பொன்மயமான பருத்த (மேரு) மலை அடியோடு பொடிபட, பழைய மாமரத்து உருவில் இருந்த சூரன் அலறி, சுழி எறியும் கடலில் கிழிந்து அறுபட, மிக்க கலக்கத்தைச் செய்து வந்த அசுரர்கள் பொடிபட நடத்திய, தோகை நிரம்பிய பச்சை நிறமான குதிரையாகிய மயில் ஏறும் அரசனே, இமய மலை மயிலாகிய பார்வதியின் செல்வக் குமரனே, நெருப்பை ஏந்திய திருக் கரத்தனாகிய சிவபெருமானுடைய மகனே, கணபதியின் சகோதரனே, சரவணனே, நறு மணம் கொண்ட நூற்றிதழ்த் தாமரையில் பள்ளி கொண்டவனே, வேடர்கள் நற் கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற வள்ளி நாயகியின் முத்தாலாகிய மேலாடை வளைவுபட நிமிர்ந்து எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகாங்கிதம் கொண்டனவும், கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல் எழுதிய பெருமாளே.
மகரம் எறி கடல் விழியினு(ம்) மொழியினு(ம்) மதுப(ம்) முரல் குழல் வகையினு(ம்) நகையினும் வளமையினு(ம்) முக நிலவினும் இலவினு(ம்) நிறம் மூசும் மதுர இதழினும் ... மகர மீன்களை வீசி எறியும் கடல் போன்ற கண்ணிலும், அவர்களது பேச்சிலும், வண்டுகள் ஒலி செய்யும் கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும், வளப்பத்திலும், சந்திரன் போன்ற முகத்திலும், இலவ மலரைக் காட்டிலும் செந்நிற ஒளி விளங்கும் இனிமை தரும் வாயிதழிலும், இடையினு(ம்) நடையினு(ம்) மகளிர் முகுளித முலையினு(ம்) நிலையினும் வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம் பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் ... இடையிலும் நடையிலும், மாதர்களின் அரும்பிய மார்பிலும், (அவர்கள்) நிற்கும் நிலையிலும், தாமரை போன்றதும், சிலம்பு அணிந்ததுமான மலர் போன்ற அடிகளிலும், அந்த மாதர்களின் பெயர்களைச் சொல்லிச் செபித்தாலும், அவர்கள் இட்ட வேலைகளைச் செய்வதிலேயே ஈடுபட்டுத் திரிந்தாலும், உருகி நெறி முறை தவறினும் அவரோடு பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராகப் பரவை படியினும் வசம் அழியினும் ... (அவர் பொருட்டு) மனம் உருகி நீதி முறை தவறி நடந்தாலும், அவர்களோடு விகட மொழிகள் பேசினாலும், படுக்கையில் அவர்கள் கொடுக்கும் காமப் பற்றாகிய கடலில் முழுகினாலும், என் வசம் அழிந்தாலும், முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே ... முதன் முதலில், திருவண்ணாமலைப் பதியில் நீ கருணையோடு அளித்து அருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், உனது இரண்டு திருவடிகளையும் மறக்க மாட்டேன். ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல கனக கன குவடு அடியொடு முறிபட ... விண்ணுலகத்துத் தேவர் தலைவனாகிய இந்திரன் துதிக்க, (சூரனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளும் வட்டமான சக்ரவாள கிரியுடன் மிதிபட, வடக்கே உள்ள சிறந்த பொன்மயமான பருத்த (மேரு) மலை அடியோடு பொடிபட, முது சூதம் கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே ... பழைய மாமரத்து உருவில் இருந்த சூரன் அலறி, சுழி எறியும் கடலில் கிழிந்து அறுபட, மிக்க கலக்கத்தைச் செய்து வந்த அசுரர்கள் பொடிபட நடத்திய, தோகை நிரம்பிய பச்சை நிறமான குதிரையாகிய மயில் ஏறும் அரசனே, இமய மலை மயிலாகிய பார்வதியின் செல்வக் குமரனே, தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள சயன ... நெருப்பை ஏந்திய திருக் கரத்தனாகிய சிவபெருமானுடைய மகனே, கணபதியின் சகோதரனே, சரவணனே, நறு மணம் கொண்ட நூற்றிதழ்த் தாமரையில் பள்ளி கொண்டவனே, வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் தரள முகபட(ம்) நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே. ... வேடர்கள் நற் கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற வள்ளி நாயகியின் முத்தாலாகிய மேலாடை வளைவுபட நிமிர்ந்து எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகாங்கிதம் கொண்டனவும், கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல் எழுதிய பெருமாளே.