வாதம் பித்தமோடு சூலை விப்புருதி
ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு
ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு
மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம்
வேத வித்து பரிகோலம் உற்று விளை
யாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல
வேடம் இட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ
ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி
நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுண
ரோடு பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடி
யார்களுக்கும் உபகாரி பச்சை உமை
ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த சேயே
ஆதி கற்பக விநாயகற்கு பிற
கான பொன் சரவணா பர பிரமன்
ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே
ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம்
மேவி சுத்த மணம் ஆடி நல் புலியூர்
ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே.
வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி, கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல், கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண், அழுக்கு அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, ஊமை, கெட்ட வலிப்புகள், மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த உடல், முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம்பெறுகின்ற உடல், வேதத்தின் வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல், சூழ்கின்ற பலவிதமான வேடங்களைப் பூண்டு பொருளாசை கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே, வீடு கட்டி, அதனுள் காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து, (உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை அடையுமாறு வீட்டை அளித்து, நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ? அலையோசை மிகுந்த கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்) பொடிபட்டுக் கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு அழிந்து விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை உடையவனே, ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர், பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே, ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே, உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும் தினைப்புனத்துக்குச் சென்று பரிசுத்தமான வகையில் திருமணம் புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே.
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ... வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி, ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல் ... கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல், மாலை புற்று எழுதல் ஊசல் பற்ச(ன்)னி ஓடு அந்தி மாலை ... கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண், மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ... அழுக்கு அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு ... ஊமை, கெட்ட வலிப்புகள், மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த உடல், மாலை உற்ற தொ(ண்)ணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம் ... முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள் இடம்பெறுகின்ற உடல், வேத வித்து பரிகோலம் உற்று விளையாடுவித்த ... வேதத்தின் வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடல் ஓடம் ... கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல், மொய்த்த பல வேடம் இட்டு ... சூழ்கின்ற பலவிதமான வேடங்களைப் பூண்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே ... பொருளாசை கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே, வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ... வீடு கட்டி, அதனுள் காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து, ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற வீடு அளித்து ... (உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை அடையுமாறு வீட்டை அளித்து, மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ ... நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ? ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி ... அலையோசை மிகுந்த கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்) நீறு பட்டு அலற சூர(ன்) வெற்பு அவுணரோடு ... பொடிபட்டுக் கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா ... அழிந்து விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை உடையவனே, ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி ... ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர், பச்சை உமை ஓர் புறத்து அருள் சிகா மணி கடவுள் தந்த சேயே ... பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா ... முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே, பர பிரமன் ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே ... ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே, ஆசை பெற்ற குற மாதை நித்த(ம்) வனம் மேவி ... உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும் தினைப்புனத்துக்குச் சென்று சுத்த மணம் ஆடி நல் புலியூர் ... பரிசுத்தமான வகையில் திருமணம் புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில் ஆடகப் படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே. ... பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 487 thalam %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D thiru name %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81