நகைத்து உருக்கி விழித்து மிரட்டி
நடித்து விதத்தில் அதி மோகம்
நடத்து(ம்) சமத்தி முகத்தை மினுக்கி
நலத்தில் அணைத்து மொழியாலும்
திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை
திரட்டி எடுத்து வரவே செய்
திருட்டு முலைப் பெண் மருட்டு வலைக்குள்
தெவிட்டு கலைக்குள் விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து
படர்ச்சி கறுத்த மயில் ஏறி
பணைத்த கரத்த குணத்த மணத்த
பதத்த கனத்த தன மாதை
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து
வெளுத்த பொருப்பில் உறை நாதா
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க
ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே.
சிரித்து, (மனத்தை) உருக்கி, விழிகளை விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து, பல விதமாக அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கிக்கொண்டு, இதமாகவே அணைத்து, பேச்சினாலும் திகைப்பு உண்ட நிலையில், அவர்கள் கேட்டபடி கிடைத்த பொருளைக் கையில் சேகரித்துக்கொண்டு வரும்படி செய்கின்ற திருட்டுப் பெண்களின் மார்பகங்களான மயக்கம் தரும் காம வலையிலும், மிகுந்த காம சாத்திரச் செயல்களிலும் விழுவேனோ? பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து, படர்ந்த கரு நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி, செழுமையான திருக்கரங்களும், குணமான நறு மணம் கொண்ட பாதங்களும், விம்மிப் பெருத்த மார்பகங்களும் கொண்ட பெண்ணாகிய வள்ளியை, சிறப்பு மிக்க தினைப் புனத்தில் (வள்ளிமலையில்) வைத்து அணைத்து, வெள்ளி மலையாகிய கயிலைகிரியில் உறைகின்ற நாதனே, விரிந்துள்ள சடையில் கங்கை என்னும் ஒரு பெண் இருக்க, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு (உரிய) பெருமாளே.
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் ... சிரித்து, (மனத்தை) உருக்கி, விழிகளை விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து, பல விதமாக அதி மோகம் நடத்து(ம்) சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து ... அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கிக்கொண்டு, இதமாகவே அணைத்து, மொழியாலும் திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய் ... பேச்சினாலும் திகைப்பு உண்ட நிலையில், அவர்கள் கேட்டபடி கிடைத்த பொருளைக் கையில் சேகரித்துக்கொண்டு வரும்படி செய்கின்ற திருட்டு முலைப் பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ ... திருட்டுப் பெண்களின் மார்பகங்களான மயக்கம் தரும் காம வலையிலும், மிகுந்த காம சாத்திரச் செயல்களிலும் விழுவேனோ? பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி ... பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து, படர்ந்த கரு நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி, பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை ... செழுமையான திருக்கரங்களும், குணமான நறு மணம் கொண்ட பாதங்களும், விம்மிப் பெருத்த மார்பகங்களும் கொண்ட பெண்ணாகிய வள்ளியை, மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த பொருப்பில் உறை நாதா ... சிறப்பு மிக்க தினைப் புனத்தில் (வள்ளிமலையில்) வைத்து அணைத்து, வெள்ளி மலையாகிய கயிலைகிரியில் உறைகின்ற நாதனே, விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே. ... விரிந்துள்ள சடையில் கங்கை என்னும் ஒரு பெண் இருக்க, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு (உரிய) பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 519 thalam %E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 thiru name %E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF