சீரான கோல கால நவமணி மாலாபி ஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும் ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் ஈடாய வூமர் போல வணிகரி லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர ...... குருநாதா கூராழி யால்முன் வீய நினைபவ னீடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே கோடாம லார வார அலையெறி காவேரி யாறு பாயும் வயலியில் கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
சீரான கோலகால நவ மணி
மால் அபிஷேக பார வெகு வித
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளும் நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்
ஆராத காதல் வேடர் மட மகள்
ஜீமூதம் ஊர் வலாரி மட மகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும்
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும்
ஏர் ஆரும் மாட கூட மதுரையில்
மீது ஏறி மாறி ஆடும் இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதி செய்த
லீலா விசார தீர வரதர குருநாதா
கூர் ஆழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மாறு பாநு மறைவு செய்
கோபாலராய நேயம் உள திரு மருகோனே
கோடாமல் ஆரவார அலை எறி
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே.
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும், பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும், சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும், நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும், பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும், ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன். அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில், வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய இறையனார் அகப் பொருள் என்ற நூலுக்கு), நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள் அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக, தகுதி உள்ள ஊமைப் பிள்ளை போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே, முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்த கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே, தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும், கோனாடு என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே.
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ... வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும், வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ... பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும், சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ... சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும், நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ... நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ... முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும், ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ... பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், ஆராயும் நீதி வேலும் மயிலும் ... நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும், மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ... ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ... மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன். ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ... அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில், வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய 'இறையனார் அகப் பொருள்' என்ற நூலுக்கு), ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ... நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள் அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக, ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ... தகுதி உள்ள ஊமைப் பிள்ளை போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா ... ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே, முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு மறைவு செய் ... முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்த கோபாலராய நேயம் உள திரு மருகோனே ... கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே, கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் ... தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும், கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. ... கோனாடு என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 568 thalam %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88 thiru name %E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2