காம அத்திரமாகி இளைஞர்கள் வாழ் நாள் கொடு போகி அழகிய காது ஆட்டிய பார இரு குழை அளவோடி
கார் போல் தவழ் ஓதி நிழல் தனில் ஆர் வாள் கடை ஈடு கன(ம்) கொ(ண்)டு
கால் ஏற்று வை வேலின் முனைக் கடை யம தூதர் ஏமாப்பு அற மோக இயல் செய்து
நீலோற்பல ஆசு இல் மலருடன் நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார் பால் ஏகாப் பழி பூணும் மருள் அற
நீ தோற்றி மு(ன்)னாளும் அடிமையை ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே
சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி
சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை
சீ(ர்) கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு சீராட்டொடு பேண
வட திசை கயிலாச கோமாற்கு உபதேசம் உபநிட வேத அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள்
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே
கோடாச் சிவ பூஜை பவுருஷ மாறாக் கொடை நாளும் மருவிய
கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே.
(முதல் ஒன்பது வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மன்மதனுடைய பாணமாக இருந்து, இளைஞர்களின் உயிரைக் கவர்ந்து சென்று, அழகு வாய்ந்த காதில் ஆடுகின்ற கனத்த இரண்டு குண்டலங்கள் வரையிலும் ஓடிச் சென்று, கருமேகம் போல் தவழ்ந்து விளங்கும் கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று, வாள் முனை போன்று வலிமையும் பெருமையும் கொண்டதாய், கொடுங் காற்றின் தன்மை கொண்டு, கூரிய வேலின் முனை நுனி போன்ற இக்கண்களின் கொடுமை முன் (நாம் எம்மட்டு எனும்படி) யம தூதுவர்கள் இறுமாப்பை இழக்க, மோகத் தன்மையை ஊட்டி, நீலோற்பலத்தின் குற்றமில்லாத மலருக்கு ஒப்பான ஆட்டத்தையும் ஆச்சரியத்தையும் காட்டும் கண்களை உடைய வேசியர் மீது நீங்காத நிந்தையான பழிச் சொல்லைக் கொண்டிருந்த மயக்கம் (என்னை) விட்டு நீங்க, நீ எதிரில் தோன்றி முன்பு அடிமையாகிய என்னைக் கரை ஏற்றிய காரணத்தால் உன் அருளின் திறத்தை நான் மறக்க மாட்டேன். பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி, நல்லொழுக்கம் உள்ள உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும், ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன் உன்னைப் போற்ற, வட திசையில் உள்ள கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து, அறியாமை என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க வாய்ந்த இளையவனே, நெறி தவறாத முறையில் சிவ பூஜையும், ஆண்மையும், இல்லை என்னாத கொடையும் தினந்தோறும் பொருந்தியுள்ள கோனாட்டைச் சேர்ந்த விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(முதல் ஒன்பது வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). காம அத்திரமாகி இளைஞர்கள் வாழ் நாள் கொடு போகி அழகிய காது ஆட்டிய பார இரு குழை அளவோடி ... மன்மதனுடைய பாணமாக இருந்து, இளைஞர்களின் உயிரைக் கவர்ந்து சென்று, அழகு வாய்ந்த காதில் ஆடுகின்ற கனத்த இரண்டு குண்டலங்கள் வரையிலும் ஓடிச் சென்று, கார் போல் தவழ் ஓதி நிழல் தனில் ஆர் வாள் கடை ஈடு கன(ம்) கொ(ண்)டு ... கருமேகம் போல் தவழ்ந்து விளங்கும் கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று, வாள் முனை போன்று வலிமையும் பெருமையும் கொண்டதாய், கால் ஏற்று வை வேலின் முனைக் கடை யம தூதர் ஏமாப்பு அற மோக இயல் செய்து ... கொடுங் காற்றின் தன்மை கொண்டு, கூரிய வேலின் முனை நுனி போன்ற இக்கண்களின் கொடுமை முன் (நாம் எம்மட்டு எனும்படி) யம தூதுவர்கள் இறுமாப்பை இழக்க, மோகத் தன்மையை ஊட்டி, நீலோற்பல ஆசு இல் மலருடன் நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார் பால் ஏகாப் பழி பூணும் மருள் அற ... நீலோற்பலத்தின் குற்றமில்லாத மலருக்கு ஒப்பான ஆட்டத்தையும் ஆச்சரியத்தையும் காட்டும் கண்களை உடைய வேசியர் மீது நீங்காத நிந்தையான பழிச் சொல்லைக் கொண்டிருந்த மயக்கம் (என்னை) விட்டு நீங்க, நீ தோற்றி மு(ன்)னாளும் அடிமையை ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே ... நீ எதிரில் தோன்றி முன்பு அடிமையாகிய என்னைக் கரை ஏற்றிய காரணத்தால் உன் அருளின் திறத்தை நான் மறக்க மாட்டேன். சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி ... பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி, சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை ... நல்லொழுக்கம் உள்ள உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும், சீ(ர்) கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு சீராட்டொடு பேண ... ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன் உன்னைப் போற்ற, வட திசை கயிலாச கோமாற்கு உபதேசம் உபநிட வேத அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள் ... வட திசையில் உள்ள கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து, கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே ... அறியாமை என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க வாய்ந்த இளையவனே, கோடாச் சிவ பூஜை பவுருஷ மாறாக் கொடை நாளும் மருவிய ... நெறி தவறாத முறையில் சிவ பூஜையும், ஆண்மையும், இல்லை என்னாத கொடையும் தினந்தோறும் பொருந்தியுள்ள கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே. ... கோனாட்டைச் சேர்ந்த விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.