தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த ...... தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
தாரகாசுரன்சரிந்து வீழ வேருடன்பறிந்து
சாதி பூதரம் குலுங்க முதுமீனச்
சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்கடம்ப மததாரை
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து
மானை யாளு நின்ற குன்ற மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு
பானல் கூவிளம் கரந்தை அறுகோடே
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த
சீதளாரவிந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு
தேவனூர்விளங்க வந்த பெருமாளே.
தாரகாசுரன் நிலை பெயர்ந்து வீழ்ந்து இறக்க, வேருடன் பறிபட்டு மேலான மேருமலையும் நடுக்கம் கொள்ள, முற்றிய மீன்களைக் கொண்ட அழகும் ஓசையும் உடைய சமுத்திரம் கலக்கமுற்று பெரும் தீயில் பட, அன்று கூரிய வேலினைச் செலுத்திய கடம்பனே என்றும், மதநீர் ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள பெருந்தலை கொண்டதுமான மலைபோன்ற ஐராவதம் என்ற யானை மீது அமர்ந்த தேவயானை என்னும் மானைப் போன்றவளும், வள்ளிமலை என்ற குன்றத்தில் இருந்த மான் போன்ற வேடப்பெண் வள்ளியும், இருவரும் ஆசை கொள்ளும் நண்பனே என்றும், சிறந்த மயில்வாகனனே என்றும், என் ஆசை தீர என்று மனம் ஒருநிலையில் நின்று புகழ்வேனோ? (பார்வதி தேவியின்) பாரமான மார்பின் தழும்பை உடையவர், செம்பொன் போன்ற திருமேனியாளர், கங்கை நதி, வெண்ணிறத்துக் கபால மாலை, கொன்றை, தும்பை, சிறுதாளி என்னும் பூக்கள், பாரமான பாம்புகள், நொச்சிப்பூ இவற்றை மாலையாகப் பூண்டவர், எலும்பு, அடம்பு என்ற மலர், கருங்குவளை, வில்வம், கரந்தை, அறுகம்புல் இவற்றோடு சேர்ந்து விளங்கி மணக்கும் பெருமான், ஈசனார் ஆகிய சிவனின் இடது பாகத்தில் சிறந்து விளங்கும் குளிர்ந்த தாமரையில் அமரும் மாது பார்வதி தேவியின் பெருஞ் செல்வமே, தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி பூமியில் வந்து வணங்கும் தேவனூருக்கு விளக்கம் தர வந்த பெருமாளே.
தாரகாசுரன்சரிந்து வீழ ... தாரகாசுரன் நிலை பெயர்ந்து வீழ்ந்து இறக்க, வேருடன்பறிந்து சாதி பூதரம் குலுங்க ... வேருடன் பறிபட்டு மேலான மேருமலையும் நடுக்கம் கொள்ள, முதுமீனச் சாகர ஓதை அம் குழம்பி நீடு தீகொளுந்த ... முற்றிய மீன்களைக் கொண்ட அழகும் ஓசையும் உடைய சமுத்திரம் கலக்கமுற்று பெரும் தீயில் பட, அன்று தாரை வேல்தொ டுங்கடம்ப ... அன்று கூரிய வேலினைச் செலுத்திய கடம்பனே என்றும், மததாரை ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் ... மதநீர் ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள பெருந்தலை கொண்டதுமான மலைபோன்ற ஐராவதம் என்ற யானை மீது பொருந்து மானை யாளு ... அமர்ந்த தேவயானை என்னும் மானைப் போன்றவளும், நின்ற குன்ற மறமானும் ... வள்ளிமலை என்ற குன்றத்தில் இருந்த மான் போன்ற வேடப்பெண் வள்ளியும், ஆசை கூரு நண்ப என்று ... இருவரும் ஆசை கொள்ளும் நண்பனே என்றும், மாம யூர கந்த என்றும் ... சிறந்த மயில்வாகனனே என்றும், ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ ... என் ஆசை தீர என்று மனம் ஒருநிலையில் நின்று புகழ்வேனோ? பார மார்தழும்பர் செம்பொன் மேனியாளர் ... (பார்வதி தேவியின்) பாரமான மார்பின் தழும்பை உடையவர், செம்பொன் போன்ற திருமேனியாளர், கங்கை வெண்கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி ... கங்கை நதி, வெண்ணிறத்துக் கபால மாலை, கொன்றை, தும்பை, சிறுதாளி என்னும் பூக்கள், பார மாசுணங்கள் சிந்து வார ஆரம் என்பு அடம்பு ... பாரமான பாம்புகள், நொச்சிப்பூ இவற்றை மாலையாகப் பூண்டவர், எலும்பு, அடம்பு என்ற மலர், பானல் கூவிளம் கரந்தை அறுகோடே ... கருங்குவளை, வில்வம், கரந்தை, அறுகம்புல் இவற்றோடு சேரவே மணந்த நம்பர் ஈசனார் ... சேர்ந்து விளங்கி மணக்கும் பெருமான், ஈசனார் ஆகிய சிவனின் இடம் சிறந்த சீதளாரவிந்த வஞ்சி பெருவாழ்வே ... இடது பாகத்தில் சிறந்து விளங்கும் குளிர்ந்த தாமரையில் அமரும் மாது பார்வதி தேவியின் பெருஞ் செல்வமே, தேவர் யாவருந்திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு ... தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி பூமியில் வந்து வணங்கும் தேவனூர்விளங்க வந்த பெருமாளே. ... தேவனூருக்கு விளக்கம் தர வந்த பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 735 thalam %E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D thiru name %E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81