ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும் ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க ளகன்று கோலக்கழ லேபெற இன்று ...... அருள்வாயே சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம ணோர்கழு வின்கண் ...... மிசையேறத் தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று தீமைப்பிணி தீர வுவந்த ...... குருநாதா கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி மாயம் மிகுந்த
ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும்
ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்
கோலம் எழுந்து ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி
கூனித் தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச் சடம் ஈதை உகந்து புவி மீதே
கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று
கோலக் கழலே பெற இன்று அருள்வாயே
சேனக் குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற
தீரத் திரு நீறு புரிந்து மீனக் கொடியோன் உடல் துன்று
தீமைப் பிணி தீர உவந்த குருநாதா
கானச் சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து
காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காணக் கணியாக வளர்ந்து ஞானக் குற மானை மணந்து
காழிப் பதி மேவி உகந்த பெருமாளே.
அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடிகொண்டு நடந்தும், இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை, மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக. சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில், மதுரையில் முன்பு (சம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி, கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து, திடத்துடன் திரு நீற்றை விநியோகித்து, மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டியனின் உடலில் பொருந்திய கொடிய சுர நோய் தீரும்படியாக அருள் சுரந்த குரு நாதனே, (வள்ளி மலைக்) காட்டில் மீது இருந்த சிறு மான் போன்ற வள்ளியை நினைந்து, தினைப்புனத்தில் நடந்து சென்று, ஆசைக் கிளியாகிய அவளோடு பேசி, வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து, அந்த ஞானக் குறப்பெண்ணை மணந்து, சீகாழிப் பதியில் அமர்ந்து மகிழும் பெருமாளே.
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி ... அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை, மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை ... மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறு குடிலாகிய இந்த உடல் மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் எழுந்து ... நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து, ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி ... ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும், கூனித் தடியோடு நடந்து ... கூனித் தடிகொண்டு நடந்தும், ஈனப்படு கோழை மிகுந்த கூளச் சடம் ஈதை ... இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை, உகந்து புவி மீதே கூசப் பிரமாண ... மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று ... இந்த உலக மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி, கோலக் கழலே பெற இன்று அருள்வாயே ... உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக. சேனக் குரு கூடலில் அன்று ... சேனன் என்னும் பட்டப் பெயர் வைத்திருந்த சமண குருக்களின் முன்னிலையில், மதுரையில் முன்பு ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து ... (சம்பந்தராக வந்து) ஞானத் தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி, சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏற ... கூட்டமான சமணர்கள் கழுவில் ஏறும்படிச் செய்து, தீரத் திரு நீறு புரிந்து ... திடத்துடன் திரு நீற்றை விநியோகித்து, மீனக் கொடியோன் உடல் துன்று ... மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டியனின் உடலில் பொருந்திய தீமைப் பிணி தீர உவந்த குருநாதா ... கொடிய சுர நோய் தீரும்படியாக அருள் சுரந்த குரு நாதனே, கானச் சிறு மானை நினைந்து ... (வள்ளி மலைக்) காட்டில் மீது இருந்த சிறு மான் போன்ற வள்ளியை நினைந்து, ஏனல் புனம் மீது நடந்து ... தினைப்புனத்தில் நடந்து சென்று, காதல் கிளியோடு மொழிந்து ... ஆசைக் கிளியாகிய அவளோடு பேசி, சிலை வேடர் காணக் கணியாக வளர்ந்து ... வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாக வேங்கை மரமாக வளர்ந்து, ஞானக் குற மானை மணந்து ... அந்த ஞானக் குறப்பெண்ணை மணந்து, காழிப் பதி மேவி உகந்த பெருமாளே. ... சீகாழிப் பதியில் அமர்ந்து மகிழும் பெருமாளே.