எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி யெத்தனை கோடி போன ...... தளவேதோ இப்படி மோக போக மிப்படி யாகி யாகி யிப்படி யாவ தேது ...... இனிமேலோ சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச் சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது சித்திர ஞான பாத ...... மருள்வாயே நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு பத்திர பாத நீல ...... மயில்வீரா பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி
எத்தனை கோடி போனது அளவேதோ
இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி
இப்படி யாவ தேது இனிமேல்
யோசித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது
சித்திர ஞான பாதம் அருள்வாயே
நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடதாக
நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுருவான மூணு
நெட்டிலை சூல பாணி அருள்பாலா
பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல மயில் வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் பெருமாளே.
எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புது உடல்களில் ஓடிப்புகுந்தும், ஆடியும், இவ்வாறு எத்தனை கோடிப் பிறப்புக்கள் போனதோ? இதற்கு ஓர் அளவும் உண்டோ? இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன பயன்? இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால், சீசசீ, சீச்சீ, மிக இழிவானது இந்த மாயமான வாழ்க்கை. இதன் சிக்கலில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை, அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து, மூன்று தமிழ்த் துறையிலும் வல்ல புலவர்கள் ஓதுகின்ற உன் அழகிய ஞானத் திருவடிகளை எனக்கு அருள்வாயாக. நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின் உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக் கொண்டு அதில் நடனமாடிடும் ஆறுமுகத்துக் கடவுளே, உருவ அருவமாக உள்ளவரும், பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும், மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவபெருமான் அருளிய புதல்வனே, ஆயிரம் பெரிய படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை உடைய நீல மயில் மீது வரும் வீரனே, பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்கும் வேளூரில் விருப்புடன் அமரும் முத்தேவர் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே.
எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி ... எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, புது உடல்களில் ஓடிப்புகுந்தும், ஆடியும், எத்தனை கோடி போனது அளவேதோ ... இவ்வாறு எத்தனை கோடிப் பிறப்புக்கள் போனதோ? இதற்கு ஓர் அளவும் உண்டோ? இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி ... இவ்வாறு மோகமும் போகமும் கலந்து, இப்படி பிறந்து இறந்து இப்படி யாவ தேது ... மீண்டும் இவ்வாறு பிறந்து ஆவதினால் என்ன பயன்? இனிமேல் யோசித்திடில் ... இனிமேல் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்தால், சீசி சீசி குத்திர மாய மாயை ... சீசசீ, சீச்சீ, மிக இழிவானது இந்த மாயமான வாழ்க்கை. சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை ... இதன் சிக்கலில் அகப்பட்டு மாய்கின்ற அடியேனை, சித்தினில் ஆடலோடு ... அறிவு என்னும் மேடையிலே ஆட்டுவித்து, முத்தமிழ் வாணர் ஓது ... மூன்று தமிழ்த் துறையிலும் வல்ல புலவர்கள் ஓதுகின்ற சித்திர ஞான பாதம் அருள்வாயே ... உன் அழகிய ஞானத் திருவடிகளை எனக்கு அருள்வாயாக. நித்தமும் ஓதுவார்கள் ... நாள்தோறும் உன்னைத் துதிப்பவர்களின் சித்தமெ வீடதாக ... உள்ளமே நீ தங்கியுள்ள இருப்பிடமாகக் கொண்டு நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே ... அதில் நடனமாடிடும் ஆறுமுகத்துக் கடவுளே, நிட்கள ரூபர் பாதி பச்சுருவான ... உருவ அருவமாக உள்ளவரும், பாதி மரகதப் பச்சை நிற உடல் கொண்டவரும், மூணு நெட்டிலை சூல பாணி ... மூன்று நீண்ட இலைகளை உடைய சூலத்தைக் கையில் ஏந்தியவருமான அருள்பாலா ... சிவபெருமான் அருளிய புதல்வனே, பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது ... ஆயிரம் பெரிய படங்கொண்ட தலைகள் வாய்த்த ஆதிசேஷனை பீறு பத்திர பாத ... கீறிக் கிழிக்கும் வாள் போன்ற கூரிய நகங்களை உடைய நீல மயில் வீரா ... நீல மயில் மீது வரும் வீரனே, பச்சிள பூக பாளை ... பசுமையான இளம் கமுக மரத்தின் மடல் மீது செய்க்கயல் தாவு வேளூர் ... வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்கும் வேளூரில் பற்றிய மூவர் தேவர் பெருமாளே. ... விருப்புடன் அமரும் முத்தேவர் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) போற்றும் பெருமாளே.
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song sequence no 780 thalam %E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D thiru name %E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF