தலை நாளில் பதம் ஏத்தி அன்புற உபதேசப் பொருள் ஊட்டி
மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை அருளால்
உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி
முண்டக தளிர் வேதத் துறை காட்டி மண்டலம் வலம் மேவும்
கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி
முன் சுழி கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி
கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி வெளியாகப் புக ஏற்றி
அன்பொடு கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல் மறவேனே
சிலை வீழக் கடல் கூட்டமும் கெட
அவுணோரைத் தலை வாட்டி அம்பர சிர மாலைப் புக ஏற்றவும் தொடு கதிர்வேலா
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாகத் தொடையார்க்கு
உகந்து ஒரு சிவ ஞானப் பொருள் ஊட்டும் முண்டக அழகோனே
மலை மேவித் தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆகத் தன வாட்டி
இந்துளம் மலர் மாலைக் குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா
வரி கோழிக் கொடி மீக் கொளும்படி நடமாடி
சுரர் போற்று(ம்) தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே.
வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து, சிவ மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை உனது திருவருளால் உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி, முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும் உள்ள மேலிடத்தில், இடைகலை பிங்கலை என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து, முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிஷ்டான ஆதாரத்தைக் கடந்து, மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து, அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன். கிரெளஞ்ச மலை வீழவும், கடல் போன்ற காலாட் படைக்கூட்டம் கெட்டு அழியவும், அசுரர்களின் தலைகளை அழித்து, ஆகாயத்தின் உச்சியில் தலைகளின் மாலையை ஏற்றி வைக்கவும் செலுத்திய ஒளிமயமான வேலனே, சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற காதலரும், என் தந்தையும், வரிகளை உடைய பாம்பு மாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு, மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவ ஞானப் பொருளை உபதேசித்த, தாமரை மலர் போன்ற முகமுடைய அழகனே, வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்தைக் காத்து வந்த அழகுக் கிளி, அமுதைப் போல உடலும் மார்பகங்களும் கொண்டவள், கடப்ப மலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிக் கொண்டவள் ஆகிய வள்ளி என்னும் தெய்வ மகளின் கணவனே, நீண்ட கோழிக் கொடி மேலே விளங்கும்படி நடனமாடியவனே, தேவர்கள் போற்றும் குளிர்ந்த சோலைகளை உடைய வழுவூர் என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
தலை நாளில் பதம் ஏத்தி அன்புற உபதேசப் பொருள் ஊட்டி ... வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து, மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை அருளால் ... சிவ மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை உனது திருவருளால் உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி ... உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி, முண்டக தளிர் வேதத் துறை காட்டி மண்டலம் வலம் மேவும் ... முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும் உள்ள மேலிடத்தில், கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி ... இடைகலை பிங்கலை என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து, முன் சுழி கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி ... முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிஷ்டான ஆதாரத்தைக் கடந்து, கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி வெளியாகப் புக ஏற்றி ... மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து, அன்பொடு கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல் மறவேனே ... அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன். சிலை வீழக் கடல் கூட்டமும் கெட ... கிரெளஞ்ச மலை வீழவும், கடல் போன்ற காலாட் படைக்கூட்டம் கெட்டு அழியவும், அவுணோரைத் தலை வாட்டி அம்பர சிர மாலைப் புக ஏற்றவும் தொடு கதிர்வேலா ... அசுரர்களின் தலைகளை அழித்து, ஆகாயத்தின் உச்சியில் தலைகளின் மாலையை ஏற்றி வைக்கவும் செலுத்திய ஒளிமயமான வேலனே, சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாகத் தொடையார்க்கு ... சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற காதலரும், என் தந்தையும், வரிகளை உடைய பாம்பு மாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு, உகந்து ஒரு சிவ ஞானப் பொருள் ஊட்டும் முண்டக அழகோனே ... மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவ ஞானப் பொருளை உபதேசித்த, தாமரை மலர் போன்ற முகமுடைய அழகனே, மலை மேவித் தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆகத் தன வாட்டி ... வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்தைக் காத்து வந்த அழகுக் கிளி, அமுதைப் போல உடலும் மார்பகங்களும் கொண்டவள், இந்துளம் மலர் மாலைக் குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா ... கடப்ப மலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிக் கொண்டவள் ஆகிய வள்ளி என்னும் தெய்வ மகளின் கணவனே, வரி கோழிக் கொடி மீக் கொளும்படி நடமாடி ... நீண்ட கோழிக் கொடி மேலே விளங்கும்படி நடனமாடியவனே, தேவர்கள் போற்றும் குளிர்ந்த சோலைகளை உடைய சுரர் போற்று(ம்) தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே. ... வழுவூர் என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.