சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
858   திருவிடைமருதூர் திருப்புகழ் ( - வாரியார் # 868 )  

அறுகுநுனி பனி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா ...... தனதன தனதான


அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
     ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
     ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
     ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
     ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
     வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
     ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
     மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
     சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
     வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
     வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
     வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
     மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
     வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
     பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
     வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
     மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
     காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
     வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
     ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
     ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
     ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
     ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.

அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு
     ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய்
அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய
     ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினில் அருமை இட மொளு மொளு என உடல் வளர
     ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய் அவர் ஒரு பெரியோராய்
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி
     ஆவியாய ஓர் தேவிமாருமாய்
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என
     வீடு வாசலாய் மாட கூடமாய்
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி
     ஆசை ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில்
     மேலை வீடு கேள் கீழை வீடு கேள்
திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு
     சீறி ஞாளி போல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு
     வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா விதி தனை நினையாதே
மினுகு மினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும்
     வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனின் வரு
     வார்கள் போகுவார் காணுமோ எனா
விடு துறவு பெரியவரை மறையவரை வெடு வெடு என
     மேளமே சொலாய் ஆளி வாயராய் மிடை உற வரு நாளில்
வறுமைகளு(ம்) முடுகி வர உறு பொருளு(ம்) நழுவ சில
     வாதம் ஊது காமாலை சோகை நோய்
பெரு வயிறு வயிறு வலி படுவன் வர இரு விழிகள்
     பீளை சாறு இடா ஈளை மேலிடா
வழ வழ என உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ
     வாடி ஊன் எலாம் நாடி பேதமாய் மனையவள் மனம் வேறாய்
மறுக மனை உறும் அவர்கள் நணுகு நணுகு எனும் அளவில்
     மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவு தனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடு
     காடு வா எனா வீடு போ எனா
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி
     வாயு மேலிடா ஆவி போகு நாள் மனிதர்கள் பல பேச
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ
     ஏழை மாதராள் மோதி மேல் விழா
எனது உடைமை எனது அடிமை எனும் அறிவு சிறிதும் அற
     ஈ மொலேல் எனா வாயை ஆ எனா
இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய
     ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும்
     ஏசிடார்களோ பாச நாசனே
இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற
     ஏக போகமாய் நீயு(ம்) நானுமாய்
இறுகும் வகை பரம சுக மதனை அருள் இடை மருதில்
     ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே.
அறுகம் புல்லின் நுனியில் உள்ள பனி போல சிறிய துளி ஒன்று பெரியதான ஓருடலை அடைந்ததாகி, ஒரு குழந்தை உருவம் கொண்டு வெளிவர, அந்த அருமைக் குழந்தையின் மழலை மொழிகளில் கனிவு கொண்டு அக் குழந்தையின் தாயும் தந்தையும், அதன் மீது உலக மாயையின் வசப்பட்டு வெகு வெகு அருமையாக அன்பு காட்டி வளர்க்க, மொளு மொளு என்று உடலும் வளர, கவலை அற்ற இன்ப வாழ்க்கையராய் இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர் ஒரு பெரியவராகி அழகு விளங்கும் நடையைக் கொண்டவராய், ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களில் பழகினவராய், உயிர்போல அருமை வாய்ந்த மனைவிமாருடன், விழப் போகும் சுவரை, மாதர்கள் என்னும் பெருங் குழியை நிலைத்திருக்கும் என்று எண்ணி, வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்து, அணு அளவு தவிடும் கீழே விழுந்து சிதறக் கூடாது என மன அழுத்தம் கொண்டு, ஆசைக்கு ஆளாக ஊசியின் தன்மை பூண்டவராய், அவிந்து போவதற்கு முன் ஒளி விட்டு எரியும் விளக்கைப் போல (பின் வரும் கேடு தெரியாது மகிழ்ந்திருந்து), சுத்த தரித்திரன் ஒருவனோ, தவ புருஷனோ அமுது படையுங்கள் என்று கேட்ட உடனே, மேலை வீட்டுக்குப் போங்கள், கீழை வீட்டுக்குப் போங்கள் எனச் சொல்லி, திடு திடென்று நடந்து போய், பிச்சை கேட்டவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச் சென்று அவர்கள் மேல் மிகவும் கோபித்து, நாயைப் போல் பாய்ந்து விழுந்து, தமது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப் போவதற்கான பேச்சுக்களைப் பேசும் ஒரு வீணர்களின் பேச்சே நல்லது என மேற்கொள்ளப்பட்டதாகி, வரப் போகும் விதியின் போக்கைச் சற்றும் யோசிக்காமல், மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த தேகம் முற்றும் வளைவுற்றுத் தளரவும், வீண் பொழுது போக்குபவர்களின் தரிசனத்தையே மேற் கொண்ட பாவியாகி, அம் மறு பிறப்பில் துன்பம் நேரும் என்று அறிவுரை கூறுபவரை, உம் பேச்சை நிறுத்தும், கோரைப் புல் போலத் தோன்றி மறைபவர்கள் (மறுமை என்ற ஒன்றை) காண்பார்களா என்ன என்று எதிர்த்துப் பேசியும், பாசங்களை விட்ட துறவிகளாகிய பெரியோர்களையும் வேதியர்களையும் வெடு வெடு என்று காரமாகப் பேசியும், தவில் வாத்தியம் போல் பேரொலியுடன் இரைந்து பேசி, யாளி போலத் திறந்த வாயினராய் மாதர்களுடன் புணர்ச்சி பொருந்திக் காலங் கழித்து வரும் நாளில், வறுமைகள் நெருங்கி வர, கையில் உள்ள பொருளும் விலகி ஒழிய, சில வகையான வாத சம்பந்தமான நோய்கள, உடல் வீக்கம் தரும் காமாலை, ரத்தம் இன்மையால் உடல் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய், மகோதர நோய், வயிற்று வலி, ஒரு வகையான புண் கட்டி இவையெல்லாம் வர, இரண்டு கண்களிலும் பீளை ஒழுக, கோழை மேலிட்டு எழ, வழ வழ என்று உமிழ்கின்ற கபம் கொழ கொழ என்று ஒழுகி விழ, தேகத்தில் உள்ள சதை எல்லாம் வற்றிப் போய் நாடியும் பேதப்பட்டு வேறாகி, மனையாளும் (இனி எப்படி இவர் பிழைப்பது என) மன உறுதி வேறுபட்டு கலக்கம் உற, வீட்டில் உள்ளவர்களும் சமீபத்தில் சென்று பாருங்கள் என்று சொல்லும் போது, பெண்கள் சீ என வெறுக்க, குழந்தைகள் சீ என்று அருவருக்க, கனவில் தேர் வருவது போலவும் குதிரை வருவது போலவும் காட்சிகள் தோன்ற, பெரிய சுடுகாடு வா என்று கூப்பிட, வீடு போ என்று கூற, சாமர்த்தியம் அழிய, உற்சாகம் அழிய, பேச்சுத் தடுமாறி, கண்கள் சொருகிப் போக, மேல் மூச்சு எழ உயிர் உடலை விட்டுக் கழியும் நாளில் மனிதர்கள் பல பேச்சுக்கள் பேச, இவர் இறந்த பின் நமது எல்லா வளமும் அற்றதென்று சுற்றத்தார் எல்லாம் கதறி அழ, அறியாமை கொண்ட மாதர்கள் தலையில் அடித்துக் கொண்டு மேலே விழ, என்னுடைய பொருள், என்னுடைய அடிமை ஆட்கள் என்கின்ற அறிவு சிறிதளவும் இல்லாமல போக, ஈக்கள் மொலேல் என்று உடலை மொய்க்க, (உயிர் பிரிந்ததும்) வாயை ஆ என்று திறந்து வைக்க, ஒடுங்கின ஒலி செய்யும் பறை, சிறிய பறைகள், திமிலை என்ற ஒரு வகையான பறையுடன் மேளவகை (இவை எல்லாம்) ஒலிக்க சுடு காட்டுக்கே கொணரப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு, நெருப்பில் இடப்படும் இத்தகைய வாழ்க்கையை (உனது) இரண்டு திருவடிகளைப் போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதென்றால அவர்களை உலகத்தார் இகழ மாட்டார்களா? பாச நாசம் செய்யும் பெருமாளே, (ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய, ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக. திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் தனி நாயகனே, தேவர்கள் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம்
ஆகி ஓர் பால ரூபமாய்
... அறுகம் புல்லின் நுனியில் உள்ள பனி
போல சிறிய துளி ஒன்று பெரியதான ஓருடலை அடைந்ததாகி, ஒரு
குழந்தை உருவம் கொண்டு வெளிவர,
அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய ஆயி
தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமை இட
மொளு மொளு என உடல் வளர
... அந்த அருமைக் குழந்தையின்
மழலை மொழிகளில் கனிவு கொண்டு அக் குழந்தையின் தாயும்
தந்தையும், அதன் மீது உலக மாயையின் வசப்பட்டு வெகு வெகு
அருமையாக அன்பு காட்டி வளர்க்க, மொளு மொளு என்று உடலும் வளர,
ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய் அவர் ஒரு பெரியோராய்
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி
... கவலை
அற்ற இன்ப வாழ்க்கையராய் இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர்
ஒரு பெரியவராகி அழகு விளங்கும் நடையைக் கொண்டவராய்,
ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களில் பழகினவராய்,
ஆவியாய ஓர் தேவிமாருமாய் விழு சுவரை அரிவையர்கள் படு
குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய்
...
உயிர்போல அருமை வாய்ந்த மனைவிமாருடன், விழப் போகும் சுவரை,
மாதர்கள் என்னும் பெருங் குழியை நிலைத்திருக்கும் என்று எண்ணி,
வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்து,
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை
ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே
... அணு
அளவு தவிடும் கீழே விழுந்து சிதறக் கூடாது என மன அழுத்தம்
கொண்டு, ஆசைக்கு ஆளாக ஊசியின் தன்மை பூண்டவராய், அவிந்து
போவதற்கு முன் ஒளி விட்டு எரியும் விளக்கைப் போல (பின் வரும்
கேடு தெரியாது மகிழ்ந்திருந்து),
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில்
மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என
நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி
... சுத்த
தரித்திரன் ஒருவனோ, தவ புருஷனோ அமுது படையுங்கள் என்று
கேட்ட உடனே, மேலை வீட்டுக்குப் போங்கள், கீழை வீட்டுக்குப்
போங்கள் எனச் சொல்லி, திடு திடென்று நடந்து போய், பிச்சை
கேட்டவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச்
சென்று அவர்கள் மேல் மிகவும் கோபித்து,
ஞாளி போல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வரு பொருள்கள்
சுவறி இட மொழியும் ஒரு வீணியார் சொ(ல்)லே மேலது
ஆயிடா விதி தனை நினையாதே
... நாயைப் போல் பாய்ந்து
விழுந்து, தமது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப்
போவதற்கான பேச்சுக்களைப் பேசும் ஒரு வீணர்களின் பேச்சே நல்லது
என மேற்கொள்ளப்பட்டதாகி, வரப் போகும் விதியின் போக்கைச்
சற்றும் யோசிக்காமல்,
மினுகு மினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
... மினுகு மினுகு என்று
செழிப்புற்றிருந்த தேகம் முற்றும் வளைவுற்றுத் தளரவும், வீண் பொழுது
போக்குபவர்களின் தரிசனத்தையே மேற் கொண்ட பாவியாகி,
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனின்
வருவார்கள் போகுவார் காணுமோ எனா
... அம் மறு பிறப்பில்
துன்பம் நேரும் என்று அறிவுரை கூறுபவரை, உம் பேச்சை நிறுத்தும்,
கோரைப் புல் போலத் தோன்றி மறைபவர்கள் (மறுமை என்ற ஒன்றை)
காண்பார்களா என்ன என்று எதிர்த்துப் பேசியும்,
விடு துறவு பெரியவரை மறையவரை வெடு வெடு என
மேளமே சொலாய் ஆளி வாயராய் மிடை உற வரு நாளில்
...
பாசங்களை விட்ட துறவிகளாகிய பெரியோர்களையும் வேதியர்களையும்
வெடு வெடு என்று காரமாகப் பேசியும், தவில் வாத்தியம் போல்
பேரொலியுடன் இரைந்து பேசி, யாளி போலத் திறந்த வாயினராய்
மாதர்களுடன் புணர்ச்சி பொருந்திக் காலங் கழித்து வரும் நாளில்,
வறுமைகளு(ம்) முடுகி வர உறு பொருளு(ம்) நழுவ சில
வாதம் ஊது காமாலை சோகை நோய் பெரு வயிறு வயிறு
வலி படுவன் வர
... வறுமைகள் நெருங்கி வர, கையில் உள்ள
பொருளும் விலகி ஒழிய, சில வகையான வாத சம்பந்தமான நோய்கள,
உடல் வீக்கம் தரும் காமாலை, ரத்தம் இன்மையால் உடல் வெளுத்து
ஊதுமாறு செய்யும் நோய், மகோதர நோய், வயிற்று வலி, ஒரு வகையான
புண் கட்டி இவையெல்லாம் வர,
இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா வழ வழ என
உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம்
நாடி பேதமாய்
... இரண்டு கண்களிலும் பீளை ஒழுக, கோழை
மேலிட்டு எழ, வழ வழ என்று உமிழ்கின்ற கபம் கொழ கொழ என்று
ஒழுகி விழ, தேகத்தில் உள்ள சதை எல்லாம் வற்றிப் போய் நாடியும்
பேதப்பட்டு வேறாகி,
மனையவள் மனம் வேறாய் மறுக மனை உறும் அவர்கள்
நணுகு நணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா
...
மனையாளும் (இனி எப்படி இவர் பிழைப்பது என) மன உறுதி வேறுபட்டு
கலக்கம் உற, வீட்டில் உள்ளவர்களும் சமீபத்தில் சென்று பாருங்கள்
என்று சொல்லும் போது, பெண்கள் சீ என வெறுக்க, குழந்தைகள் சீ
என்று அருவருக்க,
கனவு தனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடு காடு வா
எனா வீடு போ எனா வலது அழிய விரகு அழிய உரை குழறி
விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் மனிதர்கள்
பல பேச
... கனவில் தேர் வருவது போலவும் குதிரை வருவது போலவும்
காட்சிகள் தோன்ற, பெரிய சுடுகாடு வா என்று கூப்பிட, வீடு போ என்று
கூற, சாமர்த்தியம் அழிய, உற்சாகம் அழிய, பேச்சுத் தடுமாறி, கண்கள்
சொருகிப் போக, மேல் மூச்சு எழ உயிர் உடலை விட்டுக் கழியும் நாளில்
மனிதர்கள் பல பேச்சுக்கள் பேச,
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை
மாதராள் மோதி மேல் விழா
... இவர் இறந்த பின் நமது எல்லா
வளமும் அற்றதென்று சுற்றத்தார் எல்லாம் கதறி அழ, அறியாமை
கொண்ட மாதர்கள் தலையில் அடித்துக் கொண்டு மேலே விழ,
எனது உடைமை எனது அடிமை எனும் அறிவு சிறிதும் அற
ஈ மொலேல் எனா வாயை ஆ எனா
... என்னுடைய பொருள்,
என்னுடைய அடிமை ஆட்கள் என்கின்ற அறிவு சிறிதளவும் இல்லாமல
போக, ஈக்கள் மொலேல் என்று உடலை மொய்க்க, (உயிர் பிரிந்ததும்)
வாயை ஆ என்று திறந்து வைக்க,
இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம
தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே
...
ஒடுங்கின ஒலி செய்யும் பறை, சிறிய பறைகள், திமிலை என்ற ஒரு
வகையான பறையுடன் மேளவகை (இவை எல்லாம்) ஒலிக்க சுடு
காட்டுக்கே கொணரப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு, நெருப்பில்
இடப்படும் இத்தகைய வாழ்க்கையை
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும்
ஏசிடார்களோ பாச நாசனே
... (உனது) இரண்டு திருவடிகளைப்
போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதென்றால அவர்களை
உலகத்தார் இகழ மாட்டார்களா? பாச நாசம் செய்யும் பெருமாளே,
இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற ஏக
போகமாய் நீயு(ம்) நானுமாய் இறுகும் வகை பரம சுக மதனை
அருள்
... (ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு
வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய,
ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும்
வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக.
இடை மருதில் ஏக நாயகா லோக நாயகா இமையவர்
பெருமாளே.
... திருவிடை மருதூரில் வீற்றிருக்கும் தனி நாயகனே,
தேவர்கள் பெருமாளே.
Similar songs:

858 - அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்)

தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா ...... தனதன தனதான

Songs from this thalam திருவிடைமருதூர்

858 - அறுகுநுனி பனி

859 - இலகு குழைகிழிய

860 - படியை அளவிடு

861 - புழுகொடுபனி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song sequence no 858 thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D thiru name %E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF