ஈயெறும்பு நரி நாய்கணங் கழுகு
காகம் உண்ப வுடலே சுமந்து
இது ஏல்வதென்று மதமேமொழிந்து மத உம்பல்போலே
ஏதும் என்றனிட கோல் எனும்பரிவு மேவி நம்பி
இது போது மென்கசிலர்
ஏய்தனங்கள்தனி வாகு சிந்தை வசனங்கள்பேசி
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச
மங்கையர்களாட
வெண்கவரி சீற கொம்புகுழலூத
தண்டிகையில் அந்தமாக
சேர்கனம்பெரிய வாழ்வு கொண்டுழலும்
ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி
சிவ சேவை கண்டு
உனது பாத தொண்டனென அன்புதாராய்
சூதிருந்த விடர் மேயி ருண்டகிரி
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரியன்புரவி தேர்நடந்துநடு பங்கினோட
சோதி யந்தபிரமா புரந்தரனும்
ஆதி யந்தமுதல் தேவரும் தொழுது சூழ்
மன்றில்நட மாடும் எந்தைமுதல் அன்புகூர
வாது கொண்ட அவுணர் மாள
செங்கையயில் ஏவி
அண்டர்குடி யேற
விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர
நின்றுநடனங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்து
தினை காவல் கொண்டமுருகா
எணும்பெரிய வாலி கொண்டபுரமே யமர்ந்துவளர் தம்பிரானே.
ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, காகம் இவைகள் கடைசியில் உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை போலே எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி, சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, பொருட் செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள் பேசி, குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்கள் நடனமாட, வெண்சாமரங்கள் வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர, பல்லக்கில் அழகாக நான் வீற்றிருக்கும் பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும் ஆசையானது வெந்தழிய, உன்மீது ஆசை மிகுந்து, மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, உன் திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக. வஞ்சத் தொழில்களுக்கு இடமான மலைப்பிளவுகளைக் கொண்டு மிக இருண்ட மலையான கிரெளஞ்சகிரியும், அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ, சூரியனது குதிரைகள் பூட்டிய தேர் (சூரனது ஆட்சிக்கு முன்பு போல) சென்று நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட, ஒளி பொருந்திய அந்தப் பிரமனும், இந்திரனும், முதல் தேவரிலிருந்து கடைசித் தேவர்வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க, கனகசபையில் நடனமாடும் எந்தை, முழுமுதல் கடவுள், சிவபிரான் மகிழ்ந்து அன்புகூர்ந்து நிற்க, போருக்கு என்று வாதுசெய்து வந்த அசுரர்கள் மாண்டு அழிய, உனது செவ்விய கையில் உள்ள வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள் தம்நாட்டில் குடியேற, வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ, போர்க்களத்திலே நின்று நடனம் புரிந்தவனே, மணம் வீசும் குடம் போன்ற மார்புடைய, மான் சாயல் உள்ள, வள்ளியிடம் வந்து, தினைப்புனத்தைக் காவல் காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகனே, மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம் என்ற தலத்தில் வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே.
ஈயெறும்பு நரி நாய்கணங் கழுகு ... ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, காகம் உண்ப வுடலே சுமந்து ... காகம் இவைகள் கடைசியில் உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து, இது ஏல்வதென்று மதமேமொழிந்து மத உம்பல்போலே ... இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை போலே ஏதும் என்றனிட கோல் எனும்பரிவு மேவி நம்பி ... எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி, இது போது மென்கசிலர் ... சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, ஏய்தனங்கள்தனி வாகு சிந்தை வசனங்கள்பேசி ... பொருட் செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள் பேசி, சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச ... குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்களாட ... மங்கையர்கள் நடனமாட, வெண்கவரி சீற கொம்புகுழலூத ... வெண்சாமரங்கள் வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர, தண்டிகையில் அந்தமாக ... பல்லக்கில் அழகாக சேர்கனம்பெரிய வாழ்வு கொண்டுழலும் ... நான் வீற்றிருக்கும் பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி ... ஆசையானது வெந்தழிய, உன்மீது ஆசை மிகுந்து, சிவ சேவை கண்டு ... மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, உனது பாத தொண்டனென அன்புதாராய் ... உன் திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக. சூதிருந்த விடர் மேயி ருண்டகிரி ... வஞ்சத் தொழில்களுக்கு இடமான மலைப்பிளவுகளைக் கொண்டு மிக இருண்ட மலையான கிரெளஞ்சகிரியும், சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ ... அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ, சூரியன்புரவி தேர்நடந்துநடு பங்கினோட ... சூரியனது குதிரைகள் பூட்டிய தேர் (சூரனது ஆட்சிக்கு முன்பு போல) சென்று நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட, சோதி யந்தபிரமா புரந்தரனும் ... ஒளி பொருந்திய அந்தப் பிரமனும், இந்திரனும், ஆதி யந்தமுதல் தேவரும் தொழுது சூழ் ... முதல் தேவரிலிருந்து கடைசித் தேவர்வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க, மன்றில்நட மாடும் எந்தைமுதல் அன்புகூர ... கனகசபையில் நடனமாடும் எந்தை, முழுமுதல் கடவுள், சிவபிரான் மகிழ்ந்து அன்புகூர்ந்து நிற்க, வாது கொண்ட அவுணர் மாள ... போருக்கு என்று வாதுசெய்து வந்த அசுரர்கள் மாண்டு அழிய, செங்கையயில் ஏவி ... உனது செவ்விய கையில் உள்ள வேலாயுதத்தைச் செலுத்தி, அண்டர்குடி யேற ... தேவர்கள் தம்நாட்டில் குடியேற, விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர ... வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ, நின்றுநடனங்கொள்வோனே ... போர்க்களத்திலே நின்று நடனம் புரிந்தவனே, வாச கும்பதன மானை வந்து ... மணம் வீசும் குடம் போன்ற மார்புடைய, மான் சாயல் உள்ள, வள்ளியிடம் வந்து, தினை காவல் கொண்டமுருகா ... தினைப்புனத்தைக் காவல் காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகனே, எணும்பெரிய வாலி கொண்டபுரமே யமர்ந்துவளர் தம்பிரானே. ... மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம் என்ற தலத்தில் வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே.