தோடு(ம்) மென் குழை ஊடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர் சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார்
சூதகம் தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ் வினை சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே
ஆடு(ம்) வெம் பண காகோதம் அசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே
ஆரு(ம்) நின்று அருளாலே தாள் தொழ ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற ஆதி தந்தவ நாயேன் வாழ்வு உற அருள்வாயே
ஓடு(ம்) வெம் கதிரோடே சோமனும் ஊழி அண்டமும் லோகா லோகமும் ஊரும் அந்தர(ம்) நானா தேவரும் அடி பேண
ஊழிடு அம்புயன் வேலாவாலயம் படு தங்கிய மாலார் ஆதரவு ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா
வேடு கொண்டு(ள்)ள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் மேவு(ம்) திண் புன(ம்) மீதே மாதொடு மிக மாலாய்
மேக மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமு(ம்) நீயேயாம் என வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே.
தோடும் மெல்லிய குண்டலமும் அணிந்துள்ள காதில் போர் செய்யும் ஒளி பொருந்திய பெரிய கயல் மீனைப் போல் விளங்கி அரிய உயிரையும் கொள்ளை கொள்ளும் வேல் போல் பாய்வதான கண்களை உடைய விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த உள்ளத்தினிடத்தே மோகம் கொண்டவனாய் அவர்கள் பேசுகின்ற சொற்களின் உண்மை நிலையை அன்று உணராமல், தலை விதி சூழ்ச்சி செய்து தருகின்ற கொடிய துன்பத்தால் என் உயிர் சுழன்று சஞ்சலம் அடையாமல், ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பாகிய உணவைச் சுவைத்து உண்பதற்காக அதன் மேல் விழுகின்ற மயிலை வாகனமாகக் கொண்டு நிறைந்து விளங்கும் வளப்பம் கொண்ட குமரேசனே, பன்னிரு தோள்களை உடையவனே, யாரும் நின்று உன் திருவருளால் உன் திருவடிகளைத் தொழ (அவர்களுக்கு) மன வலிமையைக் தந்து அருளும் செல்வனே, இழிவான நிலை ஒழிவதற்கு, ஆதி நாயகனான சிவ பெருமான் தந்தருளிய பெருமானே, அடியேன் நல் வாழ்வு பெற அருள்வாயாக. தினமும் ஓடிக் கொண்டிருக்கும் கொடிய வெப்பமுடைய சூரியனுடன் சந்திரனும், ஊழிக் காலம் வரை அழியாத அண்டங்களும், பல உலகங்களும், அங்குள்ள ஊர்களும், விண்ணில் உள்ள பலவகையான தேவர்களும் உன் அடிகளைப் போற்றித் தொழ, அவரவர்க்கு விதியை விதிக்கின்ற பிரமனும், பாற்கடலில் தங்கியிருக்கின்ற திருமாலும் உனது அன்பும் உதவியையும் வேண்ட, வெண்ணிற அலை வீசும் கடலிடையை நின்ற சூரனுடைய மார்பை ஊடுருவிப் பிளக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேடனைப் போல் வேடம் கொண்டவனே, கொடுமை வாய்ந்த புலி போல இருந்த வேடர்கள் வாழ்கின்ற திண்ணிய (தினைப்) புனத்தில் இருந்த வள்ளி நாயகியிடம் மிகவும் காம மயக்கம் கொண்டவனாய், மேகம் போன்ற மெல்லிய கூந்தலை உடையவளே, நீ கேட்பாயாக. எனக்கு புகலிடம் நீயே ஆவாய் என்று கூறி அந்த மாதிடம் தருணம் பார்த்து காத்திருந்து காவல் செய்த தலைவனே, தேவர்கள் பெருமாளே.
தோடு(ம்) மென் குழை ஊடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர் சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார் ... தோடும் மெல்லிய குண்டலமும் அணிந்துள்ள காதில் போர் செய்யும் ஒளி பொருந்திய பெரிய கயல் மீனைப் போல் விளங்கி அரிய உயிரையும் கொள்ளை கொள்ளும் வேல் போல் பாய்வதான கண்களை உடைய விலைமாதர்களின் சூதகம் தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ் வினை சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே ... வஞ்சகம் நிறைந்த உள்ளத்தினிடத்தே மோகம் கொண்டவனாய் அவர்கள் பேசுகின்ற சொற்களின் உண்மை நிலையை அன்று உணராமல், தலை விதி சூழ்ச்சி செய்து தருகின்ற கொடிய துன்பத்தால் என் உயிர் சுழன்று சஞ்சலம் அடையாமல், ஆடு(ம்) வெம் பண காகோதம் அசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில் ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே ... ஆடும் கொடிய படத்தை உடைய பாம்பாகிய உணவைச் சுவைத்து உண்பதற்காக அதன் மேல் விழுகின்ற மயிலை வாகனமாகக் கொண்டு நிறைந்து விளங்கும் வளப்பம் கொண்ட குமரேசனே, பன்னிரு தோள்களை உடையவனே, ஆரு(ம்) நின்று அருளாலே தாள் தொழ ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற ஆதி தந்தவ நாயேன் வாழ்வு உற அருள்வாயே ... யாரும் நின்று உன் திருவருளால் உன் திருவடிகளைத் தொழ (அவர்களுக்கு) மன வலிமையைக் தந்து அருளும் செல்வனே, இழிவான நிலை ஒழிவதற்கு, ஆதி நாயகனான சிவ பெருமான் தந்தருளிய பெருமானே, அடியேன் நல் வாழ்வு பெற அருள்வாயாக. ஓடு(ம்) வெம் கதிரோடே சோமனும் ஊழி அண்டமும் லோகா லோகமும் ஊரும் அந்தர(ம்) நானா தேவரும் அடி பேண ... தினமும் ஓடிக் கொண்டிருக்கும் கொடிய வெப்பமுடைய சூரியனுடன் சந்திரனும், ஊழிக் காலம் வரை அழியாத அண்டங்களும், பல உலகங்களும், அங்குள்ள ஊர்களும், விண்ணில் உள்ள பலவகையான தேவர்களும் உன் அடிகளைப் போற்றித் தொழ, ஊழிடு அம்புயன் வேலாவாலயம் படு தங்கிய மாலார் ஆதரவு ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா ... அவரவர்க்கு விதியை விதிக்கின்ற பிரமனும், பாற்கடலில் தங்கியிருக்கின்ற திருமாலும் உனது அன்பும் உதவியையும் வேண்ட, வெண்ணிற அலை வீசும் கடலிடையை நின்ற சூரனுடைய மார்பை ஊடுருவிப் பிளக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்தியவனே, வேடு கொண்டு(ள்)ள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள் மேவு(ம்) திண் புன(ம்) மீதே மாதொடு மிக மாலாய் ... வேடனைப் போல் வேடம் கொண்டவனே, கொடுமை வாய்ந்த புலி போல இருந்த வேடர்கள் வாழ்கின்ற திண்ணிய (தினைப்) புனத்தில் இருந்த வள்ளி நாயகியிடம் மிகவும் காம மயக்கம் கொண்டவனாய், மேக மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமு(ம்) நீயேயாம் என வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே. ... மேகம் போன்ற மெல்லிய கூந்தலை உடையவளே, நீ கேட்பாயாக. எனக்கு புகலிடம் நீயே ஆவாய் என்று கூறி அந்த மாதிடம் தருணம் பார்த்து காத்திருந்து காவல் செய்த தலைவனே, தேவர்கள் பெருமாளே.